Views 835 

தேவதை 5…

ஆத்மிகாவைப் பார்த்ததும் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுஜி, “அக்கா அக்கா…” என்று கத்தி குதித்தாள்.

“செல்லம்… விளையாடிட்டு இருக்கீங்களா..? அக்கா ட்ரெஸ் மாத்திட்டு நானும் உங்க கூட விளையாட வரேன்…” என்று விட்டு வீட்டின் உள்ளே சென்றாள்.

அவளைப் பார்த்ததும் “இன்டெர்வியூ என்னாச்சு அமி..?” என்று ஆஷா கேட்டாள்.

தன் கையின் பெருவிரலை தலைகீழாகக் காட்டி, “ஊத்திக்கிச்சு…” என்று ஆத்மிகா சொல்ல, அப்பொழுது தான் கவனித்தாள், தங்கையின் காலில் இருந்த கட்டை..

“ஏய் அமி… கால்ல என்னடி கட்டு…?” என்று கேட்டவளை, ‘சத்தம் போடாதே’ என்று அவள் தன் அக்காவை அடக்குவதற்குள், “அம்மா இங்க வா… அமி கால்ல கட்டு போட்டு இருக்கு” என்று கத்தி விட்டாள்.

“என்னடி சொல்றே..?” என்று பதறியபடி, உள் அறையில் இருந்து கையில் காபி டம்ளருடன் வேகமாக வந்தார் சரஸ்வதி. 

“அயோ ஒண்ணும் இல்லமா… பதறாதே..!! இன்டெர்வியூ போய்ட்டு அது ஊத்திக்கிச்சுன்னதும், மனசு சரி இல்லாம அப்படியே பீச்சுக்குப் போனேன். அங்கே கிடந்த கல்லைக் கவனிக்காமல் இடிச்சுக்கிட்டேன். லேசான அடிதான்…” என்று அவள் கூறவும்,

“படிக்க ஆசை பட்ட, படிக்க வச்சோம். வேலைக்குப் போக வேணாம், வீட்ல இருன்னு சொன்னா கேக்குறியா…?” என்று கடிந்தபடி மகளின் கையில் காபி டம்ளரைக் கொடுத்தார்.

காபியை வாங்கி ஒரு வாய் அருந்தியவள், “ம்ம்ம்ம்… காப்பினா அது சரஸ் போட்ட காபி தான்..!! பேஷ் பேஷ்..!! ரொம்ப நன்னா இருக்கு. அதெப்படி சரஸ் நான் வரேன்னு தெரிஞ்சி கரெக்ட்டா காபியோட வந்து நிக்கிறே…?” என்று கேட்ட ஆத்மிகா,

“அம்மா… அடுத்த வாரமும் ஒரு கம்பெனியில் இன்டெர்வியூ இருக்கு. ஓகேவா…?” எனத் தாயைப் பார்த்து கண்ணடித்து விட்டு, அவரின் கையில் சிக்கும் முன், தனது அறைக்குள் ஓடி விட்டாள்.

அவளது அக்காவோ, “அம்மா… அமி கிட்ட ஏதோ மாற்றம் தெரியுதுல..?” என்று தாயிடம் கேட்டாள்.

“நானும் கவனிச்சேன்டி. அவ மனசு கஷ்டப்படாமல் இப்படியே சந்தோசமா இருந்தா போதும். எனக்கு வேற என்ன வேணும்..?” என்று விட்டு சமையலறைக்குச் சென்றார்.

இவர்களின் வியப்பிற்குக் காரணம்… எப்பொழுதுமே ஆத்மிகா இன்டெர்வியூ போய் விட்டு வந்தாள் என்றால், முகம் கலங்கி இருக்கும். யாரிடமும் பேசாமல் தனது அறைக்குள் சென்று முடங்கிக் கொள்வாள். ஆனால் இன்றோ, அந்தச் சுவடு எதுவும் இல்லாமல், எப்பொழுதும் போல் இருக்கவும் தான், அவளை இப்படி அதிசயமாகப் பார்க்கிறார்கள் இருவரும்..!! ஆனால், அவளின் இந்த மன மாற்றத்துக்குக் காரணம் அகத்தியன் என்பதும், அதை  அவளே உணரவில்லை எனும் பொழுது இவர்களுக்கு மட்டும் தெரியுமா என்ன..???

