Views 869 

தேவதை  6…

‘இவன் எங்கே இங்க..? ஒருவேளை நான் இங்கே வேலை பார்க்கிறது தெரிஞ்சி வந்துருக்கானா…?” என்று யோசித்தவளுக்கு உடனே பொறி தட்டியது. ‘அவனது காரைத் தானே அடையாளம் கண்டு வைத்திருந்தோம். அந்தக் காருக்குச் சொந்தக்காரன் இவன் என்று நேற்று தானே தெரியும்..? அப்போ என்னைப் பார்க்க இங்கேயும் அடிக்கடி வந்து இருப்பானா…? நான் தான் கவனிக்கலையோ..?’ என்று அவள் பாட்டுக்கு யோசித்துக் கொண்டு இருந்தாள்.

அவனோ, அதே குறும்பு புன்னகையுடன், “என்ன மிஸ்… நான் கேட்டது கிடைக்குமா..?” என்று மீண்டும் அழுத்திக் கேட்டான்.

அவனை முறைத்தவள், சற்றுத் தள்ளி பீட்சா வெட்டும் கத்தி போன்று இருந்ததை எடுத்து, தன் அருகில் வைத்துக் கொண்ட ஆத்மிகா, “நீங்க கேட்டது எனக்குச் சரியா கேட்கல சார். ப்ளீஸ் டெல் ஒன்ஸ் மோர்…” என்றாள்.

அவனும் “ம்ம்ம்… மிரட்டல் எல்லாம் பலமா தான் இருக்கு. ஆனா பயம் தான் வரல…” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறியவன், “ஒன் சிக்கன் பாப்கார்ன் அன் ஹாப் கோக் வித் ஐஸ்” என்றான்.

“ட்டு ஹண்ட்ரேட் ப்ளீஸ்” என்றாள்.

அவன் ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவள் முன் நீட்ட, அதை வாங்கியவள், மீதி முன்னூறு ரூபாயை அவனிடம் அவள் திருப்பிக் கொடுத்தாள். 

அவனோ அதை வாங்காமல், “கீப் தி சேஞ்ச் மிஸ்” என்று கண் சிமிட்டி விட்டு, அங்குப் போடப்பட்டிருந்த இருக்கையில் அவளைப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டான். 

அவளோ, கையில் இருந்த முன்னூறு ரூபாயை வெறித்துப் பார்த்தாள். சற்று முன் அவன் கேட்ட, “ஐ வான்ட் யூ’ என்ற வார்த்தை அவளது காதில் ஒலித்துக் கொண்டிருக்க, ‘நேத்து எவ்வளவு நல்லவன் மாதிரி என்கிட்ட நடந்துகிட்டான். ஆனா இப்ப எனக்கு முன்னூறு ரூபாய் ரேட் வைக்கிறானா..?’ என்று எண்ணியவளுக்கு, ஏனோ மனம் கனத்துப் போனது. 

அந்தப் பணத்தை அங்கே இருந்த டொனேஷன் பெட்டியில் போட்டு விட்டு வேலையைக் கவனிக்க ஆரம்பித்தவள், மறந்தும் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. 

எப்பொழுதுமே மாலை ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி விடும் ஆத்மிகா, அன்று அதிகம் வேலை இருந்ததால் ஒன்பது மணிக்குத்தான் கிளம்பினாள்.

“அமி ரொம்ப லேட் ஆகிருச்சு. இரு, நான் வந்து ஆட்டோ பிடிச்சு விடுறேன்” என்றார் அவளது முதலாளி.

“இல்லண்ணா… கீழே இறங்கவும் மால் வாசல்ல ஆட்டோ நிக்கும். நான் பார்த்துக்கிறேன்” என்று விட்டு அவள் கிளம்ப, அவள் நேரமோ என்னமோ ஆட்டோவே வரவில்லை. அதில் நொந்தபடி அவள் நடக்க ஆரம்பித்தாள்.  அப்பொழுது அவளையும் அறியாமல், அகத்தியனின் கருப்பு நிற ஆடி கார் தென்படுகிறதா என்று சுற்றிப் பார்த்தாள். எங்கும் காணவில்லை என்றதும், ‘சீக்கிரம் கிளம்பிட்டேன்னு நினைச்சுப் போயிருப்பான்…’ என்று எண்ணியவள், மெதுவாக நடந்தாள். 

