Views 957 

தேவதை 2…

அந்த வாகனத்தைப் பார்த்ததும், அவளுக்குக் கோபம் வர, சற்று முன், தான் எடுத்த முடிவை மறந்து அந்தக் காரை முறைத்துப் பார்த்தாள்.  பின்பு, அங்கே நின்றிருந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்து “பீச்க்குப் போங்க” என்றாள்.

மதிய நேரம் என்பதால், சுட்டெரிக்கும் வெயிலுக்குப் பயந்து மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. கடல் மண்ணில் கால்கள் புதைய நடந்தவள், கடல் அருகே வந்ததும் அப்படியே கீழே அமர்ந்தாள். அலைகடலென ஆர்ப்பரிக்கும் தன் மனதினைக் கடல் அன்னையிடம் கூறினால், மன பாரம் குறையும் என்று எண்ணினாளோ என்னவோ..? கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ..!! எதுவோ அவளது முதுகை துளைப்பது போல் இருக்க, சட்டென்று சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் அவளைப் பார்ப்பது போல் தோன்றவில்லை. “ம்பச்…” என்றபடி திரும்பியவளின் கண்ணில், அவளுக்கு வலது பக்கம் பத்தடி தள்ளி, ஜீன்ஸ் டீசர்ட்டில் கண்ணில் குளிர் கண்ணாடியுடன், கடலைப் பார்த்தபடி நின்றிருந்தான் ஒரு நெடியவன்.

‘இவன்தான் நம்மளைப் பார்த்து இருப்பானோ..?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அணிந்திருந்த குளிர் கண்ணாடியைக் கழட்டி விட்டு, அவளைப் பார்த்துப் புன்னகைத்தான் அவன்…

அவனது புன்னகையைக் கண்டு, ஏனோ உள்ளுக்குள் படபடத்து போன ஆத்மிகா, பட்டென்று தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். அதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்காமல் வேகமாக எழுந்தவள், உடையில் ஒட்டி இருந்த மணலைத் தட்டி விட்டு, நடக்க ஆரம்பித்தாள். பாதித் தூரம் தான் நடந்திருப்பாள், உள்ளுணர்வு ஏதோ கூற, நடந்தபடியே திரும்பிப் பார்த்தாள்.

அந்த நெடியவனும், அதே பத்தடி இடைவெளியில், அவளைப் பார்த்தவாறு வந்து கொண்டிருந்தான்.

இப்பொழுது அவளுக்கு மனதில் ஒருவித பயம் பிடித்துக் கொள்ள, ‘வேகமாக நடக்கிறேன் பேர்வழி’ என்று கீழே கிடந்த கல்லைக் கவனிக்காமல், அதில் தன் பாதத்தை இடித்துக் கொண்டு “ஷ் அம்மா” என்று கத்தியபடி கீழே அமர்ந்து, தனது பாதத்தைப் பிடித்துக் கொண்டாள். அந்தக் கல்லில் இடித்ததில், அவளது கால் பெருவிரலில், நகம் பிய்ந்து ரத்தம் மணலில் சொட்டியது.

அவள் அப்படிக் கத்தவும், சற்றுத் தள்ளி நடந்து வந்த அந்த நெடியவன், பற்றத்துடன் அவளின் அருகே ஓடி வந்து, “ஏய் என்னாச்சு?” என்று அவளிடம் கேட்டபடி ரத்தம் சொட்டும் விரலைப் பார்த்தவன், சட்டென்று அவளது காலைப் பிடித்து இருந்தான்.

யாரோ ஒருவன், தன் அருகில் வந்ததும் அல்லாமல், தன் பாதத்தை வேறு  தொடவும், அதைக் கண்டு அதிர்ந்தவள், அவனது கையை வேகமாகத் தட்டி விட்டாள்.

ஆனால், அவனோ அவளது காலை விட்டு விடாமல் தன் பேண்ட் பேக்கெட்டில் இருந்து கர்ச்சிப் எடுத்து, “ப்ளீஸ்… கொஞ்சம் அமைதியா இரு. ரத்தம் ரொம்ப வருது” என்றபடி அவளது பெருவிரலைச் சுற்றிக் கட்டுப் போட்டு விட்டான்.

