Views 880 

தேவதை  7

“ஏய் என்னடி, நான் சொன்னதைச் செய்யாம இப்படி மரம் மாதிரி நின்னுட்டு இருக்கே..? ம்ம்ம் வாடி…” என்று ஜீப்பின் மேலிருந்து இருந்து இறங்கி, ஆத்மிகாவின் அருகே சென்று அவளது கையைப் பிடிக்க போனான் அந்த இன்ஸ்பெக்டர்.  அப்பொழுது, 

“எக்ஸ்கியூஸ் மீ இன்ஸ்பெக்டர்… இந்தப் பொண்ணை எதுக்கு நிக்க வச்சி விசாரிச்சிட்டு இருக்கீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா..?” என்று அவ்விடம் வந்தான் அகத்தியன்.

அவனது குரலில் சட்டென்று திரும்பிப் பார்த்தாள் ஆத்மிகா. அவளது மனதில் அப்படி ஒரு நிம்மதி உண்டானது என்று சொன்னால் மிகையாகாது..!! தன்னைக் காக்க வந்த கடவுள் போல் அவளுக்குத் தோன்றினானோ என்னவோ..? வேகமாக அவனது முதுகிற்குப் பின் சென்று தன்னை மறைத்துக் கொண்டவள், “ப்ளீஸ்… என்னைக் காப்பாத்துங்க. எனக்குப் பயமா இருக்கு” என்றவள், அவனது சட்டையை இறுக பற்றிக் கொண்டாள். 

அவளது நடுக்கத்தை உணர்ந்த அகத்தியனுக்கோ, அந்த இன்ஸ்பெக்டரை இதே இடத்தில் கொன்று புதைக்கும் வெறி எழுந்தது. 

“நீ யாருடா என்னைக் கேள்வி கேட்க…?” என்று தெனாவெட்டாக அகத்தியனைப் பார்த்துக் கேள்வி கேட்டான் அந்த இன்ஸ்பெக்டர்.

“நான் யாருங்கிறது இப்ப முக்கியம் இல்ல. இப்ப நீ என்ன ஆகப் போறேங்கிறது தான் முக்கியம்” என்று அவன் பல்லைக் கடித்தபடி கூறி முடிக்கவில்லை… அந்த இன்ஸ்பெக்டரின் சட்டையில் இருந்த மொபைல் ஒலி எழுப்பியது.

அகத்தியனை முறைத்துக் கொண்டே போனை எடுத்துப் பார்த்தவன், அழைப்பது அவனது மேலதிகாரி என்றதும், வேகமாக ஆன் செய்து காதுக்குக் கொடுத்து, “ஹலோ சார்…” என்றான் பவ்யமாக…

அந்தப் பக்கமோ, “யோவ்… உன்னை நைட் ரோந்து பணிக்குத் தானே போகச் சொன்னேன். ரோட்ல போறவங்க வரவங்களை மேயவா சொன்னேன்..? எதுக்குய்யா அந்தப் பெண்ணைப் பிடிச்சு வச்சிருக்க..? என்னய்யா இதெல்லாம்..?” என்று அவனது மேலதிகாரி பிடிபிடி என்று பிடித்துக் கொண்டார்.

“சார்… அது அந்தப் பொண்ணு…” என்று அந்த இன்ஸ்பெக்டர் மென்று முழுங்க,

“எல்லாம் எனக்குத் தெரியும். நீ மூடிட்டு அங்க இருந்து கிளம்பு. இல்ல உன்னோட சேர்த்து என்னையும் தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திருவான் அவன்..!! நான் சொல்றது உன் மர மண்டையில் ஏறுச்சா இல்லையா..?” என்று அந்தப் பக்கம் மேலதிகாரி எரிந்து விழுந்தார்.

“அந்தப் பொண்ணை விட்டுட்டு இதோ கிளம்பிட்டேன் சார்…” என்ற இன்ஸ்பெக்டர் போனை அணைத்து விட்டு அகத்தியனைப் பார்த்தவன்,

“இவளைக் காப்பாத்த சரியான நேரத்துல ஹீரோ மாதிரி வந்து இருக்கியே. இவளுக்கு நீ யாருடா, மாமனா..? மச்சானா…?” தனது மேலதிகாரி எகிறியதில் கடுப்பாகிக் கேட்டான்.

“ம்ம்ம்… அவ புருஷன்டா…” எனக் கம்பீரமாகக் கூறிய அகத்தியன், தன் பின்னால் நின்று நடுங்கிக் கொண்டிருந்தவளின் கைப் பிடித்து முன்னுக்கு இழுத்தவன், அவளது தோளில் கைப் போட்டு அணைத்தபடி, அங்கிருந்து அவளை அழைத்துச் சென்றான்.