அது ஹைவே என்பதால், வாகனங்கள் வேகமாக வந்து கொண்டும் சென்று கொண்டும் இருந்தன. கவனமாகச் சாலையின் ஓரம் நடந்த ஆத்மிகா, ஒரு திருப்பத்தில் திரும்பி நடக்க ஆர்பித்தாள். அந்தச் சாலையில் வாகனங்கள் செல்லாமல் வெறிச்சோடி இருந்தது. அவளுக்கு முன்னும் பின்னும் கூட யாரும் இல்லை. மனதில் சிறு பயம் இருந்தாலும், ஏதாவது ஆட்டோ கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடந்தவள், அந்தச் சாலையின் முடிவில் இடதுபக்கம் திரும்பினாள்.

அங்கே, சற்றுத் தள்ளி இரவு நேர ரோந்து பணிக்காகப் போலீஸ் வாகனம் நின்றிருந்தது. அந்தப் போலீஸ் வாகனத்தின் மீது இன்ஸ்பெக்டர் அமர்ந்து இருக்க, அவன் அருகில் இரண்டு கான்ஸ்டபிள் நின்றிருந்தனர்.

இவள் அவர்களைக் கடந்து செல்லும் நேரம், “ஏய் இங்க வா” என்று அவளை அழைத்தான் அந்த இன்ஸ்பெக்டர். அதில் திடுக்கிட்டுப் போன ஆத்மிகா, தோளில் மாட்டி இருந்த பேக்கை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இன்ஸ்பெக்டரின் அருகே வந்தாள்.

அவளை மேலும் கீழும் பார்த்த அவன், “இந்த நேரத்துல எங்கே போய்ட்டு வர்றே..?” என்று கேட்டவன், “உன்னை எங்கேயோ பார்த்துருக்கேனே…” என்று யோசித்து விட்டு, “ஆமா… நீ அந்த நெல்லி குப்பம் சரஸூ வீட்ல இருக்கிறவ தானே..? இந்தப் பக்கம் உனக்கு என்ன வேலை..? ஓஹ்… கஸ்டமர் யாராவது கூப்பிட்டாங்களா..? அந்த கஸ்டமரை நல்லா திருப்தி படுத்தினியா..? சரி, எவ்வளவு கிடைச்சுது..?” என்று நாராசமாகக் கேள்வி கேட்டு, அவளை உயிரோடு கொன்றான் அந்தப் பாவி..!!

அவன் பேச ஆரம்பித்த போதே, கூனிக் குறுகி கண்ணில் கண்ணீர் வழிய நின்றிருந்தாள் ஆத்மிகா.

“என்னடி பெரிய இவ மாதிரி நீலிக் கண்ணீர் வடிக்கிறே..? இப்படி அழுதா நீ உத்தமின்னு நம்பிருவேனா..?” என்று இளக்காரமாகக் கூறி அவன் சிரித்தான்.

அவளோ, “சார்… நான் ஒரு இடத்துல வேலை பார்க்கிறேன். நான் தப்பானவல்லாம் இல்ல சார். நான் வீட்டுக்குப் போகணும். என்னை விட்டுருங்க ப்ளீஸ்…”  என்று கையெடுத்துக் கும்பிட்டாள் ஆத்மிகா.

“அய்யய்ய… இந்தத் திருடனுங்க எப்போ தான் நான் திருடன்னு உண்மையை ஒத்து இருக்காங்க..? சும்மா ஸீன் போடாம, வந்ததுக்கு என்னைத் திருப்தி படுத்திட்டுப் போ” என்று வக்கிரமாக அவளை அழைத்தான். 

அவன் கூறியதைக் கேட்ட ஆத்மிகாவின் உடல் வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்து இருந்தது. மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் வெடவெடத்து நின்றிருந்தவளின் கண்ணிலோ, கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. ‘இப்பொழுதே, இந்த நிமிஷமே, தன் உயிர் போய் விடக் கூடாதா..?’ என்று உள்ளுக்குள் துடித்தாள் ஆத்மிகா.

வருவாள்…

******