Views 424 

தீபபிரியாவின்… 

பயம்…. (சிறுகதை)

 வடபழனி முருகனை மனதாரத் தரிசித்து விட்டுக் கோவிலில் இருந்து வெளியே வந்தாள் சவுந்தர்யா….  தனது செருப்பைத் தேடி அணிந்தவள். ஆட்டோ பிடிப்பதற்குத் திரும்பினாள்… 

 அங்கே அவளது கண்ணில் பட்டான் அவன். இன்ஸ்பெக்டர் இந்திரன்…!!! காக்கி உடையில் காவல்துறை வாகனத்தின் மீது சாய்ந்து, தனது பக்கத்தில் நின்றிருந்த கான்ஸ்டபிளிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்..  

அவனைக் கடந்து செல்லும் மக்களோ, சற்றுப் பயம் கலந்த மரியாதையுடன், அவனிடம் வணக்கம் வைத்து விட்டு நகர்ந்து செல்ல, அதற்குத் தலையை மட்டும் லேசாக அசைத்து வைத்தான்… அவனது அந்தக் கம்பீரத் தோற்றம் ஏனோ வெகுவாக அவளை ஈர்த்தது..   

வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை மறந்து இந்திரனை ரசித்தபடி நின்று விட்டாள் சவுந்தர்யா…  

 இந்திரனிடம் பேசிக் கொண்டு இருந்த கான்ஸ்டபிள், “சார் அங்க பாருங்க” என்றபடி சவுந்தர்யாவைச் சுட்டிக் காட்ட, இந்திரனும் திரும்பிப் பார்த்தான்… 

அவனது கண்கள் அங்குத் தன்னைச் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த சவுந்தர்யாவைக் கேள்வியாக நோக்கியது… 

 ஊரே அவனைக் கண்டு நடுங்க, அவளோ தன்னையும் அறியாமல், அவனைப் பார்த்து அழகாகப் புன்னகை புரிந்தாள்..  

 அவளது ரசனையான பார்வையிலும், புன்னகையிலும்  அவனுக்குக் கோபம் வந்தாலும், ஏனோ அந்தக் கண்கள் அவனை ஈர்த்தது. அதில் தனது ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி, ‘என்ன’ என்பது போல் அவளைப்  பார்த்தான்…  

 இதைச் சற்றும் எதிர் பார்க்காததால், அவனின் அந்தச் செயலில், ஏகத்துக்கும் அதிர்ந்து தான் போனாள் சவுந்தர்யா… உடனே, அங்கு வந்த காலியான ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டவளது இதயம், அதிவேகமாகத் துடித்தது. 

 ஒருவழியாக வீடு வந்து சேர்ந்த சவுந்தர்யா, கணவன் வரும் நேரம் ஆதலால், அவனுக்கான சிற்றுண்டியை செய்து விட்டு அவன் வருகைக்காகக் காத்திருந்தாள்.

 சவுந்தர்யாவிற்கும் தேவாவிற்கும் திருமணம் முடிந்து ஒரு வாரம் தான் ஆகிறது… ஏனோ அவளுக்குக் கணவனின் மேல் அப்படி ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது… ‘அப்படி இருக்க, கோவில் வாசலில் நடந்த நிகழ்வைக் கணவனிடம்  எப்படிக் கூறுவது, அந்த நிகழ்வை அவன் எவ்வாறு எடுத்துக் கொள்வான். ச்ச நான் ஏன் அப்படி நடந்து கொண்டேன்…’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க.. 

அப்பொழுது காலிங் பெல் ஓசை கேட்டது. உடனே எழுந்து சென்று கை நடுங்க கதவைத் திறந்தாள்…  

 வெளியே நின்றிருந்த அவளது கணவன் தேவா, அவளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே உள்ளே வந்து சோபாவில் சென்று அமர்ந்தவன்,  ரொம்பவே அமைதியாக இருந்தான்… 

அவனைப் பின் தொடர்ந்த சவுந்தர்யா, “என்னங்க…..” என்று கணவனை மெதுவாக அழைத்தாள்…

அவளின் நடுங்கிய தோற்றம் அவனுக்குக் கடுப்பை கிளப்பியது. “எதுக்கு இப்ப என்னைப் பார்த்து  நடுங்குறே…? அப்படி என்ன தப்பு செஞ்ச…?” என்று சற்றுச் சத்தகமாகக் கேட்டான்..  

 “அது..அது வந்து…” என்று அவளுக்கு வார்த்தைகள் வராமல்  தந்தி அடிக்க…  இப்போதைக்கு அவள் பதில் கூற மாட்டாள் என்று புரிந்து கொண்ட தேவா, சட்டென்று எழுந்து அவளை இழுத்துத் தனது கைவளைவில் சிறை பிடித்தவன், 

“எதுக்குடி இப்படி பயப்படுறே? கோவில் வாசல்ல வச்சி என்னைப் பார்த்து நல்லா சைட் அடிச்சியே. இப்ப மட்டும் ஏண்டி வார்த்தை தந்தி அடிக்கிது…?” என்று தன் தலையால் மனைவியின் தலையில் முட்டியபடி சரசமாகக் கேட்டான், இன்ஸ்பெக்டர் இந்திரன் என்ற தேவேந்திரன்…!!! 

 அதில் தன் பயம் விலகி, கண்கள் விரிய அவள் தன் கணவனைப் பார்க்க,    அவனோ “நமக்குக் கல்யாணம் முடிஞ்சி ஒருவாரம் ஆகுது… என்னைப் பார்த்தாலோ, நான் உன் கிட்ட வந்தாலோ  அப்படி நடுங்குறே… ஏன்னு கேட்டா நீங்க போலீஸு… அதான் பயம்னு சொல்றே… அப்போ எதுக்கு என்னைக் கட்டிகிட்டேனு கேட்டா, அப்பா பார்த்த மாப்பிள்ளைனு சொன்னே… இன்னைக்கு என்னன்னா என்னை மெய் மறந்து பார்த்து சைட் அடிக்கிறே… உன்னை என்ன தான்டி பண்றது…?” என முறைத்தான் தேவேந்திரன்… 

 “அது வந்து… என்னமோ தெரியல. நீங்க எப்ப பார்த்தாலும் உர்ருன்னு இருப்பீங்களா, எனக்கு உங்க கிட்ட பேசவே பயமா இருக்கும். ஆனா  இன்னைக்குக் கோவிலில் உங்களுக்கு மக்கள் கொடுத்த பயம் கலந்த மரியாதையையும், உங்க ஆளுமையையும் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சுது. 

 ஊரே உங்களை பார்த்துப் பயப்படுது. அப்படி பட்ட  நீங்க என் கணவன் என்றதும், எனக்குப் பெருமையா இருந்தது… அதான் பயம் விலகி என்னை மறந்து ரசிச்சுப் பார்த்தேன்” என்றபடி அவனின் பரந்த மார்பில் வெட்கத்துடன் முகம் புதைத்தாள் சவுந்தர்யா… 


 ******