Views 426 

தனிமையின் துயரம்,
இத்தனை கொடியதா.!!!
தாய்மடி தேடி ஓடும் சிறு குழந்தை போல..
இயற்கை அன்னையின் மடி தேடி 
ஓடுகிறது என் கால்கள்.
!!!!பெட்டியில் துணிகளை எல்லாம் பார்த்து பார்த்து அடுக்கிக் கொண்டிருந்தாள் சியாமளா

“இது அம்மாக்கு, இது அப்பாக்கு, இது தம்பிக்கு, இது அவங்களுக்கு, இது இவங்களுக்கு என்று ஒவ்வொருத்தருக்கும் சந்தோஷமாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது “அம்மா அம்மா” என்று ஓடி வந்து தாய் சியாமளாவின் கழுத்தைக் கட்டிக்  கொண்டனர் அவளது இரு குழந்தைகளுமான, கிரண் மற்றும் சஞ்சய்..

“என்னடா தங்கங்களா!! உங்களுக்குக் தேவையானது எல்லாம் நீங்களே எடுத்து வச்சிட்டீங்களா?”

“ம்ம்ம் எடுத்து வச்சிட்டோம்மா” என்று ஒரே நேரத்தில் இருவரும் சொல்ல.. 

“சரி போய்த் தூங்குங்க. காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கணும்”

“சரிமா” என்ற இரு குழந்தைகளும்.. தாயின்  கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு, தங்களது அறைக்குச் செல்ல,   சியாமளா தன் கணவன் கண்ணனின் வருகைக்காகக் காத்திருந்தாள்…

ஐந்து வருடம்  கழித்து நாளை அவர்கள் தன் தாய் நாட்டிற்குக் கிளம்புகிறார்கள். அதான் அவ்வளவு சந்தோசம். ஆம், அவர்கள் வசிப்பது வெளிநாட்டில்.

சியாமளாவிற்குக்  கல்யாணத்திற்கு வரன் பார்க்கும் போது , கண்ணனின் ஜாதகம் பொருந்தி வர.. மாப்பிள்ளைக்கு, வேலை வெளிநாட்டில் என்றதும், அந்தக் குடும்பமே சந்தோசபட்டது, சியாமளாவைத் தவிர.அவள்  அதைத் தன் தாயிடம் சொல்ல….. இதை கேள்விப்பட்ட கண்ணனனோ  மறுநாளே வந்து நின்றான் சியாமளாவிடம் பேச வேண்டும் என்று சொல்லி…..

ஒரு காஃபி ஷாப்பில் இருவரும் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர்.

“ஏன் என்னைப் பிடிக்கலையா.. சிமி?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான் கண்ணன்.

அவன் அப்படிக் கூப்பிடவுடன், அவனைப் பார்த்து சியாமளா முழிக்க..

அவள் முழிப்பதைப் பார்த்தவன், “உனக்கு நான் வச்ச செல்ல பேர். இதுவும் பிடிக்கலையா?” என்று ஆழ்ந்தப் பார்வை பார்த்தவாறு கேட்டான்.

அவளோ மனதுக்குள் “நானே கல்யாணம் வேண்டாம் என்று  சொல்லிட்டு இருக்கேன். இதுல செல்லப் பேரு வேற, ஹய்யோ” என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டாள்.

அவளின் முகப் பாவனைகளைப்  பார்த்தவன் “ ஏன் என்னாச்சு? எதுக்குக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்ற ….நீ வேற யாரையாவது???” என்று  கண்ணன் முடிக்காமல் நிறுத்த…

அவன்  அப்படிக் கேட்கவும் அவனை முறைத்தவள், “ஹலோ, இங்க பாருங்க. ரொம்ப யோசிக்காதீங்க, எனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேண்டாம் என்று சொன்னேன். கல்யாணமே வேண்டாம் என்று சொல்லல.. புரியுதா…?

இங்க இருந்தா நினைச்ச நேரத்துல எங்க வீட்டுக்கு வரலாம். ஒரு ஆத்திர அவசரத்துக்கு உடனே வர முடியும். ஆனா வெளிநாட்டுல இருந்தா அப்படி வர முடியுமா?” என்று காரணத்தை விளக்க…

அவள் யாரையும் காதலிக்கவில்லை என்பதில் நிம்மதியுற்றவன்  “நீ சொல்றது எனக்குப் புரியுது சிமி…. .ஒரு மூணு வருஷம் தான். அதுக்கு அப்புறம், நாம இங்க இந்தியாவுக்கே, திரும்ப வந்திடலாம்.. எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு சிமி” என்று கண்ணோடு கண் நோக்கிச் சொல்ல…

ஏனோ கண்ணன் அப்படிக் கேட்டது பிடித்திருந்தது அவளுக்கு… ஆனாலும் மனதுக்குள் சிறு சுணக்கம்.. “எனக்கு யோசிக்கணும்” என்றாள்.

