Views 819 

தேவதை  9…

அங்கே நடுநாயகமாக அமர்ந்திருந்தது, வேறு யாரும் அல்ல அகத்தியன் தான்..!!

‘இவன்… இவன் எங்கே இங்கே..? ஒருவேளை இவனும் இங்க தான் வேலை பார்க்கிறானோ..?’ என்று எண்ணியவளுக்கு, அவன் நடுநாயகமாக அமர்ந்திருப்பதைப் பார்த்து, “ஒருவேளை இவன்தான் இந்தக் கம்பெனியின் முதலாளியா…?” என்ற கேள்வி எழுந்தாலும், அவன் அங்கு இருப்பது நிஜமாகவே அவள் மனதில் தெம்பூட்டியது. அவனது ஒரு ஆதரவான சின்னச் சிரிப்பு போதும்..!! தைரியமாக இந்த நேர்முகத் தேர்வை எதிர்கொள்வாள்.  எனவே அவனையே விழியெடுக்காமல் பார்த்தாள் ஆத்மிகா. 

அவனும், அவள் உள்ளே வந்ததில் இருந்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் மனதில் நினைத்தது அவனுக்குப் புரிந்ததோ என்னவோ..? தன் கண்களை மூடி, ‘நான் இருக்கிறேன், பயப்படாதே..!!’ என்பது போல் அவளுக்குத் தைரியம் சொன்னான். அவனது அந்த ஒற்றைச் செயல் அவளுக்குப் புத்துணர்வைக் கொடுத்தது.  

“உக்காருமா…” என்று அகத்தியனின் அருகே அமர்ந்திருந்த பெண்மணி, அவளின் கவனத்தைக் கலைத்து அமர சொன்னார்.  அவர்களுக்கு எதிரே இருந்த இருக்கையின் நுனியில் அமர்ந்தாள் ஆத்மிகா.

“உன் பேர் என்னம்மா…?” என்று அந்தப் பெண்மணி கேட்க, 

அவளோ, “ஆத்மிகா…” என்றாள்.  

“ஆத்மிகா..!! அழகான பெயர்…” என்ற அந்தப் பெண்மனி சில கேள்விகளை அவளிடம் கேட்டார். அந்தப் பெண்மணியைத் தொடர்ந்து அடுத்து அங்கிருந்த மற்றவர்களும் அவளிடம் கேள்வி கேட்க, அதற்கெல்லாம் தயங்காமல் பதில் அளித்தாள். ஆனால், அகத்தியன் மட்டும், தன் கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு அமைதியாக அவளையே அமர்ந்திருந்தான்.

ஆத்மிகாவிடம் கேள்வி கேட்டு முடித்த அந்தப் பெண்மணி அகத்தியனிடம் ஏதோ சொல்ல, இவ்வளவு நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவன், தன் கைகளை அவளை நோக்கி நீட்டி, “உங்க பைல் குடுங்க” என்று தன் திருவாய் மலர்ந்தான். 

அவன் தன் கையில் இருந்த பைலை கேட்டதும் தான், இவ்வளவு நேரம் உறைக்காத நிதர்சனம், பொட்டில் அறைந்தது போல் அவளுக்கு உறைத்தது. ‘அயோ… இதை எப்படி மறந்தேன்..? இதை, இந்த பைலை பார்த்தால் என்னைப் பற்றிய உண்மை அவனுக்குத் தெரிய வந்து விடுமே..? நான் யாரென்று தெரிந்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பான்..?  “ச்சி ச்சி… போயும் போயும் உன் பின்னால் சுற்றினேனே..?” என்று கேட்டு விடுவானா..?’ என்று நினைத்து, அவளுக்கு அந்த ஏசி அறையிலும் வியர்க்க ஆரம்பித்தது. 

“மிஸ்… பைல் ப்ளீஸ்…” என்றான் மீண்டும் சற்று அழுத்தி…

கைகள் நடுங்க, அதை அவனிடம் அவள் கொடுக்க, அதை வாங்கிப் பக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணிடம் கொடுத்து விட்டான். ஆத்மிகாவின் முகமோ, ஈரப்பசை அற்று வெளிற ஆரம்பிக்க, உடலோ நடுங்க ஆரம்பித்தது.

