Views 967 

தேவதை 3…

‘இ…இவன் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்ன என் கால் காயத்துக்குக் கட்டு போட்டவன் தானே….? அப்போ இவ்வளவு நாளா, இவன் தான் என்னை ஃபாலோ பண்ணிட்டு இருக்கானா…? எதுக்கு…?’ அவளுக்குச் சுறுசுறுவென்று கோபம் தலைக்கேற, விருட்டென்று சாலையோர நடை பாதையில் நடக்க ஆரம்பித்து விட்டாள்.

காரில் அமர்ந்திருந்தவனோ, அடுத்த நிமிடம் காரில் இருந்து இறங்கி, “ஹலோ மிஸ்…  ஒரு நிமிஷம்…” என்றபடி அவள் பின்னே ஓடினான்.

அதில் பல்லைக் கடித்த ஆத்மிகா, நின்று திரும்பி, “யார் சார் நீங்க..? எதுக்கு என்னை இப்படி பாலோ பண்ணிட்டு வரீங்க..? உங்களுக்கு என்ன தான் வேணும்..? பார்க்க டீசென்ட்டா இருக்கீங்க, பண்றது ரோட் சைட் ரோமியோ வேலை. இதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங். இதோட நிறுத்திக்கோங்க. இன்னொரு தடவை உங்களை நான் பாத்தேன், ஈவ் டீஸிங்னு உங்க மேல போலீஸ்ல கம்பளைன்ட் கொடுக்க வேண்டி வரும்…” என்று படபடவெனப் பொரிந்து விட்டு அவனை முறைத்துப் பார்த்தாள்.

அவனோ, கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக் கொண்டு, அவளையே குறுகுறுவென்று பார்த்திருந்தான்.

‘நான் இவ்வளவு திட்டுறேன்..!! இவனுக்குக் கொஞ்சமும் உறைக்கலயா..? எப்படிப் பார்க்கிறான் பார்..!!’ என்று மனதில் கடுகடுத்தாள்.

“பேசிட்டியா..? நான் பேசலாமா..?” என்று அவன் கேட்க,  ‘அப்படி என்ன பேச போற’ என்பது போல் அசட்டையாக அவள் எங்கோ பார்த்தாள். 

அவனோ, “இப்ப நான் கூட்டிட்டுப் போற இடத்துக்கு நீ என் கூட வரணும். வா, வந்து கார்ல ஏறு. போகலாம்…” என்று சாதாரணமாகக் கூறியவனை அதிர்ந்து பார்த்த ஆத்மிகா,

“எ..என்ன என்ன சொன்னீங்க..?” என்றவளின் கால்கள் அனிச்சையாகப் பின்னால் நகர்ந்தது.

அவளது அதிர்ந்த முகத்தையும், எண்ண ஓட்டத்தையும் கவனித்த அந்த நெடியவன், “ஹேய்… தப்பா நினைக்காதே. உன் காலுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறேன்னு தான் சொன்னேன்…” என்று கூறி, அவன் சிரிக்கவும் தான் சற்று ஆசுவாசமாக மூச்சு விட்டவள்,

“உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி சார். நானே ஹாஸ்பிடல் போய்க்கிறேன். உங்களுக்கு அந்தச் சிரமம் வேணாம்” என்று அவள் கூறி முடிக்கவில்லை.

“இப்ப நீ என் கார்ல ஏறல, அடுத்த செக்கன்ட் எதைப் பத்தியும் கவலைப்படாமல், ரோடுனும் பார்க்காமல், உன்னைத் தூக்கி கார்ல உக்கார வச்சி கூட்டிட்டுப் போக என்னால் முடியும். சும்மா மிரட்டுறேனு நினைக்காதே. சொன்னதைச் செய்வேன்..!! அப்புறம் முக்கியமான விஷயம்… என்னை நினைச்சு நீ பயப்பட வேண்டாம். உன்னோட கற்புக்கு நான் கேரண்டி. தென், யாரோ ஒரு ஆட்டோக்காரன் கூடப் போறதுக்கு என்னோட கார்ல நீ சேஃப்பா வரலாமே..? என்னை நம்பி வரலாம்.  என் கூட வா” என்று நீளமாகப் பேசியவன், கடைசி வார்த்தையை மட்டும் சற்று அழுத்திக் கூறினான்.

