Views 1,337 

தேவதை 16..

தன்னை விட்டு அவன் விலகிச் செல்ல வேண்டும் என்று அவள் அப்படிப் பேசினாலும், அது தானே நிதர்சனம்..!! ஆனாலும், அவன் நிஜமாகவே சென்று விட்டான் என்பதை ஏனோ அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

மக்களின் ஏளனங்களும், கேலி, கிண்டல்களைக் கேட்கும் போதெல்லாம், தான் இப்படி ஒரு பிறப்பெடுத்தற்கு எத்தனையோ நாட்கள் கண்ணீர் வடித்திருக்கிறாள்.

ஆனால், அதை எல்லாம் தாண்டி, ‘உன்னை உனக்காகக் காதலிக்கிறேன் என்று கூறியது மட்டும் அல்லாமல், சில சமயம் அவளைக் காத்தும் இருக்கிறான் அவன்’ இப்படிப் பட்ட அவனது காதலை ஏற்க முடியாமல் இருக்கும் தன் நிலையை அறவே  வெறுத்தாள். கதறி அழ வேண்டும் போல் இருக்க, அடுத்த நிமிடமே வாய் விட்டு அழுதாள் ஆத்மிகா. 

அவளது தாயும், தமக்கையும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. சமாதானமும் கூறவில்லை. இப்பொழுது மட்டும் அல்ல, எப்பொழுது அவள் அவர்களிடம் வந்து சேர்ந்தாளோ, அன்றில் இருந்து இன்று வரை, எதற்காகவும் அவளை வற்புறுத்தியது இல்லை என்பதால், இப்பொழுதும் அவளே மனம் தெளிந்து  நல்ல முடிவு எடுக்கட்டும் என்று அவள் போக்கிலேயே விட்டு விட்டனர்.

இப்படியே இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. அன்று  குழந்தை சுஜியை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் பார்க்கிற்கு வந்திருந்தாள் ஆத்மிகா. 

சுஜி மற்ற குழந்தைகளுடன் விளையாட ஆரம்பிக்க, ஆத்மிகாவோ தன் ஈர விழிகளால் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள். கடந்த இரண்டு வாரங்களாகக் கடைக்குச் செல்லும் போதெல்லாம், அகத்தியனின் கருப்பு ஆடி கார் எங்கேயாவது தென்படுகிறதா..? என்று அவளது பார்வை தாமாகச் சுற்றிப் பார்க்கும். அப்படி ஏதும் இல்லை என்றதும் மனம் வலிக்கும். இது,  தான் எடுத்த முடிவு தான் என்றாலும், மனது அதிகமாகவே  வலித்தது.

அவனைப் பற்றி யோசித்தபடி அவள் அமர்ந்திருக்க, அவளது அருகில் யாரோ வந்து அமர்ந்தனர். தனது அருகில் யாரோ அமரவும், அது ‘யாரோ எவரோ’ என்றெண்ணியவள், திரும்பிப் பாராமல் சற்றுத் தள்ளி அமர்ந்தாள்.

ஆனால், அந்த உருவம் அவளை மேலும் நெருங்கி அமர்ந்தது. அதில் ஆத்மிகாவுக்குக் கோபம் வர, திட்டுவதற்கு வேகமாகத் திரும்பிப் பார்த்தவளின் விழிகளில் மின்னல் அடித்தது.

“ஹாய் பேபி… எப்படி இருக்கே..? உன்னைப் பார்த்து ரெண்டு வாரம் ஆச்சுல்ல. அதான் இப்ப பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்..” என்று கூறி வசீகரமாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தான் அகத்தியன்.

‘தான் காண்பது கனவா இல்ல நினைவா..? அன்று சொல்லாமல் கொள்ளாமல் சென்றவன், இன்று நிஜமாகவே என்னைத் தேடி வந்திருக்கிறானா..? இல்ல உன் பேச்சு என்னை மாற்றிருச்சு, அதான் வேற பொண்ணு பார்த்துட்டேன்னு சொல்ல வந்திருக்கானா..?’ அதை நினைக்கும் போதே கண்ணில் நீர் கோர்த்தது. சட்டென்று முகத்தைத் திருப்பி, அதை அவனுக்குக் காட்டாமல் மறைத்துக் கொண்டாள் ஆத்மிகா.