ஆத்மிகாவின் பைலைப் பார்த்து “எம்.காம் கரெஸ்ல முடிச்சீங்களா..?” என்று கேட்ட அந்தப் பெண்ணின் முகம் ஓரிடத்தைக் கண்டதும் சட்டென்று மாறியது. உடனே பைலை மூடி வைத்து விட்டு, “மிஸ்டர் அகத்தியன்… இந்தப் பொ… பொண்ணை ரிஜெக்ட் பண்ணி அனுப்பிடலாம்…” என்றார்.

ஆத்மிகா நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் அனைத்துக் கம்பெனியிலும் இப்படித்தான் நடக்கும். முதலில் கேள்வி கேட்பார்கள். பின்பு அவளது பைலைப் பார்த்ததும், அனைவரின் முகத்திலும் ஏளனமும் இகழ்ச்சிப் புன்னகையும் தோன்றும். அதற்கு அடுத்து அவர்கள் கேட்கும் நாராசமான கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல், அங்கிருந்து முகம் கசங்க வெளியேறி விடுவாள்.

ஆனால், இங்கோ, தான் யாரென்று தெரிந்தால் அகத்தியன் என்ன நினைப்பான்..? என்று தான் கவலைப்பட்டாள் ஆத்மிகா. ஆனால், அந்தப் பெண்மணி இப்படிக் கூறவும், அன்றொரு நாள், “இனிமேல் யார் என்ன சொன்னாலும் பயந்து நடுங்காம தைரியமா திருப்பிப் பேச பழகிக்கோ…” என்று அவன் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்ததில், “ஏன்னு தெரிஞ்சிக்கலாமா மேடம்..?” என்று தைரியமாகவே அந்தப் பெண்மணியிடம் கேட்டாள்.

அவளது அந்தத் தைரியத்தை அந்தப் பெண் விரும்பவில்லை போலும்..!! ஆத்மிகாவின் மனதைப் புண்படுத்தும் நோக்கத்தில், “ஏன் எதுக்குன்னு உனக்குத் தெரியாதா..? இதை நான் என் வாயால் வேற சொல்லணுமா..? உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம், இந்த மாதிரி  இன்டெர்வியூகளுக்கு  அப்ளை பண்ணினதே தப்பு. இதுல நீ என்னை எதிர்த்துக் கேள்வி வேற கேக்குறியா..? எந்தத் தைரியத்துல நீ எங்க முன்னாடி உக்காந்து இருக்கே..? எம்.காம் படிச்சிட்டா  நீ யாருங்கிறது மறைக்கப்பட்டுருமா..?”  என்று கூறிய அந்தப் பெண்மணியின் முகத்தில் அவ்வளவு அலட்சியம்..!!

அவரின் பேச்சிலும், அந்த அலட்சிய பாவனையிலும் ஆத்மிகாவின் மனதில் வலியை ஏற்படுத்தியது. அதே நேரம், அவளது தன்மானத்தைச் சீண்டி விட்டதில்,  

“ஒரு நிமிஷம் மேடம்… நான் யாருங்கற விஷயத்தை மறைக்கவே இல்லையே..? அதான் கொட்ட எழுத்தில், நான் ஒரு பெண்ணும் அல்லாத  ஆணும் அல்லாத ரெண்டும் கலந்த கலவையான திருநங்கைன்னு என்னோட ஜென்டர் என்னன்னு மென்ஷன் பண்ணியிருக்கேனே..?” என்று கூறியவள், அகத்தியனை வலி நிறைந்த ஒரு பார்வை பார்த்தாள். 

அவனோ, சலனமின்றி அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல் அவள் தவித்துக் கொண்டிருக்க, 

“பார்த்ததுனாலதான் கேட்குறேன்… நீ ஏன் இந்த வேலைக்கு வந்தேன்னு… அதுக்கான தகுதி உனக்கு இருக்கா…?” 

அந்தப் பெண்மணியை அழுத்தமாகப் பார்த்தவள், “என்னோட தகுதி என்னன்னு எனக்குத் தெரியும் மேடம். என் தகுதியை மறைச்சு நான் வேலை தேடி இருந்தால், இந்தக் கம்பெனியை விட பெரிய கம்பெனியில் எப்பவோ வேலைக்குச் சேர்ந்து லட்சம் லட்சமா சம்பளம் வாங்கி இருப்பேன். ஆனா நான் அப்படிச் செய்ய விரும்பல. ஏன்னா நான் யாருங்கிறது இந்தச் சமுதாயத்துக்குத் தெரிஞ்சி, என்னை, எனக்காகவும் என் திறமைகளோடவும் ஏத்துக்கணும்ன்னு தான் இதுவரை நேர்மையா நடந்துக்கிட்டு வரேன்…” என்று ஒருவித நிமிர்வுடன் சொன்னவள், 