அவனது வார்த்தையா..? இல்லை அவன் குரலில் இருந்த ஆளுமையா..? ஏதோ ஒன்று அவளை அவனது காரில் ஏற வைத்தது. அதில் சந்தோஷமாக விசில் அடித்தபடி காரைக் கிளப்பினான் அவன். 

கார் சீரான பாதையில் சென்று கொண்டிருக்க, காரில் இருந்த சீடியில் பாட்டைப் போட்டு விட்டான். 

என் கண்ணுக்குள்ள

ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே

என்ன இறுக்கி மனச கட்டி

போட மறுத்தாலே ஹையோ

ஹையயோ

என்று பாடல் ஒலிக்க, ஸ்டியரிங்கில் தாளம் போட்டபடி காரைச் செலுத்தினான் அவன்.

வெக்கத்துக்கே

வெக்கம் வரும் உன் மேனி

முழு பௌர்ணமி 

சொக்கனுக்கே

ஆச வரும் என்ன அழகு என்

கண்மணி

தை மாசம் தேதி

குறிக்கவா தெனம் தெனம்

கேள்வி கேக்குது 

உன் நெஞ்சுல ஊஞ்சல் ஆடவே

மஞ்சக்கயிற் ஏங்கி வாடுது

என்ற வரியில் அவன் அவளைத் திரும்பி பார்த்தான்.  அவளோ, “இது எப்படி நடந்தது..? இன்று காலை வரை இந்தக் கருப்பு நிற காரைப் பார்த்து பயந்து ஓடிய நானா, இப்பொழுது அதே காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். எது என்னை இப்படிச் செய்யத் தூண்டியது..?” என்று தனக்குள்ளேயே அவள் கேட்டுக் கொண்டு இருந்ததால், பாடலை முதலில் கவனிக்கவில்லை.

ஒருவா சோறும்

இறங்காம ஒரு நாளுமே

உறங்காம தடுமாறும் என்

மனசு கேக்குது எப்போ

உன்ன சேர்வது மானே

பித்தானாதன் ஆகுறேன்

நானே…

என் கண்ணுக்குள்ள

ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே

என்ன இறுக்கி மனச கட்டி

போட மறுத்தாலே ஹையோ

ஹையயோ

அப்பொழுது தான் கவனித்தாள், பாடலையும் பாடல் வரிகளையும்..!! அதில் திக்கென்று அதிர்ந்த ஆத்மிகா சட்டென்று பாட்டை அணைத்திருந்தாள்.

“ஏன் என்னாச்சு..? பாட்டு நல்லா தானே இருக்கு..?” என்று அவன் விஷமமாகக் கேட்க,

“ப்ளீஸ் சார்…” என்று கெஞ்சிய பிறகே, ‘சரி போனால் போகுது’ என்று விட்டு விட்டான்.

சிறுது நேரத்தில், “நாம வர வேண்டிய இடம் வந்தாச்சு. இறங்கலாமா..?” என்று அவள் புறம் குனிந்து கேட்டான்.

அதில், தாங்கள் எங்கு வந்திருக்கிறோம் என வெளியே எட்டிப் பார்த்தவளின் கண்கள் விரிந்தது. அது மிகவும் பிரபலமான பணக்காரர்கள் மட்டுமே வந்து போகும் பெரிய மருத்துவமனை.  ‘ஒரு சின்னக் காயத்துக்கா இங்க கூட்டிட்டு வந்து இருக்கான்..?’ என்று எண்ணியவள், அவனைத் திரும்பிப் பார்க்க, “இறங்குமா…” என்றான் கனிவுடன். 

அவளோ, தன் கைப்பையைத் துழாவி உள்ளிருந்து இரண்டு ஐம்பது ரூபாய் தாள்களை எடுத்து, “எ..என்கிட்ட வேற  பணம் இல்ல. இவ்ளோ தான் இருக்கு. இங்க ட்ரீட்மெண்ட் பார்க்கணும்ன்னா பணம் அதிகம் ஆகும். நான் எங்க வீட்டு பக்கத்தில இருக்கிற டாக்டர்கிட்டையே மருந்து போட்டுக்கிறேன். ப்ளீஸ் என்னை வீட்டுக்கிட்ட இறக்கி விட்டுடுங்க” என்றதும், இப்பொழுது முறைத்துப் பார்ப்பது அவன் முறையானது.

வருவாள்…

****