“நல்லா யோசி. நல்ல முடிவா சொல்லு. நான் காத்திருப்பேன்” என்றான் கண்ணன்…… இதிலே தெரிந்தது அவனுக்கு அவளை ரொம்பவும் பிடித்துவிட்டது  என்று.

சரி என்று தலையாட்டி விட்டு  வீட்டுக்கு வந்தாள் சியாமளா.

அங்குத் தன் தாயின் தோழிகள் வந்திருப்பதைக் கண்டவள்,  “வாங்க ஆன்ட்டி” என்றவள் தன் அறைக்குள் செல்ல அப்பொழுது,

“அடியே சாந்தா, நீ கொடுத்துவச்சவடி. உன் பொண்ணு அமெரிக்காவில் போய் வாழப் போறா” என்று சற்று பொறாமையுடன் சொல்ல.. 

”ஆமாடி சுலோ , எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா? யாராவது என்கிட்ட உன் பொண்ணை எங்க கட்டிக் கொடுத்துருக்கேன்னு கேட்டா, நானும் வெளிநாட்லன்னு பெருமையா சொல்லிக்கலாம் இல்ல” என்று பூரித்தாள் சியாமளாவின் அன்னை சாந்தா…

தாய் பேசியதை கேட்டதும் தான் நினைத்துப் பார்த்தாள் சியாமளா.  தன் தாயும் தந்தையும் சரி… ஏன் தன் தம்பிக்கூட, ஒருவித உற்சாகத்துடனே இருப்பதைக் கண்டவள்…… ‘அப்போ நான் இவர்களை விட்டுத் தூரமா போறது இவங்களுக்குக் கவலையில்ல. பொண்ணு வெளிநாட்டில் வாழப் போறான்னு  பெருமையா சொல்லிக்கனும் என்று நினைக்கிறாங்களா?’ என்று நினைத்தவள்…. ஒரு முடிவுடன் போனை எடுத்து அதில் கண்ணனின் நம்பரை அழுத்தி திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள்…

கல்யாணமும் விமர்சையாக நடந்தது… ஒரு வாரம் கழித்துத் தன் கணவனுடன் அயல்நாட்டிற்குப் புறப்பட்டாள்.. 

கண்ணனின் அன்பில் திளைத்ததற்குப்  பலனாக மூன்று மாதம் கழித்துச் சியாமளா கருவுற்றாள்…. கண்ணன் அவளைக் கண் இமை போலத் தாங்கினான்.. 

ஆனாலும் அவளுக்கு அந்த நேரத்தில் அவளது தாயின்மடி தேவைப்பட்டது..  உள்ளுக்குள் மறுகினாலும் , அதைத் தன் கணவனிடம் காட்டவில்லை.. ஏழாம் மாதம் வளைகாப்பு நடத்த வேண்டும் என்று அவள் மாமியார் சொன்னதும்  சந்தோஷமாகச் சம்மதித்தாள் சியாமளா.. தாய் நாட்டிற்குப் போகப் போகிறோம் என்ற ஆவலில்…. ஆனால் அது சிறிது நேரம் தான்..

எல்லோரும் இங்கு வருவதாகச் சொல்லி விட்டனர்..  மீண்டும் உள்ளுக்குள்ளே மறுகினாள்.. ஏழாம் மாதம் வளைகாப்பும் விமர்சையாக நடத்தினான் கண்ணன்.. 

தன் தாயிடம் சியாமளா “அம்மா  பிரசவம் வரை இங்கே இருமா” என்று கேட்டாள்.. அவளுக்குத் தாயின் மடியில் படுக்கணும், தாயின் கையால் சமைத்து வாய்க்கு ருசியா சாப்பிட வேண்டும் போல் இருக்க, தாயை இங்குத் தங்கச் சொன்னாள்.

“இல்லடாமா, அப்பா தம்பி பாவம் இல்லையாடா? நான் இல்லாம சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க? எவ்வளவு நாள்தான் ஹோட்டல்ல சாப்பிட முடியும்?” என்று சொல்ல…

“ம்ம்ம் சரி மா, நீ கிளம்பு” என்று மட்டும் சொன்னாள்.. 

மாமியாரோ ஒரு படி மேல், “இங்க பாரு சியாமளா, இப்போ தான் உனக்கு மசக்கை குறைஞ்சிட்டே. இனி கண்ணனை பக்கத்துலே இருங்கன்னு 

அவனைத் தொந்தரவு பண்ணாதே. அவன் ஒழுங்கா வேலை பார்த்தா தான், கல்யாணத்துக்கு வாங்கின கடனை அடைக்க முடியும்.. கார்த்திகாக்கும் கொஞ்சம் நகை நட்டு சேர்க்க முடியும்” என்று சொல்ல.. அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை அவள்.

