Views 861 

தேவதை  8…

நேற்று போல் இன்றும் அவள் வீட்டுக்குச் செல்லும் அந்தத் தெருவின் முனையில் காரை நிறுத்திய அகத்தியன், “ஆத்மிகா… எந்த ஒரு விஷயத்துக்கும் அழுகையோ பயமோ தீர்வு இல்ல. இப்பவும் சொல்றேன், எந்த விஷயமா இருந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ணனும். அது தான் எனக்குப் பிடிக்கும். போ, எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காம நிம்மதியா தூங்கு. நாளைக்குப் பார்க்கலாம்..” என மென்மையாகக் கனிவுடன் குழந்தைக்குச் சொல்வது போல் கூறினான்.

அவளோ அவனை நிமிர்ந்து பார்த்து, ‘நீங்க யாரு..? என்ன பண்றீங்க..? எங்க இருக்கீங்க..? உங்களைப் பத்தி எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனா என்கிட்ட அன்பா பேசுறீங்க. எனக்காகப் போலீசையே எதிர்த்து நின்னீங்க.  இதே அன்பு என்னைப் பற்றி முழுமையா தெரிஞ்சா இருக்குமா..?’ என்று மனதுக்குள் கேட்டு விட்டு, உதட்டைக் கடித்துத் தன் அழுகையை அடக்கினாள் ஆத்மிகா.

அவளது கலங்கிய கண்களைப் பார்த்து, “என்னடா..? இப்ப தானே சொன்னேன், அழ கூடாதுன்னு…” அப்பொழுது கூடக் கனிவாகத்தான் அதட்டினான். 

“இல்ல… நான் இனிமேல் அழ மாட்டேன்.  நான் கிளம்புறேன்…” என்றவள், இறங்கி நடந்தாள். செல்லும் அவளையே பார்த்திருந்த அகத்தியன், அவள் தன் கண்ணை விட்டு மறையும் வரை, அங்கேயே நின்றிருந்து பின்பு கிளம்பிச் சென்றான்.

அடுத்து வந்த நாட்களில் ஆத்மிகா வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கொண்டாள். தாயிடம், “நான் வேலைக்குப் போகவில்லை” என்று கூற, அவரோ, “நான் எப்போ உன்னை வேலைக்குப் போகச் சொன்னேன்..? வீட்லயே இருக்கத் தான் சொல்லிட்டே இருக்கேன். நீ தான் கேட்கல…” என்றவர், எதற்காக வேலைக்குச் செல்லவில்லை என்று அவளிடம் கேட்கவில்லை. ஏனெனில், அவள் மனம் புண்படும்படி அங்கு ஏதோ நடந்திருக்க வேண்டும். அதனால் தான் இப்படிச் சொல்கிறாள் என்று சரியாக யூகித்தவர், மகளிடம் என்னவென்று கேட்கவுமில்லை. அப்படிக் கேட்டு, மறுபடியும் அவள் மனதை ரணமாக்க விரும்பவில்லை என்று தான் செல்ல வேண்டும். அதனால் அவள் இஷ்டப்படி விட்டு விட்டார்.

நாட்களும் அதுபாட்டுக்குக் கடந்து சென்றது. ஆத்மிகா ஏதாவது பொருள் வாங்க பக்கத்தில் இருக்கும் கடைக்குச் செல்வதற்குக் கூட வெளியே வரவில்லை. குழந்தை சுஜியைக் கைக்குள்ளேயே வைத்துக் கொண்டு, அந்தக் குழந்தையிடம் தன் நேரத்தை செலவழித்தாள். அப்படித்தான் அவளது அறையில், ஒருநாள் காலையில், அவளும் சுஜியும் எதையோ நோண்டி கொண்டிருந்தார்கள். அப்பொழுது, “அமி உன் பேர்ல ஸ்பீட் போஸ்ட் வந்துருக்கு” என்று குரல் கொடுத்தாள் அவளது அக்கா ஆஷா.