“அப்புறம் என்ன சொன்னீங்க..? உன்னை மாதிரி ஆட்கள் வேலைக்கே வரக் கூடாதா..? ஏன் மேடம் உங்களை விட நாங்க எந்த விதத்துல குறைஞ்சி போயிட்டோம்..? உங்களுக்கு இருக்கிற அதே இரண்டு கண், காது மூக்குன்னு தானே எங்களுக்கும் இருக்கு. என்ன ஒன்னு, ஆணையும் பெண்னையும் பேதப்படுத்துற “அது…” மட்டும்தானே வித்தியாசமா இருக்கு..?

அதைத் தவிர வேற என்ன வித்தியாசத்தை எங்ககிட்ட கண்டுட்டீங்க..? இந்த உலகத்துல ஆண் ஆணா இருக்கான். பெண் பெண்ணா இருக்கா. நான் ரெண்டு சேர்ந்த கலவையா இருக்கேன். அவ்ளோ தானே..? உங்களைப் படைச்ச அந்தக் கடவுள்தானே  எங்களை மாதிரி ஆட்களையும் படைச்சாரு. இதுல எங்க தப்பு எங்க இருந்து வந்தது மேடம்..?

ஒரு ஆணால ஒரு பெண் வாழ்க்கை பாழாச்சுன்னும், ஒரு பெண்ணால ஒரு குடும்பமே பாழாச்சுன்னும் பல சம்பவங்கள் நடப்புல நாம பார்த்திருக்கோம். ஆனா எந்த ஒரு இடத்துலயாவது திருநங்கைகளால ஒருத்தருக்குப் பாதிப்புன்னு எங்கயாவது கேள்விப்பட்டு இருக்கீங்களா..?

எங்களுக்கும் மனசு உண்டு மேடம்.  அதுல நிறைய ஆசைகள் கனவுகள் உண்டு. அந்தக் கனவுகள் நினவாகணும்ன்னா எங்களுக்கு ஒரு வாய்ப்பு வேணும். வாய்ப்பு கிடைச்சாதானே மேடம் எங்களுக்கான இடத்தை உருவாக்க முடியும்…” என்று அவள் கலங்கிய குரலில் நிதர்சனத்தை எடுத்துரைத்தாள்.

அந்தப் பெண்மணியோ அவளது பேச்சைக் கருத்தில் கொள்ளாமல், “நீ என்னதான் விவாதம் பண்ணாலும், உங்களுக்கான இடமும் மரியாதையும் வேறதான். என்னைக்கும் ஆண், பெண் சமுதாயத்துல நீங்க ஒன்னா கலக்க முடியாது. புரிஞ்சிதா…” என்று அடித்துக் கூற, ஆத்மிகாவோ மனதால் பெரும் அடி வாங்கினாள்.

அவளது பார்வை அகத்தியனை ஏறிட்டுப் பார்க்க, அவனோ எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல், பேசும் அந்தப் பெண்மணியைத் தட்டிக் கேட்காமல், ஆத்மிகாவைத்தான் யோசனையுடன் பார்த்திருந்தான்.

அவனது அந்த யோசனை கலந்த முகத்தைப் பார்த்தவளின் இதழில் விரக்தி புன்னகை வந்து போனது. ‘இவனும் தன்னைத் தவறாகத் தான் நினைக்கிறானோ..?’ என்ற எண்ணம் எழ, திருநங்கைகளும் மனித இனமே என்று நிரூபிக்கும் பொருட்டு, தன் கைப்பையில் இருந்த கத்தி போன்ற பேனாவை நொடிப் பொழுதில் எடுத்தவள், சிறிதும் யோசிக்காமல் தனது இடது கை மணிக்கட்டில் கீறி விட்டாள். இரத்தம் குபுகுபுவெனப் பொங்கி வருவதைப் பொருட்படுத்தாமல், 

“என்னமோ சொன்னிங்க… நீங்க வேற நான் வேறன்னு… ஆனா, இங்க பாருங்க மேடம், எனக்கும் சிகப்பு நிறத்துலதானே இரத்தம் வருது. எல்லோருக்கும் அப்படிதான்னு நினைக்கிறேன். கரெக்ட்டா மேடம்?” என்று கேட்க, அந்தப் பெண்ணோ  அரண்டு போனார். 