கணவனிடம் கேட்டால் கண்டிப்பாக. இந்தியா அனுப்பி வைப்பான் தான்.  ஆனால், “எங்க அம்மா கூடத் தான் இருக்கனும்…” என்று ஒரு கண்டிஷன் சொல்லுவான்.  அதற்கு, தான் இங்கிருப்பதே மேல் என்று தோன்றும்…

பிரசவ நாள் நெருங்கியது.
கண்ணனிடம் மெதுவாக, “இந்தியா போகலாமா…? எனக்கு எல்லாரையும் பார்க்கனும் போல் ஆசையா இருக்கு” என்று அவள் ஏக்கத்துடன் கேட்க…

“இல்லடா இப்ப முடியாது. இயர் எண்டிங் வேற… லீவு கிடைக்காது. அதான் உன் அம்மாவும், என் அம்மாவும் வராங்களே” என்று முடித்து விட்டான்..

பிரசவ நேரத்தில் தாய்க்கு விசா பிராப்ளம்.. மாமியார்க்கு மூட்டு வலியாம்.. கடைசி நேரத்தில் இருவருமே வர முடியவில்லை..

ஒருவாரம் கழித்து… சியாமளா அழகான ஒரு பெண் குழந்தைக்குத் தாயானாள். தன் மகளுக்குக் கிரண் என்று பெயர் சூட்டினாள்.  அந்த மழலையின் முகம் பார்த்துத் தன் மனச் சுணக்கத்தையெல்லாம் மறந்தாள். தன் மகள்தான் தனக்கு உலகம் என நினைத்தாள். கண்ணன் கூடக் கிண்டல் செய்வான் “இப்பொழுது எல்லாம் என்னை நீ கண்டுக்கவே மாட்டேன்கிறே சிமி” என்று..

“இவரைக் கண்டுக்காமதான் அடுத்து உடனே என் வயிற்றில் வளருதாக்கும்” என்று சிரித்துக்  கொள்வாள்.. 

ஆம், மகள் கிரண் பிறந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. மீண்டும் கருவுற்றிருக்கிறாள். ஆனால் அப்பொழுது இருந்த ஏக்கம் இப்போழுது இல்லை.. 

ஏன் போனில் மாமியாரின் குத்தல் பேச்சுக் கூடக் கண்டுக்கவே மாட்டாள்…  இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுவாள்.. 

அதன் பிறகு மகன் சஞ்சய் பிறந்தான். இரு குழந்தைகளும் அவளுக்கு உலகம் என்று ஆனார்கள்.. 

இடையில் ஒரு தடவை ‘இந்தியாக்கு போயிட்டு வரியா? ‘என்று கண்ணன் கேட்க.

“இல்ல நீங்க சொன்னீங்கல்ல.  இன்னும் கொஞ்ச நாள் தானே, அதுக்கு அப்புறம் நாம இந்தியாக்கு நிரந்தரமா போய்டலாம்ன்னு.  அப்பவே போகலாம்” என்க…

“சரிடா…”  என்றவன் வேறு ஏதும் சொல்லவில்லை…… மூன்று வருடம் என்று சொன்னவன்… வேலைப் பளுவினால் ஐந்து வருடமாக மாறிப் போனது….. இவளோ தன் மனதை மறைத்துத் தன் கணவனுக்காகப் பொறுத்துக் கொண்டாள்…

பக்கத்து வீட்டு ஆஷா கூடச் சிரித்தாள். “போ சியாமி, நீதான் இந்தியா போகணும்ன்னா இப்படிச் சந்தோசப்படுற. ஆனா எனக்கெல்லாம் அப்படி இல்லபா. இங்க இருக்கத் தான் பிடிச்சிருக்கு,…”

“ஒவ்வொருதற்கும் ஒவ்வொரு விதமான பிடித்தம் ஆஷா.  உனக்கு இங்க பிடிச்சிருக்கு.. எனக்குத் தாய் நாடு தான் பிடிச்சிருக்கு.. இப்போ என் குழந்தைகளை எடுத்துக்கோ.. அவங்களுக்குத் தாத்தா, பாட்டி, மாமா, அத்தைன்னு எல்லோரையும் தெரியும். போட்டோவிலும், ஸ்கைப்லயும் தான் பார்க்கிறாங்க, பேசுறாங்க. இத நான் விரும்பல. அவங்க அந்த உறவுகளை மனசால உணரனும்ன்னுதான் நான் நினைக்கிறேன்..”