“எனக்கு ஸ்பீட் போஸ்டா…?” என்று கேட்டபடி வெளியே வந்தவள், கையெழுத்து போட்டு அந்த போஸ்டை வாங்கிப் பிரித்துப் பார்த்தாள். அது பிரபலமான ஒரு கம்பெனியில் இருந்தது வந்திருக்கும் இன்டெர்வியூவிற்கான அழைப்பு..!! அதைப் பார்த்து நெற்றிச் சுருக்கியவள், “நான் இந்தக் கம்பெனிக்கு அப்ளை பண்ணியிருந்தேனா…? ம்ப்ச்… நினைவில்லை” என்று சலித்தபடி, அதை ஹாலில் இருந்த டீபாயில் போட்டு விட்டு தனது அறைக்குள் சென்று விட்டாள்.

தங்கையின் செயலைப் பார்த்த அவளது அக்கா, “அமி என்னாச்சு..? எதுக்கு இப்படிப் போட்டுட்டுப் போய்ட்டே..?” என்று கேட்டாள்.

“நான் எங்கேயும் வேலைக்குப் போகப் போறது இல்லக்கா. அதைக் கிழிச்சுக் குப்பையில் போட்டுரு…” என்று அசால்டாக அவள் கூறவும்,

“ஏன்மா உனக்கு விருப்பம் இல்லையா..?” என்று கேட்டாள்.

“விருப்பம் இருந்து என்ன பிரயோஜனம்க்கா..? எப்படியும் அங்கே வேலை கிடைக்கப் போறது இல்ல. பின்ன எதுக்கு ஒவ்வொரு தடவையும் போய் வீணா மனசு கஷ்டப்படணும்..?” விரக்தியாகக் கூறினாள்.

“முன்ன நடந்த மாதிரி தான், எல்லா இடத்தில் நடக்கும்ன்னு நீயே நினைச்சா எப்படி அமி..? சில இடங்களில் நம்மைப் புரிஞ்சிக்கிற மாதிரி நல்ல உள்ளம் படைச்சவங்களும் இருக்கத்தான் செய்வாங்க. இந்தத் தடவை நம்பிக்கையா போய்ட்டு வாம்மா…” என்றவள், “என்னைக்கு இன்டெர்வியூ..?” என்று கேட்டாள்.

“நாளைக்குக்கா…” என்று தங்கை சொல்லவும், “சரிடா… நாளைக்குக் கண்டிப்பா நீ போகணும். அங்கேயும் அப்படித்தான் நடந்ததுன்னா, அதுக்கு அப்புறம் நீ எங்கேயும் வேலைக்கு அப்ளை பண்ண வேண்டாம். சரியா..?” என்றவள் வெளியே சென்று விட்டாள்.

“நல்ல உள்ளம் படைத்தவங்க இருக்காங்கக்கா. ஆனா, உண்மை தெரிஞ்சா அவங்களும் என்னை வெறுப்பாங்களே..?” என்று விரக்தியாக நினைத்தவளுக்கு அகத்தியனின் நினைவு  வந்தது.

“எப்போதும் மாதிரி என்னைத் தேடி வீட்டுத் தெருமுனையிலும் மாலுக்கும் வந்துருப்பான்ல. நான் வரலன்னதும் என்னை எதிர்பார்த்து ஏமாந்து இருப்பான்…” என்று நினைத்தவள், பின்பு விரக்தியுடன்,

“ரெண்டு நாள் சுத்தி சுத்தி வந்துருப்பான். என்னைக் காணோம்னதும்  அதுக்கு அப்புறம் வேற வேலையைப் பார்க்க போயிருப்பான். ம்பச்…” என்று அவளாகவே கேள்வி கேட்டு, அவளே அதற்குப் பதிலும் சொல்லிக் கொண்டாள்.

மறுநாள் காலையில், “அக்கா… நான் போய்ட்டு வரேன். அம்மா கிட்ட சொல்லிருங்க. சுஜி செல்லத்துக்கு என்ன வேணும் சொல்லுங்க, வரும் போது வாங்கிட்டு வரேன்…” என்றாள் ஆத்மிகா.