அவனின் செயலைத் தடுக்கச் சொல்லி ஒரு மனம் கூறினாலும், ஏனோ இன்னொரு மனம், அதை ரசித்துத் தொலைத்து. தன் மனப்போக்கை எண்ணி அதிர்ந்த ஆத்மிகா, வலுக்கட்டாயமாக அவனது கையைத் தட்டி விட்டு, மெதுவாக எழுந்து நடக்க முயன்றாள். ஆனால் வலி உயிர் போனது. இருந்தும் அதை முகத்தில் காட்டாமல் நடந்தாள்.

அவள் நடக்க நடக்க, அவன் கட்டு போட்ட கர்ச்சிப்பை மீறி ரத்தம் கசிய ஆரம்பித்தது.  தொந்தரவு பண்ணாமல் அவளைப் பின் தொடர்ந்து வந்த அவன், அதைப் பார்த்து விட்டு, “ஒரு நிமிஷம்…” என்று அவளுக்கு முன் வந்து நின்றவன்,

“உன் காலை பாரு. ரத்தம் ரொம்ப வருது. வா ஹாஸ்பிடல் போகலாம். ஒரு ஊசி போட்டா செப்டிக் ஆகாது…” என்று ஏதோ காலம் காலமாய் அவளைத் தெரியும் என்பது போல் உரிமையுடன் அவளை மருத்துவமனைக்கு அழைத்தான்.

அவளோ, இப்பொழுது அவனை வெளிப்படையாக முறைத்தவள், அவனுக்குப் பதில் அளிக்காமல், கால் வலியையும் பொருட்படுத்தாமல், அவனைத் திரும்பியும் பாராமல் வேகமாக நடந்து, கடற்கரையின் சாலைக்கு வந்து நின்றவள், ஏதாவது ஆட்டோ வருமா என்று பார்த்தாள். பத்து நிமிடத்துக்கு மேல் ஆகி இருந்தது. எந்த ஒரு ஆட்டோவும் வரவில்லை. பெருவிரல் வலி வேறு விண்ணென்று தெறித்தது. 

அப்பொழுது அவள் முன் ‘கிரீச்’ என்ற சத்தத்துடன், மறுபடியும் வந்து நின்றது, அந்தக் கருப்பு நிற ஆடி கார்…. 

இந்த ஆடி கார் கடந்த சில நாட்களாகவே அவள் கண்ணில் பட்டுக் கொண்டு தான் இருந்தது. முதலில் அதை அவள் சட்டை செய்யவில்லை. ஆனால், எப்பொழுது அந்தக் கார் தன்னைத்தான் பின் தொடர்ந்து வருகிறது என்று அவளுக்குப் புரிய ஆரம்பித்ததோ, ஒருவித எச்சரிக்கை உணர்வுடன், முடிந்த வரை கவனமாக இருக்க ஆரம்பித்தாள் ஆத்மிகா. அப்படி இருந்தும், அந்தக் கார் ஏதாவது ஒரு நேரத்தில் சரியாக அவள் கண்ணில் பட்டு விடும்.  அப்படித்தான் இன்று காலையிலும், அவள் இன்டெர்வியூ போய் விட்டு வந்து, தன்னை மாய்த்துக் கொள்ளச் சாலையின் ஓரத்தில் வந்து நின்ற நேரத்திலும், சரியாக வந்து அவளது எண்ணத்தைத் திசை திருப்பியது. இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், இத்தனை நாள் ஆகியும், அந்தக் காரை உள்ளிருந்து இயக்குவது யார் என்று அவளுக்குத் தெரியாது.

ஏனோ மனதில் சிறு பயம் எழ, தன்னையும் அறியாமல் பாதுகாப்புக்காக, சற்று முன் தன் காலுக்குக் கட்டு போட்டவன் நிற்கிறானா என்று தேடினாள். ஆனால் அவனைக் காணவில்லை.

‘என்ன செய்வது..? ஆட்டோவும் இல்லை’ என்று எண்ணியபடி, சுடிதார் துப்பட்டாவின் நுனியைத் திருகியபடி அப்படியே நின்றிருந்தாள். அதே நேரம், என்றும் இல்லாமல் அதிசயமாக, அந்தக் காரின் கண்ணாடி கீழிறங்கியது. உள்ளே அமர்ந்திருந்தவனை விழி விரித்துப் பார்த்தாள் ஆத்மிகா..!!

வருவாள்

****