“என்னமோ போ… நீயும் உன் சென்ட்டிமென்ட்டும்…. சரி சரி இந்தியா போயிட்டு எப்போ இங்க ரிட்டன்?”

“இல்ல ஆஷா… அவர் சொன்ன மாதிரி ஐந்து வருடம் முடிஞ்சிட்டு இந்தியாவில் போய் எதாவது பிஸ்னெஸ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னாங்க”

“ சோ, உன்னோட சுயநலத்துக்காக, அவரை இங்க இருந்து கூட்டிட்டுப் போற சியாமி நீ”  என்று சொல்லி விட்டு ஆஷா சென்று விட்டாள்..

“என்னோட சுயநலத்துக்காகவா???” என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, குழந்தைகள் சியாமளாவைக் கூப்பிட, அவர்களின் மேல் கவனம் சென்றது..

இதோ நாளை கிளம்புகிறார்கள்.. அதான் அவ்வளவு சந்தோசம்,  வேலையில் இருந்து கண்ணன் வந்தான்… அவன் முகமோ குழப்பத்தில்.. அதைக் கவனித்தவள் “என்னாச்சிப்பா  ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று கனிவுடன் கேட்க…

அவள் கன்னத்தைத் தட்டியவன் “ஒன்னும் இல்லடா. நீ சாப்பிட்டியா? குழந்தைங்க தூங்கிட்டாங்களா? எல்லாம் பேக் பண்ணிட்டியா, சிமி?” என்று அவள் கவனத்தைத் திருப்பினான்.. 

“ம்ம்ம் ஆச்சுங்க. எல்லாம் எடுத்து வச்சிட்டேன். அவ்வளவா ஒன்னும் இல்ல.. நம்ம திங்க்ஸ், பசங்க திங்க்ஸ், கிட்சன் திங்க்ஸ் , அது தவிர, மத்த திங்க்ஸ் எல்லாம் இங்க இருந்தது தானே?”

“சரி டா நீ தூங்கு” என்ற கண்ணன் படுத்து விட..  சியாமளாவும் படுத்து விட்டாள்.. அவள் முகத்தில் தாய் நாட்டிற்குச் செல்கிறோம் என்ற சந்தோசம்… ஆனால்  அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணனோ யோசனையில்..

விமானத்தில் அமர்ந்திருந்த சியாமளாவின் மனது இப்பொழுது லேசானது போல் இருந்தது.. 

சென்னை விமான நிலையம்..
 
விமானம் தரையிறங்கியது.. செக்கிங் எல்லாம் முடித்து வெளியே வந்தார்கள். அங்கு ஒரு பக்கம்  கண்ணன் குடும்பத்தினர்….. மறு பக்கம் சியாமளா குடும்பத்தினர்.. 

கண்ணன் தன் குடும்பத்தை நோக்கிச் செல்ல, சியாமளாவும்  தன் தாயைப் பார்த்துக் கொண்டே, கண்ணனின் பின்னால் சென்றாள்..

அங்குக் கண்ணனின் தாய் மகனையும், பேரக் குழந்தைகளையும்  நலம் விசாரித்தவர், சியாமளாவை ஒரு பொருட்டாகக் கூட நினைக்கவில்லை.. 

அவள் மாமியாரைப் பற்றித் தெரியும். ஆதலால், அதைக் கண்டு கொள்ளாமல்.. சியாமளா கண்ணனிடம்  “நான் அம்மாவைப் பார்த்துட்டு வரேன்” என்று சொல்லி விட்டு , அவன் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட..

கண்ணனின் தாயாரோ, “என்னடா உன் பொண்டாட்டி, என் கிட்ட ஒரு வார்த்தை கூடப் பேசாம போறா?”

“விடுங்கம்மா, ரொம்ப வருஷம் கழிச்சி பார்க்கிறா இல்ல. பேசிட்டு வரட்டும்” என்று முடித்து விட்டான்.

நலம் விசாரிப்புகள் முடிந்து, எல்லோரும் கிளம்பினார்கள். சியாமளாவின் தாயாரோ, “எப்போ வீட்டுக்கு வருவீங்க மாப்பிள்ளை?” என்று ஆர்வத்துடன் கேட்க…

“அடுத்த வாரம் வரோம் அத்தை” என்றான்.

“சரி மாப்பிள்ளை” என்று அவரும் பதில் பேசாமல் முடித்துக் கொண்டார்…

சியாமளா இந்தியா வந்து இரண்டு மாதம் ஆனது…. அவள்   மிகவும் சந்தோசமாக உணர்ந்தாள். தாய் வீடு சென்று வந்தாள். தன் தோழிகளைச் சந்தித்தாள். நிறையக் கோவில்களுக்குச் சென்று வந்தாள்.. இப்படியே ஒரு ஆறு மாதம் கடந்த நிலையில்.. 