ஆனால், ஆத்மிகா இருந்த மனநிலையில் அகத்தியனின் பேச்சைக் கவனிக்கவில்லை. 

அவளை அழைத்து வந்தவன், அங்கு நின்றிருந்த தனது காரில் முன்பக்கம் அமர வைத்து விட்டு, மறுபக்கம் ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்தவன், காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளுக்குக் குடிக்கக் கொடுத்தான்.

அவளோ, அதை வாங்காமல் அவனைக் கண் கலங்க பார்த்தவள், “நா… நா தப்பானவ இல்ல. நான் அப்படிலாம் பண்ண மாட்டேன். நான் அப்படிப்பட்டவ கிடையாது…” என்று கூறி விட்டு முகத்தை மூடிக் கொண்டு கதறி விட்டாள். 

அவளது வலி நிறைந்த பேச்சில், அதில் தெரிந்த தவிப்பில், அந்த இன்ஸ்பெக்டரின் மீது அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. அந்தக் கோபத்தை ஸ்டியரிங்கில் ஓங்கிக் குத்திக் காட்டி விட்டு, அவள் அழுவது பொறுக்க முடியாமல், சட்டென ஆத்மிகாவின் தலையைப் பிடித்துத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அகத்தியன். 

அவளோ, அதை உணராமல், சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக, அதையே திரும்ப திரும்பக் கூறியபடி அழுகையில் கரைந்தாள். அவனும் அவள் அழட்டும் என அமைதியாக இருந்தான்.  ஒருவழியாக அழுது ஓய்ந்து தன்னுணர்வுக்கு வந்தவள், அப்பொழுதுதான் அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்திருக்கிறோம் என்று புரிந்ததும், வேகமாக அவனிடம் இருந்து தள்ளி அமர்ந்தாள். 

அவனோ, அதைக் கருத்தில் கொள்ளாமல் அவளிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினான். இப்பொழுது மறுக்காமல் வாங்கிக் குடித்தவள், “தேங்க்ஸ்… நீங்க  மட்டும் வரலன்னா நான்.. நான்…” என மேற்கொண்டு பேச முடியாமல் அவளுக்கு அழகை வர,  

“இப்ப என்ன நடந்துருச்சுன்னு இப்படி அழுதுட்டு இருக்கே..? அதான் நான் வந்துட்டேன்ல ம்ம்ம்…” என்று அவளை அதட்டியபடி சமாதானம் செய்தவன்,

“அந்த இன்ஸ்பெக்டர் அப்படிக் கீழ்த்தரமா பேச ஆரம்பிக்கும் போதே, நீ தைரியமா எதிர்த்துப் பதில் கொடுத்து இருந்தன்னா, அவன் மேற்கொண்டு பேசி இருக்கவே மாட்டான். ஆனா நீ பயந்து நடுங்கி அழுதுட்டு நிக்கிறே. அது அவனுக்கு வசதியா போச்சு…” என்று சற்றுக் கோபமாகக் கூறியவன்,

“இனிமேல் யார் என்ன சொன்னாலும், பயந்து நடுங்காம, தைரியமா திருப்பிப் பேச பழகிக்கோ…” என்று அவளுக்குப் பாடம் நடத்தினான்.  

பின்பு அவளைச் சகஜம் ஆக்கும் பொருட்டு, “சரி, மதியம் யாரோ ஒருத்தங்க என்னைக் கத்தி வச்சிலாம் மிரட்டினாங்க. ஆனா, அதே ஆளு, இப்ப குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்காங்க. அவங்க யாருன்னு உனக்குச் சொல்லவா…?” என்று சிறு கிண்டலுடன் கேட்கவும், அவன் எதைச் சொல்கிறான் எனப் புரிந்து கொண்ட ஆத்மிகா குற்றவுணர்வுடன், “சாரி…” என்றாள். 

“உன் சாரியை நீயே வச்சிக்கோ, நான் ஜீன்ஸ் தான் போடுவேன்…” என்று கூறி புன்னகைத்தவவன், தன் கர்ச்சிப்பை எடுத்து அவளிடம் கொடுத்து, “மொதல்ல முகத்தைத் துடைச்சிக்க, வீட்டுக்குப் கிளம்பலாம். இப்படியே போனா உங்க வீட்ல கவலைப்படுவாங்க தானே..?” என்று அக்கறையாகக் கூறி விட்டு காரைக் கிளப்பினான் அகத்தியன்.

வருவாள்…

****