“எனக்கு சாக்கி சாக்கி…” என்று குதித்தாள் குழந்தை.

“எப்ப பாரு சாக்கி தான் வேணுமா..? பல்லு எல்லாம் சொத்தை ஆகப் போகுது…” எனக் கூறினாலும், “வாங்கிட்டு வரேன்டா தங்கம்…” என்று விட்டு வெளியில் வந்து வீதியில் நடந்தாள்.

“பாலாஜி அண்ணா… பெசன்ட் நகர் வரை போகணும், போலாமா..?” என்று கேட்டவள், ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

“இதோ கிளம்பியாச்சு பாப்பா…” என்ற ஆட்டோ ஓட்டுநரும் வாகனத்தைக் கிளப்பினார்.  

ஆட்டோவில் அமைதியாக அவள் அமர்ந்திருந்தாலும், அனிச்சையாக அவளது பார்வை வெளியே அகத்தியனின் கருப்பு நிற ஆடி வாகனம் வருகிறதா என்று எட்டிப் பார்க்க தவறவில்லை. அப்படி ஏதும் வரவில்லை என்றதும் மனதில் சிறு ஏமாற்றம் எழுந்தது. ஆனால், இந்த நினைப்பு நல்லதற்கு அல்ல என்று எண்ணிக் கொண்டவள், தன் கண்களுக்கும் மனதுக்கும்  கடிவாளமிட்டாள்.

அடுத்தச் சில நிமிடங்களில் பெசன்ட் நகரும் வந்து விட, அந்த எட்டு மாடி கட்டிடத்தின் முன் ஆட்டோ நின்றது. அதில் இருந்து இறங்கிய ஆத்மிகா ஆட்டோவுக்குப் பணத்தைக் கொடுத்தாள். அவரோ எப்பொழுதும் போல் “பாப்பா ட்ரீட்” என்றார்.  அவளும் சிரித்துக் கொண்டே “கண்டிப்பா உண்டு” என்று கூறவும், “சரி பாப்பா” என்றபடி ஆட்டோவைக் கிளப்பிச் சென்று விட்டார்.

திரும்பி அந்த எட்டு மாடி கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாள் ஆத்மிகா. இங்குத் தனக்கு வேலை கிடைக்குமா என்ற தொண்ணூறு சதவீதம் நம்பிக்கை இல்லா எண்ணத்துடன் உள்ளே சென்றவள், ரிசப்ஷனில் விபரம் சொல்ல, அவளை நான்காம் மாடிக்கு அனுப்பி வைத்தாள் ரிசப்ஷன்  பெண்.

லிப்டில் நுழைந்து, நான்காவது மாடிக்கு வந்த ஆத்மிகாவிற்கு, கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கை கூடக் காணாமல் போயிருந்தது. ஏனெனில் அங்கே ஆண்கள் பெண்கள் எனக் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்டோர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தார்கள்.  

‘இப்படியே திரும்பிப் போய் விடலாமா..?’ என அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போது நேர்முகத் தேர்வு ஆரம்பித்து இருந்தது. அதனால், அங்குப் போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். அழைத்த நபர்கள் உள்ளே செல்வதும், சிறிது நேரத்தில் வெளியே வருவதுமாக இருந்தனர். நேரம் கடந்து கொண்டே இருக்க, ஏனோ ஆத்மிகாவின் மனம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. பதினைந்து பேர் நேர்முகத் தேர்வு முடிந்து சென்றிருக்க, பதினாறாவது ஆளாக ஆத்மிகா அழைக்கப்பட்டாள்.  அவளது கைகள் நடுங்க, தன் கையில் இருந்த பைலை இறுக்கிப் பிடித்துத் தன் நடுக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்று, அந்த நேர்முகத் தேர்வு நடக்கும் அறைக்குள் நுழைந்தாள். 

அங்கே ஐந்து பேர் அமர்ந்திருக்க, அதில் நடுநாயகமாக அமர்ந்திருந்தவனைப் பார்த்ததும், அவளுக்குத் தலை சுற்றிப் போனது..!!

வருவாள்.

****