கண்ணன் அவளிடம்,  “நாம் இன்னும் ஒரு வாரத்தில் யு எஸ் கிளம்ப வேண்டும் சிமி…”  என்றான் 

“என்ன யு எஸ்க்கா? ஏன் அங்குத் தான் வேலையை விட்டாச்சே?” என்று கேட்டாள் புரியாமல்…

“இல்ல சிமி..வேலையை  விடல.. லாங் லீவ் தான் எழுதி குடுத்தேன்” என்று கண்ணன் கூறவும்…

“புரியலை..” என்றாள் சியாமளா.

“இல்ல சிமி.. உன்கிட்ட சொன்ன மாதிரி, ஐந்து வருஷத்தில் இங்க வந்திடலாம்ன்னு தான் நினைச்சேன்.. ஆனா, என்னை ரிலீவ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. உங்களுக்குத் திறமை இருக்கு.. லாங் லீவ் வேன்னா எடுத்துக்கோங்கன்னு சொன்னாங்கடா..  நாம இங்க கிளம்புறதுக்கு ஒரு நாள் முன்னாடி தான் சொன்னாங்க.. உன்கிட்ட எப்படிச் சொல்றதுன்னு நினைச்சிட்டு வந்தேன்.. ஆனா உன் முகத்துல பார்த்த சந்தோஷத்தைக் கெடுக்க விரும்பல… அதனால் தான் உன்கிட்ட அப்ப சொல்லலடா” என்றவன்

“இங்க வந்து தான் ஆறு மாசம் ஆச்சே? எல்லோரையும் பார்த்தாச்சு.. எல்லா இடத்துக்கும் போய் வந்தாச்சு… இனி முடிவு உன் கையில்” என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

சியாமளா  அப்படியே கட்டிலில் அமர்ந்தாள்..   அவளை யோசிக்க விடாமல், மாமியாரின் குரல் அழைக்க….. அறையை விட்டு வெளியே வந்தாள்..

அங்குத் தன் தாய் வந்திருப்பதைக் கண்டவள்  “அம்மா எப்போ வந்தீங்க? அப்பா வரலையாe” 

“இல்ல சியாமா, நான் மட்டும் தான் வந்தேன்.. உன்னையும் பசங்களையும் பார்க்கணும் போல் இருந்ததா… அதான் பார்த்துட்டுப் போலாம்ன்னு வந்தேன்டா”

இதைத்தான் சியாமளா விரும்பினாள்.  நினைத்த நேரத்திற்குத் தாயைப் பார்க்கலாம், தானும் தாய் வீட்டுற்குச் செல்லலாம். சொந்த பந்தம் எல்லாம் இங்கிருக்க,  அங்குச் சென்றால் தனிமையில் வாடணும்” என்று நினைத்தவள் கண்ணனிடம் பேச முடிவு செய்தாள். இங்கேயே இருந்து பிஸ்னெஸ் பண்ணலாம் என்று சொல்ல வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டாள்..

அன்று இரவு ஒரு கல்யாண ரிசப்ஷன். கண்ணனின் தந்தை வழி சொந்தம் என்பதால் எல்லோரும் சென்றனர். ரிசப்ஷன் நல்ல படியாக முடிய கண்ணன் குடும்பம் கிளம்பும் போழுது, ஒரு பெண்மணி கண்ணனின் தாயாரை ரொம்ப நாள் கழித்துப் பார்த்ததும் அவரை விட மனம் இல்லாமல் பேசிக் கொண்டே இருந்தார், 

குழந்தைகள் வேறு அழ ஆரம்பித்து விட்டனர். சியாமளா மெதுவாக.. “அத்தை கிளம்பலாமா? குழந்தைங்க தூக்கத்துக்கு அழறாங்க”  என்று சொல்ல..

அது அவளது மாமியாரின் தோழியின் காதில் விழ… “ஏன் ரமா? உன் மருமகளுக்கு இங்கிதமே தெரியாதா? நம்ம பேசிட்டு இருக்கோம், வாங்கன்னு கூப்பிடுறா. எல்லாம் நீ கொடுக்குற இடம். அதுவும் இல்லாம வெளிநாட்டுல இருக்கோம்கிற திமிரு”  என்று சொல்ல..

அதற்குச் சியாமளாவின் மாமியார் என்ன சொல்லுவார் என்று தெரியும் அவளுக்கு. இங்கு வந்த இந்த ஆறு மாதத்தில் அதைத் தானே சொல்லிக் காட்டுகிறார்.