மறுநாள் அந்த பீனிக்ஸ் மாலின் வாசலில் ஆட்டோ நிற்கவும், அதில் இருந்து இறங்கிய ஆத்மிகா, ஆட்டோவுக்கான பணத்தைக் கொடுத்து விட்டு மாலினுள் நுழைந்தாள். மூன்றாம் தளத்தில் இருந்த கே.எப்.சிக்கு வந்து,  அங்கிருந்த வேறு ஒரு வழியில் ஒரு சின்ன அறைக்குச் சென்றவள், சிறிது நேரத்தில் சீருடை அணிந்து, தலையில் தொப்பியுடன் கே.எப்.சியின் கேஷ் கவுண்டர்க்கு வந்து நின்றாள்.

“என்ன அமி இன்னைக்கு லேட்டு..? சரி, நேத்து இன்டெர்வியூ போனியே என்னாச்சு..?” என்று அவளிடம் கேட்டுக் கொண்டே வாடிக்கையாளர் கேட்டதை எடுத்துக் கொடுத்தார் அந்தக் கடையின் உரிமையாளர்.

“டிராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்ண்ணா. இன்டெர்வியூ தானே..?? நல்லாவே ஊத்திக்கிச்சு…” என்று கூறியவள், அங்கிருந்த இன்னொரு பில் மிஷின் முன் வந்து நின்று, அடுத்த சில நொடிகளில் பரபரப்புடன் வேலையைத் தொடங்கினாள்.

அன்று அங்கே கூட்டம் அலைமோதியது. இவ்வளவு நேரம் ஒரே ஒரு கேஷ் கவுண்டர் மட்டுமே திறந்திருந்ததால், ஒரே லைனில் நின்று கடுப்பான பாதி பேர் மற்றுமொரு கேஷ் கவுண்டர் திறக்கவும், இப்பொழுது இரண்டு லைனாகப் பிரிந்து நின்றனர்.

ஆத்மிகா யாரையும் நிமிர்ந்து பார்க்காமல், “யுவர் ஆர்டர் ப்ளீஸ்…” என்றாள்.

“சிக்கன் பக்கெட் ரெண்டு, ஒரு கோக்…” என்றது ஒரு பெண்ணின் குரல்.

“நைன் ஹண்ட்ரட் மேம்” என்று கூறி பில்லை அவளிடம் கொடுத்து, “மூணாம் கவுண்டர்க்குப் போங்க” என்று அனுப்பி வைத்த ஆத்மிகா, “நெக்ஸ்ட் ஆர்டர் ப்ளீஸ்” என்றாள்.

அவளுக்கு இங்கு இது தான் வேலை. வாடிக்கையாளர்கள் கேட்கும் உணவுகள் இருக்கா, இல்லையா என்பதைப் பார்த்து, சுறுசுறுப்பாகப் பதில் சொல்லி, பில் போட்டு அவர்களிடம் கொடுத்து விட்டு, அவர்களை எந்த எந்த கவுண்டர்க்கு சென்று உணவை வாங்க என்று சொல்ல வேண்டும். ஆத்மிகா எம்.காம் படித்து விட்டு, படிப்புக்குத் தகுந்த வேலையைத் தேடிக் கொண்டு இருந்தாலும், வீட்டில்  சும்மா இருக்க மனம் இல்லாமல், பகுதி நேர வேலையாக இங்கே பணிபுரிகிறாள்.

கூட்டம் சற்றுக் குறையவும், சிறிது ரிலாக்ஸாக பில் போட்டுக் கொண்டு இருந்தாள். அப்பொழுது அங்கே வந்தான் அவன்..!! அவனை நிமிர்ந்து பார்க்காமல், “எஸ்… யுவர் ஆர்டர் ப்ளீஸ்” என்றாள்.

“ஐ வான்ட் யூ!! கிடைக்குமா மிஸ்..?” என்று அவன் கேட்டான்.

பழக்க தோஷத்தில், “த்ரீ ஹண்ட்ரேட் ருபீஸ் சார்” என்று கூறி விட்டு, அவள் தன் கையைப் பணத்துக்காக முன்னே நீட்ட,

அவள் அருகில் நின்றிருந்த இன்னொரு கேஷ் கவுண்டர் பெண், “ஏய் அமி… லூசா நீ..? என்னடி பண்றே..?” என்று கிசுகிசுத்து விட்டு ஆத்மிகாவின் கையில் தட்டினாள்.

அதன் பிறகே தன் தவறு உணர்ந்து, “காட்…” என்று நெற்றியில் தட்டிக் கொண்டவள், நிமிர்ந்து, “சாரி சா…” என்று சொல்ல வந்தவளின் வார்த்தை, எதிரில் நின்றவனைப் பார்த்ததும் பாதியிலேயே நின்று போனது.

ஏனெனில், அங்கு அவளைக் குறும்புடன் பார்த்தபடி நின்றிருந்தது அகத்தியன்..!!

வருவாள்…

******