“என்ன சைலெண்டா இருக்கே..? உடம்புக்குச் சரி இல்லையா..?” என்று கேட்டது மட்டும் அல்லாமல், உரிமையுடன் அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். இதற்கு முன் இருமுறை அவளைத் தொட்டு இருக்கிறான்தான்..!!  அந்த இரு முறையும் அவளுக்குக் காயம் பட்டிருந்தது. ஆனால், இப்பொழுது அவனது இந்தத் தொடுகை ஜில்லென்ற உணர்வை கொடுத்தது. அதை அவளையும் அறியாமல் கண்களை மூடி ரசித்தாள் ஆத்மிகா.

“ம்ம்ம்… காச்சல் இல்ல ஜில்லுன்னு தான் இருக்கு. அப்புறம் எதுக்கு ஒரு மாதிரி இருக்கே..?” என்று அவளிடம் அக்கறையுடன் கேட்டான்.

‘ரெண்டு வாரமா எங்கே போனீங்க..?’ என்று கேட்க துடித்த நாவை கட்டுப்படுத்திக் கொண்ட ஆத்மிகா, சட்டென எழுந்து குழந்தையைத் தேடினாள்.

அதைக் கவனித்த அகத்தியன், “அதோ..!! சுஜி பேபி அங்கே நிக்கிறா பாரு” என்று கூறவும், குழந்தையை நோக்கி அவள் செல்ல முயன்றாள்.

அவளின் கைப் பிடித்துத் தடுத்த அகத்தியன், “அவளை விடு ப்ரீயா விளையாடட்டும்.  நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இப்படி உக்கார்” என்றான்.

‘என்ன பேச போறான்..? சற்று முன் நான் மனதில் நினைத்ததை அவன் வாய் மொழியாகச் சொல்லப் போறானா..? ஆனால், அதைக் கேட்கும் தெம்பு அவளிடம் இல்லை. மேலும் அவன் முன்னே உடைந்து அழுது விடுவாள் என்பதால், “இல்ல… நாங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சு. அம்மா தேடுவாங்க” என்று அங்கிருந்து செல்வதிலேயே அவள் குறியாய் இருந்தாள்.

“ஓகே… பட் எனக்காக ஒரு அஞ்சி நிமிஷம் வெய்ட் பண்ண முடியுமா..? ப்ளீஸ்…” என்று அவளிடம் கெஞ்சினான்.

ஏனோ, அவனது அந்தக் கெஞ்சல் அவளை அங்கே மீண்டும் அமர வைத்தது.

“தேங்க்ஸ்” என்றவன், இப்பொழுது எழுந்து நின்று தன் பேண்ட் பேக்கெட்டில் கைகளை விட்டுக் கொண்ட அகத்தியன், “ஆத்மிகா… எனக்குப் பத்து வயசு இருக்கும் போது தான் என் பேரெண்ட்ஸ் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்து போனாங்க. எனக்குன்னு யாரும் இல்ல. சோ, அதுக்கு அப்புறம் எல்லாம் ஹாஸ்டெல் வாசம் தான்..!! படிச்சு முடிச்சு வந்து அப்பா சொத்தைப் பொறுப்பேற்றேன். அதைப் பலமடங்கா இப்ப பெருக்கியும் இருக்கிறேன். ஆனாலும், என் மனசுல ஒரு வெறுமை..!! சில சமயம் இதெல்லாம் யாருக்காக எதுக்காக அப்படின்னு தோண ஆரம்பிக்கும். ஆனா, எந்த ஒரு சூழ்நிலையிலும் வழி தவறி போகக் கூடாது என்பதில் மட்டும் உறுதியா இருந்தேன்.

ஒருநாள் எதிலுமே பிடிப்பு இல்லாம, நான் பாட்டுக்கு வண்டி எடுத்துட்டு ரொம்ப நேரம் சென்னையைச் சுத்தி வந்து ஒரு இடத்தில் நிறுத்தினேன். அது வடபழனி முருகன் கோவில்..!! ஏதோ ஒரு உந்துதல்… என்னையும் அறியாமல் கோவில் உள்ள வந்தேன். அங்க தான் ஒரு தேவதையை பார்த்தேன். அவளை எங்கேயோ பார்த்த பீல், பச்சை கலர் தாவணியில் அவ்வளவு அழகா இருந்தா..!! அவளைப் பார்த்த அந்த  நொடியே என் மனசுக்குள்ள ஏதோ ஒரு குரல்… உன் வாழ்க்கையின் பிடிப்பு இவதான்… நீ தேடுற நிம்மதியும் இவகிட்டதான் இருக்குன்னு என் உள்ளுணர்வு சொல்லிகிட்டே இருந்துச்சு… என்னையும் அறியாம என் மனசு அவகிட்ட போயிடுச்சு. எனக்கானவள் அவள்தான்னு அந்த நிமிஷம் நான் முடிவு பண்ணேன். 