“வெளிநாட்டுல இருந்த மாதிரி இங்க சொகுசா இருக்க முடியுமா?” என்று அடிக்கடி எல்லா விஷயத்திலும் குத்திக் காட்டுவார். ஆனால் இது பழகிப் போன விஷயம். ஆதலால் கண்டு  கொள்ள மாட்டாள்.. .மீறிப் பேசினால் வீடே இரண்டாகி விடும் அவரால்…. அதனால் எதற்கு வம்பு என்று வாயை மூடிக் கொள்வாள்…..

ஆனால் அடுத்த வீட்டுப் பெண்மணி சொல்வதைப் பொறுக்க முடியவில்லை அவளால்… அதனால் இத்தனை நாளாகத் தன் மனதில் அடக்கி வைத்திருந்த ஆதங்கத்தை எல்லாம் இடம் பொருள் பாராது வெடித்து விட்டாள்….

“ஒரு நிமிஷம், எனக்குப் புரியலை… வெளிநாட்டில் இருக்கிறா… வெளிநாட்டுல இருக்கிறான்னு சொல்றீங்களே…. உங்களுக்கு என்ன தெரியும் அங்க நான் படுற கஷ்டம்?… அம்மா அப்பா.. சொந்தம் பந்தம் எல்லாரையும் விட்டுட்டு தனிமையில வாடினது உங்களுக்குத் தெரியுமா..?

பிரசவ காலத்தில அம்மாவைப் பார்க்கணும், அவங்க மடியில் தலை வச்சு படுக்கனும், அவங்க கையால சாப்பிடனும் என்று எவ்வளவு ஏக்கம்  இருந்தது தெரியுமா…? அதையும் சூழ்நிலை கருதி பொறுத்துக்கிட்டேன்…. பிரசவ வலியில நான் துடிச்சி பயந்து கத்தினப்ப…..என்  கணவனைத் தவிர யார் இருந்தா என் பக்கத்துல…? ஆனா அந்த நேரத்தில… என்னைச் சுமந்த என் தாயோட வலியை நினைச்சுப் பொறுத்துக்கிட்டேன்..

அப்புறம் என் குழந்தைகள் தான் என் உலகம்ன்னு ஆனாங்க…… இருந்தாலும் மனசால தனிமையா உணர்ந்தேன்… கணவர் கூட இருந்தாலும் அவருக்கு இருந்த ஆஃபிஸ் டென்ஷன்ல என் கூட டைம் ஸ்பென்ட் முடியல….. அதை நான் குத்தம்ன்னு சொல்லல…. அவர் வேலை அப்படின்னு புரிஞ்சிகிட்டேன்………

எத்தனை நாள் நான்  எல்லாரையும் பார்க்கணும்ன்னு நினைச்சு அழுதுருக்கேன் தெரியுமா…?   பொண்ணுங்களுக்குக் கல்யாணம் ஆகிட்டா… பெத்தவங்களைப் பிரிஞ்சி புது உறவுகளோடு சேரும் போது ஒரு பயம் வரும்…. அதைப் போக்கி நாங்க இருக்கோம்ன்னு சப்போர்ட் பன்னாம….. தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொல்றதையே வேலையா வச்சிருக்கீங்க நீங்க எல்லாம்……..

பேசாம இருந்தா.. .ஊமைகோட்டான்னு சொல்றீங்க… பேசினா வாயாடின்னு சொல்றீங்க…. நாங்க என்னதான் பன்றது…? நாங்க புகுந்த வீடு வரும் போது பெத்தவங்கங்கள மறந்துட்டு வந்திடணும்…… ஆனா இங்க எங்களை என்னமோ எதிரியாவே பார்க்கிறது… .என்னவோ நாங்க வந்து தான் அவங்க பிள்ளைகளைப் பிரிக்கிற மாதிரி…… அப்படி நினைக்கிறவங்க எதுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கனும்…? மகனா அவங்களோடவே வச்சிக்க வேண்டியது தானே…?

ஒரு ஆண் திருமணம்ஆன பிறகு… மகன் மட்டும்  இல்ல ஒரு பொண்ணுக்கு புருஷன்….. அவனுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்கு அப்பா…. ஆனா அந்த ரெண்டு ரோலையும் செய்ய விடாம பன்றது எந்த விதத்தில் நியாயம்…? மீறி கேட்டா எங்க மேல குத்தம் சொல்ல வேண்டியது…….

