Views 933 

தேவதை 4

‘இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு என்னை முறைக்கிறான்..?’ என்று அவள் புரியாமல் முழிக்க,

“உன்கிட்ட பணம் இருக்கானு நான் கேட்டேனா..? இறங்க சொன்னா இறங்கணும்…” அதட்டினான் அவன். அவனது அதட்டலில் சட்டென்று இறங்கி நின்றவளின் மனமோ,

“எனக்கு என்னாச்சு..? இன்னைக்குத்தான் இவனை முதன் முதலில் பார்க்கிறேன். ஆனா  இவன் சொல்லுக்கு நான் ஏன் கட்டுப்படுறேன்..?’ என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள் ஆத்மிகா. பதில் தான் கிடைக்கவில்லை.  

“வா” என்று விட்டு அவன் முன்னே செல்ல, சுற்றும் முற்றும் பார்த்தபடி அவனைப் பின்தொடர்ந்தாள் அவள். 

“ஹலோ மிஸ்டர் அகத்தியன்… என்ன இந்தப் பக்கம்..?” என்று அவனை வரவேற்றார் ஒரு மருத்துவர்.

‘ஓஹ்… இவன் பேரு அகத்தியனா..?’ என்று எண்ணிக் கொண்டாள் ஆத்மிகா.

“எனக்குத் தெரிஞ்சவங்களுக்குக் கால்ல அடி பட்டுருச்சு. அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்…” என்று கூறியவன், தனக்குப் பின்னால் மிரட்சியுடன் நின்றிருந்த ஆத்மிகாவைக் கைக் காட்டினான்.

“ஓஹ் இவங்களுக்கா…?” என்று கேட்ட அந்த மருத்துவர், “நர்ஸ்…” என்று குரல் கொடுத்தார்.

அடுத்தச் சில மணி நேரத்தில் ஆத்மிகாவின் காலுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, ஊசி போட்டு, மருந்திட்டு கட்டு போட்டு இருந்தனர்.

“மிஸ்டர் அகத்தியன்… அவங்க கால் நகம் பிய்ந்து இருக்கு. ட்ரீட்மெண்ட் பண்ணியாச்சு. ஒன்னும் பிரச்சினை இல்ல. மருந்து எழுதி தரேன். அதை கன்டின்யூ பண்ண சொல்லுங்க போதும். சீக்கிரமே ஆறிடும்…” என்றவர், அடுத்த பேஷண்ட்டைக் கவனிக்கச் சென்று விட்டார்.

“போலாமா…?” என்றவன் அவளின் கையைப் பிடிக்க போனான்.

சட்டென்று தன் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்ட ஆத்மிகா, “போகலாம்…” என்றாள்.

அதில், தனக்குள் சிரித்துக் கொண்ட அகத்தியன் முன்னால் நடக்க, அவனைப் பின்தொடர்ந்தாள் அவள்.

அவளுக்காகக் காரின் முன் பக்க கதவை அவன் திறந்து வைத்து நிற்க, அவனின் ஒவ்வொரு செயலும், ஏனோ அவளுக்கு மனதில் பயத்தைத் தான் கிளப்பியது. ‘இதுக்கு ஒரு முடிவு கட்டணும்..!! இன்றோடு இவன் என்னைத் தொடர்வதைத் தடுக்கணும்’ என்று எண்ணிக் கொண்டாள் ஆத்மிகா.

மீண்டும் கார் பயணம் தொடர்ந்தது. சிறுது நேரத்திற்குப் பிறகு, “ஏதாவது சாப்பிடுறியா..?” என்று அவன் கேட்க,

“சார்… என்னை வீட்ல தேடுவாங்க, ப்ளீஸ்…”  என்று கெஞ்சினாள்.

“ஓகே…” என்றவன், அடுத்த அரைமணி நேரத்தில் ஆத்மிகாவின் வீட்டுக்குப் போகும் சாலையில் திரும்பினான்.

“சார்… இங்கேயே நிறுத்துங்க. என் வீடு பக்கத்தில தான் இருக்கு. நானே போய்க்குவேன்…” என்று அவள் கூறினாள்.

அவள் சொன்ன இடத்தில் வாகனத்தை நிறுத்திய அகத்தியன், டோர் லாக்கை ரிலீஸ் பண்ணாமல் அவள் புறம் திரும்பி அமர்ந்து, “தென்…” என்றான்.

‘தென்னா..? இவன் என்ன எதிர்பார்க்கிறான். ஒருவேளை ஹாஸ்பிடலில் செலவு செய்த பணத்தைக் கேக்குறானோ..?’ என நினைத்தவள்,

“சார்… ஹாஸ்பிடல்ல நீங்க எவ்வளவு செலவு பண்ணிங்கனு கொஞ்சம் சொன்னா, இப்ப வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வந்து குடுத்துருவேன்…” என்று அவள் கூற,

“நான் அதைக் கேட்கல பேபி.  நாம அடுத்து எப்போ மீட் பண்ணலாம்னு கேட்டேன்…” என்று கூறி அவன் சிரித்தான்.

அவனது ‘பேபி’ என்ற அழைப்பைக் கவனிக்காமல், “நா…நாம எதுக்கு சார் மீட் பண்ணனும்…? ஏதோ கால்ல அடி பட்டத்துக்கு ஹெல்ப் பண்ணிங்க. அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார்.  பணம் வேணும்ன்னா சொல்லிடுங்க, தந்திடுறேன்… அதுக்காக மறுபடியும் உங்களை மீட் பண்ண முடியாது. டோர் ஓபன் பண்ணுங்க, நான் இறங்கணும்” என்று கூற,

“இப்ப எதுக்கு இந்தக் கோபம்..? ம்ம்ம்…” என்று மென்மையாகக் கேட்டான் அவன்.

‘கோபப்பட்டால் கோபப்படலாம். இவன் என்னானா இவ்ளோ மென்மையாக பேசுகிறான். ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் என்னை நெருங்கி வரான்னு நினைக்கிறேன். இது தப்பு..!! இதை வளர விடக் கூடாது…’  என்று நினைத்தவள், “சார்… ஒரு முக்கியமான விஷயம். என்னை ரொம்ப நாளா பாலோ பண்ணிட்டு இருக்கீங்கனு புரியுது. அது ஏன்னு எனக்குத் தெரியல, தெரியவும் வேணாம். ப்ளீஸ்… இனி மேல் தயவு செய்து என்னைத் தொந்தரவு  பண்ணாதீங்க. எனக்குப் பிடிக்கல…” என்றவளின் உடல் ஏனோ நடுங்கிற்று.

அவளது பேச்சை ரசித்த அகத்தியன், அவளது நடுக்கத்தை உணர்ந்து, அவளை மேலும் தொந்தரவு செய்ய விருப்பம் இல்லாமல் டோர் லாக்கை ரிலீஸ் செய்ய, அடுத்த நிமிடம் இறங்கி, அவனைத் திரும்பியும் பாராமல் வேகமாக நடந்து விட்டாள்.

அவனும் சிரித்துக் கொண்டே, “உன்னைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாதே பேபி..!! நான் மறுபடியும் மறுபடியும் உன்னைப் பார்க்க வருவேன்…” என்று கூறியவன், காரைக் கிளப்பிக் கொண்டே சீடியில்,

என் கண்ணுக்குள்ள

ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே

என்ன இறுக்கி மனச கட்டி

போட மறுத்தாலே ஹையோ

ஹையயோ

என்ற பாடலை ஒலிக்க விட்டு, அதை ரசித்துக் கேட்டபடி அங்கிருந்து கிளம்பினான்.

வருவாள்…

******

1