அதுவரை அமைதியாக, ஆத்மிகாவின் தைரியமான பேச்சை ரசித்துக் கொண்டு இருந்த அகத்தியனோ, அவளின்  செயலில் சட்டென எழுந்தவன், “ஸ்டாப்  திஸ் இன்டர்வியூ… ஐ ஹவ் ஆல்ரெடி செலக்ட்டடு தி கேன்டிடேட்…” என்று விட்டு வேகமாக அவளின் அருகே சென்றவன்,

“என்ன காரியம் பண்ணிட்டே..?” என அவளைக் கடிந்து விட்டு, அங்கிருந்த யாரையும் பொருட்படுத்தாமல், தன் கைக்குட்டையை எடுத்து ஆத்மிகாவின் மணிக்கட்டில் வைத்து அழுத்தியவன், அவளைக் கையோடு அழைத்துக் கொண்டு வெளியே சென்று, தனது காரில் அவளை அமர்த்தி, டேஷ் போர்டில் வைத்திருந்த முதலுதவி பெட்டியின் உதவியுடன், அவளது கைக்காயத்திற்கு மருந்திட ஆரம்பித்தான். 

ஆத்மிகாவோ, “விடுங்க, என் கையை…” என்றபடி அவனிடமிருந்து கையை உருவ முயன்றாள். அவனோ, அவளது கையை மேலும் அழுத்திப் பிடித்தபடி மருந்திட்டு கட்டு போட்டவன்,

“பேச்சு பேச்சா இருக்கும்போது எதுக்குடி இப்படிச் செஞ்ச..?” என்று கோபத்துடன் கேட்டான் அகத்தியன்.

அவளோ, அவனது கேள்விக்குப் பதிலளிக்காமல், “நீங்க தானே   அவங்களைப் பேச விட்டு வேடிக்கை பார்த்தீங்க. அப்புறம் எதுக்கு இப்படிக் கேக்குறீங்க…?” என்று அவளும் அதே கோபத்துடன் பதில் கேள்வி கேட்டாள். 

“நான் வேடிக்கை பார்த்ததுனாலதானே, நீ தைரியமா அவங்களை எதிர்த்துக் கேள்வி கேட்ட. அன்னைக்கும் அந்த இன்ஸ்பெக்டர்கிட்ட சண்டை போடுவேன்னு எதிர்பார்த்து அமைதியா இருந்தேன். ஆனா, நீ பயந்து நடுங்கி அழுது என்னை அங்க வரவச்சிட்ட. 

யார் என்ன சொன்னாலும் பயந்து ஒடுங்காம, அதை எதிர்த்து நிக்கிற  துணிச்சல்  உன்கிட்ட இருந்து வரணும்ன்னு நினைச்சேன். இன்னைக்கும் நான் அமைதியா இருந்தேன்…” என்றவனை, 

விழி விரித்துப் பார்த்தவள், “என்ன சொல்றிங்க..? அ…அப்போ நா..நான் யாருன்னு உங்களுக்கு முன்னாடியே தெ…தெரியுமா..?” என்று குரல் நடுங்க கேட்டாள் ஆத்மிகா.

அவனோ, கலைந்திருந்த அவளது முடியை அவளின் காதோரம் ஒதுக்கி விட்டு, “தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் பேபி விடாமல் உன்னைத் தொடர்ந்து வந்தேன். இனியும் வருவேன்…” என்று கண் சிமிட்டிக் கூறவும்,

படபடக்கும் நெஞ்சோடு, “அ… அது அதுதான் ஏன்…?” என்று கேட்டாள்.  அவளது குரல் அவளுக்கே கேட்டதோ என்னவோ..?

அவளது கண்களை நேருக்கு நேராகக் காதலுடன் பார்த்த அகத்தியன், “பிகாஸ் ஐ லவ் யூ ஆத்மிகா” என்று கூறினான்.

“என்ன… என்ன சொன்னிங்க..?” என்று கேட்டவள், அதிர்ச்சியில் உறைந்து போக, மேலும் அவனது கண்களில் கரைபுரண்டு ஓடிய காதலைக் கண்டவளின் முகம் பேயறைந்தாற் போல மாறியது. அடுத்த நிமிடம், தனது கையை அவனிடமிருந்து வெடுக்கென உருவிக் கொண்டவள், சட்டெனக் கார் கதவைத் திறந்து கொண்டு, அவனைத் திரும்பியும் பாராமல் அங்கிருந்து ஓடிச் சென்றாள்.

வருவாள்…

****