பொறந்த வீடும் நிலையில்லாம… புகுந்த வீட்டிலும் நிம்மதி இல்லாம…. மன உளச்சலுக்கு ஆளாகி.. .யாரிடமும் பகிர்ந்துக்க முடியாம…. புருஷன் கிட்ட சொன்னா தப்பாயிடுமோன்னு பயந்து நாங்க வாழற வாழ்க்கை உங்களுக்குச் சொர்க்கமா தெரியுதா…?” என்று தன் மனதில் உள்ளைதையெல்லாம் கொட்டியவள்… தன் மாமியாரையும்… அவர் தோழியையும் ஒரு பார்வை பார்த்து விட்டுத் திரும்ப அங்குத் தன் கணவன் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிர்ந்தாள்……

அவன் கண்ணில் கண்ட வேதனையைப் பார்த்தவள் செய்வதறியாது  சூழ்நிலை கருதி விலகிச் சென்று தன் குழந்தைகளைக் கவனித்தாள்…

வீட்டிற்கு வந்தவுடன் கண்ணனின் தாய் பொரியத் தொடங்கி  விட்டார் “டேய், உன் பொண்டாட்டி அங்க வச்சி என்னை அந்தப் பேச்சு பேசுறா. நீ அதை வேடிக்கை பார்த்துட்டு நிக்கிற…? லலிதா என்னைப் பத்தி என்ன நினைப்பா?” என்று மகனிடம் சொன்னாலும், பார்வை என்னவோ சியாமளாவிடம் தான் இருந்தது..

சியாமளாவின் பார்வையோ தன் கணவனிடம் இருந்தது. அவள் மனதோ படபடவென்று அடித்துக் கொண்டது… தான் பேசியதற்குத் திட்டுவானோ இல்லை  கோபப்படுவானா…? என்று சிறிது நேரம் அவனையே பார்த்தவள்.. .அவன் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியாது தன் அறைக்குள் சென்று விட்டாள்..

தன் அன்னையைச் சமாதானப்படுத்தி விட்டு, அறைக்குள் வந்த கண்ணன் அங்குக் கட்டிலில் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்க, பக்கத்தில் அவர்களையே பார்த்தபடி அமர்ந்திருந்த மனைவியின் தோற்றம் கண்டு, அவள் அருகில் சென்று அமர்ந்தவன் அவளின் தோளில் கை வைக்க… 

அவளோ அவனைக் கலக்கத்தோடும் பயத்தோடும் பார்க்க….. அவளின் பார்வையில் அவனின் மனம் வலித்தது…

திடீரென்று  அவளைத் தன்மடி சாய்த்தவன்,  அவள் தலையைக் கோதிக் கொண்டே   “சிமி… சாரிடா, நான் வேலை வேலைன்னு இருந்ததில உன்னை, உன் மனசை சரியா புரிஞ்சிக்கலடா. உனக்குள் இவ்வளவு வருத்தம் இருக்கும்ன்னு நான் நினைச்சுக் கூட பார்க்கல.. நான் தான் புரிஞ்சிக்கல.. நீயாவது சொல்லியிருக்கலாமே சிமி..? உன் மனசுல இருக்கிறத என்கிட்ட பகிர்ந்திருக்கலாமே..? எனக்கு எங்க அம்மாவைப் பத்தி நல்லா தெரியும்… அவங்கள எதிர்த்துப் பேசினா நிலைமை இன்னும் மோசமாகும்ன்னு நினைச்சு தான் நான் சைலன்ட்டா போயிடுவேன்…..

அதுனால உன் மனசு எந்த அளவுல பாதிக்கபட்டுருக்குன்னு  இப்பத் தான் புரியுது…. தப்பு தான்.. .நான் செஞ்சது…. ரெண்டு சைடும் பேலன்ஸ் பண்ணியிருக்கனும்…. நான் நழுவறதுவலயே இருந்துட்டேன்… ஏன்  இப்போ கூட மறுபடியும், உன் கிட்ட கேட்காம, யு எஸ் போறதுக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டேன்” என்று பேசிக் கொண்டே போனவன், 

“போதும் சிமி… வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம் என்று இருந்த உண்னைக் கல்யாணம் பண்ணி உன் மனசைப் புரிஞ்சிக்காம தவிக்க விட்டுட்டேன்.. .இனியும் அந்தத் தப்பைச் செய்ய மாட்டேன்…. நாம மறுபடியும் யூ.எஸ்  போக வேண்டாம். இங்கேயே இருக்கலாம் சரியா “ என்றபடி அவள் முகத்தைப் பார்க்க 

தன்னை உணர்ந்து  பேசும் தன் கணவனையே பார்த்தவளின்  கண்கள் கலங்கி இருக்க… தன் கணவனையே இமைக்காமல்  பார்த்தவள்……