அதுக்கு அப்புறம், அவள் யாரு, எங்க இருக்கான்னு டிடக்டிவ் வச்சி விசாரிச்சேன். அப்ப எனக்குக் கிடைச்ச தகவல் என்னைக் கொஞ்சம் திடுக்கிட வச்சுது என்னவோ உண்மை..!!

ஆனா அதுக்காக, ‘அந்த ஒரு காரணத்துக்காக’ அவளை விட முடியும்ன்னு எனக்குத் தோணல. அப்படி விட்டுட்டா, நான் அவளை என் மனசில் நினைச்சதுக்கு அர்த்தமே இல்லாமல் போயிரும். அப்பவும், என் மனசு அவள் உனக்கானவள்தான்னு சொல்லிட்டே இருந்தது. மனசு சொன்னதுக்கப்புறம் அதைத் தட்ட முடியுமா..? 

அதுக்குப் பிறகு என் முழு நேர வேலை அவளை பாலோ பண்றது மட்டும் தான்..!! அப்படித்தான் அவ மால்ல வேலை பார்க்கிறான்னும் தெரிஞ்சிகிட்டேன். அதுக்கு அப்புறம், அவளை என்னோடவே வச்சி பார்க்கணும்னு ஆசை வந்தது. அதனால நானே என்னை அவ கிட்ட கடற்கரையில் வச்சி வெளிப்படுத்தி என் லவ்வைச் சொன்னேன். ஆனா, அவ இந்த லவ் கடைசி வரைக்கும் நிலைக்குமான்னு என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டுட்டா” என்றவன், திரும்பி ஆத்மிகாவைப் பார்த்தான்.

அவளும் அவனைத்தான் கண்ணீர் வழிய பார்த்திருந்தாள்.

“எனக்குத் தெரியும்..!! அவ அன்னைக்குப் பேசுனது எல்லாம் என்னை விலக்கி வைக்கணும்ன்னு தான். ஆனா அவ ஒண்ணை மறந்துட்டா. குப்பை தொட்டியில அனாதையா கிடந்த குழந்தையை எடுத்து வளர்த்தவ, என் உயிரணுவில் உருவான குழந்தையை எப்படி வெறுப்பா…? 

அவ என்னதான் என்னை விலக்கி வைக்க நினைச்சாலும், என்னைப் பிடிக்கலன்னு ஒரு வார்த்தை சொல்லலையே..? அதுக்குப் பதிலா அவ கண்ணுல ஒருவித வலியைப் பார்த்தேன். அந்த வலியே சொல்லிச்சு, அவளோட காதலை. .!! 

அன்னைக்கு அவ கேட்ட கேள்வியின் நோக்கம் வேறாக இருந்தாலும், அந்தக் கேள்விகள் எல்லாம் ஒரு வகையில் நடைமுறையில் நடக்க சாத்தியம்  இருக்குத் தானே..? 

ஓருவேளை அவ என்கூட வாழ்ந்ததுக்கப்புறம், அவ  சொல்ற மாதிரி ஏதாவது நடந்துஅதனால அவ என்னை விட்டு பிரியுற சூழ்நிலை வந்தாலோஇல்ல என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தினாலோ  சத்தியமா அவளையும் கொன்னுட்டு  அடுத்த நொடியே  அவ போன இடத்துக்கு நானும் போயிடுவேன்…” என்றவனின் குரலில் அவ்வளவு தீவிரம்… 

இதெல்லாம் நடக்க கூடாதுன்னா அவ என்னை விட்டு போக கூடாது…  எனக்கு அவ வேணும். நான் அவ கூடச் சந்தோசமா வாழணும். அவளும் என் கூட எந்த வித உறுத்தலும் இல்லாமல், கடைசி வரை, என் கூடவே இருக்கணும். அதுக்கு என்ன தீர்வுனு யோசிச்சேன். கிடைச்ச பதிலில், சட்டென ஒரு முடிவெடுத்து, இந்தப் பிரச்சினைக்கான முடிவை ஒரு முடிவுக்கும் கொண்டு வந்து விட்டேன்…”  என்றவன், ‘என்ன முடிவு’ என்பதையும் அவன் சிரித்துக் கொண்டே கூறினான்.