“நீங்க  எதுக்கு ஃபீல் பண்றீங்க…? நானும் தானே உங்கள விரும்பி கல்யாணம் பண்ணிகிட்டேன்…. யூ.எஸ் வந்த புதுசுல ரொம்பக் கஷ்டமா இருந்தது என்னவோ உண்மை தான்…. ஆனா உங்க அன்பு அதைக் கொஞ்சம் குறைச்சிடுச்சு…… பிரசவ நேரத்தில் நீங்க என்ன தான் என்னைத் தங்கத்தட்டில் வச்சுத் தாங்கினாலும் என் மனசு என்னவோ என்னைப் பெத்தவளைத் தேடினதும் உண்மை தான்…. ஆனா அதுவும்… நீங்க நான் வலியால துடிச்ச போது…. .கண்கலங்கி என்னை ஒரு தடவை அணைச்சீங்க இல்ல…. அப்பவே என் அம்மா என் பக்கத்தில் இருந்தா மாதிரி ஒரு ஆறுதல் கிடைச்சுது……

நான் பிடிவாதமா இந்தியா போயே ஆகனும் என்று நின்றிருந்தா  நீங்களும் சம்மதிச்சிருப்பீங்க. ஆனா உங்களுக்கு இந்த வேலை எந்தளவு முக்கியம்ன்னு  எனக்குத் தெரியும்பா… அதனால் தான் நீங்க நேரம் காலம் பார்க்காம வேலை பார்த்து டையர்டா  வீட்டுக்கு வரும் போது… என் கஷ்டத்தைச் சொல்லி உங்களை வருத்தப்பட வைக்க முடியல…..

நீங்க   எங்களுக்காகத் தானே உழைக்கிறீங்க… எங்களுக்கு என்ன குறை வச்சீங்க நீங்க…? அப்படியிருக்கும் போது  எப்படி நான் உங்களைக் கஷ்டப்படுத்துவேன்…? எதோ ஒரு ஆதங்கத்துல அப்படிப் படபடன்னு பேசிட்டேன்… ஆனா இப்ப நினைச்சு பார்க்கும் போது….. ஒரு பொண்ணுக்குக் கல்யாணம்ன்னு ஒன்னு ஆயிட்டா… புகுந்த வீடு தான் நிரந்தரம்ன்னு…. ஆனா இந்தப் பாழா போன மனசு சாகிற வரை தன் அப்பா அம்மாவை மறக்காதே…என்ன பண்ண முடியும்…? அது நாங்க வாங்கிட்டு வந்த வரம் அப்படி……

சரி நமக்குத் தான் சொந்தபந்தங்கள் அருகாமை கிடைக்கல… நம்ம பசங்களுக்குத் தேவை என்று தான்  இங்க நிரந்தரமா வர ஆசைப்பட்டேன்…..

சில வீடுகளில் அப்படியே உல்டாவா நடக்குது…. பெத்தவங்க பிள்ளையின் எதிர்காலம் வெளிநாட்டில தான் நினைச்சு அனுப்பி வைக்கிறாங்க… ஆனா அங்க இருக்கிற சூழ்நிலை பிடிச்சுப் போய்த் தன் தாய்நாட்டையே மறந்திடுறாங்க… இங்க பெத்தவங்க பிள்ளை எப்போ வருமோன்னு தேவுடு காத்துட்டு இருக்காங்க…..

ஆனா இங்க பணத்துக்குக் கொடுக்கிற மரியாதைய பாசத்துக்குக் கொடுக்க மாட்டேங்கிறாங்க…. சொந்தங்களோட அருமை தெரியாத இடத்தில் என் பசங்கள வளர்க்க விரும்பல…. நாம மறுபடியும் யூஸ்க்கே போகலாம்” என்று அவள் முடித்து விட…

தன் மனைவியின் மனத்துயரத்தினை அறிந்தவன்…. தன்னால் முடிந்த மட்டும் அவளைத் தனிமையில் விடாமல்  பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மனதினில் உறுதி எடுத்தவன்… அவளின் நெற்றில் இதழ் பதித்து விட்டு

“சரிடா நீ தூங்கு.. நான் நம்ம  யூ.எஸ் போறதுக்குண்டான வேலையைப் பார்க்கிறேன்” என்றவன் அவளைக் கட்டிலில்  கிடத்தி விட்டு தானும் படுத்து கண் மூடினான்.

ஒரு வாரம் கழித்து விமானநிலையத்தில், 

தன் தாய் தந்தையிடத்தில் கண்ணீருடன் விடைபெற்ற சியாமளாவின் மனதிலோ… தன் கணவன் தன் மனதை அறிந்து கொண்டான் என்ற சந்தோஷம் இருந்தாலும்… இனியேனும் தனிமையில் விட மாட்டான், தன்னைத் தாய்மடி தாங்குவான் என்ற நம்பிக்கையில் கணவனின் கைக் கோர்த்துப் அயல் நாட்டுக்கு புறப்பட்டாள்…  


Leave a Reply

Your email address will not be published.