அவன் கூறியதைக் கேட்ட ஆத்மிகா, தன் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து எழுந்து நின்று விட்டாள்.  அவனின் முடிவைக் கேட்டு அவளது உடலில் அப்படி ஒரு நடுக்கம் வந்தது. ‘எந்த ஒரு ஆண்மகனும் செய்ய துணியாத காரியத்தை அசால்டாகச் செய்து விட்டு வந்திருக்கிறான். எதுக்காக இப்படி ஒரு காரியத்தைச் செய்தான்..? எனக்காகக்காவா..?’ என்றபடி அவனை அதே அதிர்ச்சியுடன் பார்த்தவள்,

அகத்தியன் அருகே சென்று, அவனது சட்டையின் காலரைப் பிடித்து உலுக்கி, “ஏன் இப்படிச் செஞ்சீங்க…? எதுக்காக இப்படிச் செஞ்சீங்க…? ஏன்ப்பா…? எல்லாம் எனக்காகவா..?” என்று கேட்ட ஆத்மிகா, அவனது நெஞ்சிலே விழுந்து கதறி விட்டாள். 

வலது கையால் மென்மையாக அவளை அணைத்துக் கொண்ட அகத்தியன், “பிகாஸ் ஐ லவ் யூ ஆத்மிகா…”  என்றான் உள்ளார்ந்த காதலுடன்..!!

“அதான் ஏன்..?  என்னைப் பெத்தவங்களும், கூடப் பிறந்தவங்களும் நான் ஒரு சாபக்கேடு, அவமான சின்னம்ன்னு என்னை  வீட்டை விட்டு துரத்த நினைச்சாங்கஎன் அப்பா ஒருபடி மேல போய் எனக்கு விஷம் வச்சி சாகடிக்க நினைச்சாரு… ஆனா, நீங்க என்னை காதலிச்சதும் இல்லாம, யாரும் செய்ய துணியாத காரியத்தை, இப்படித் தகுதி இல்லாத எனக்காக செஞ்சிட்டு வந்து நிக்கிறீங்களே…? அப்படி என்கிட்ட என்ன இருக்குனு என் மேல் இவ்வளவு காதல் வச்சி இருக்கீங்க..?” என்று அழுது கொண்டே கேட்டாள்.

“ஆத்மிகா… காரணத்தோட ஒருத்தர் மேல வைக்கிறதுக்குப் பேர் அன்பு இல்ல.  ஏன்னு தெரியாமலே அவங்க மேல பாசம் வர்றதுக்குப் பேர் தான் உண்மையான அன்பு..!! அதே போல்தான் என் காதலும்இப்பவரை எப்படி எதனால் உன் மேல காதல் வந்துச்சுன்னு எனக்கே தெரியாத ஆச்சர்யம்ஆனா அந்த பீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு… 

அப்புறம் நீ எது தகுதின்னு நினைக்கிறியோ, அந்தத் தகுதி இப்ப என்கிட்டயும் இல்ல. இனி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதில், உனக்கு எந்தத் தடையும் இல்லையே..?” என்று கேட்டான். 

அவளோ வார்த்தைகள் இன்றி அமைதியாக இருக்கவும்,

“இதுக்கு மேல என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியாது பேபி. நீ எனக்கு வேணும். நாம நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம். கையோட நமக்கே நமக்குன்னு ஒரு குழந்தையையும் தத்தெடுத்துக்கலாம். என்ன சொல்ற..?” என்று அதிலேயே குறியாக இருந்தான் அகத்தியன்.

அகத்தியனின் எல்லையில்லா காதலில் சுகமாய் கரைந்துக் கொண்டிருந்த ஆத்மிகா “என்னால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்..?” என்று கண்ணீர் மல்க அவனை அண்ணாந்து பார்க்க,

“டோண்ட் பீல் பேபி… உன் மேல நான் வச்ச காதலுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்ல. அதனால எனக்கு இது ஒரு விஷயமாவே தெரியல. என் காதல் கைக் கூடணும்ன்னா நான் என்ன வேணா செய்யத் தயங்க மாட்டேன்…” என்றான்  உறுதியுடன்… 

அதுதான் ஏன்…?” என்றாள் மீண்டும் கண்ணீருடன்ஏனெனில் அவன் செய்து வந்த  காரியத்தை இன்னுமே அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை… 

“பிகாஸ் ஐ லவ் யூ பேபி…” என்றவன், அவளின் நெற்றியில் முதல் முத்தத்தைப் பதித்தான் ஆத்மிகா எனும் தேவதையின் காதலன் அகத்தியன்..!!

***************************************

4
1