Views 804 

தேவதை  15

“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீங்க என்ன பேசுறீங்க..?” என்று முறைத்தவள், ஒரு பெருமூச்சு வெளியேற்றி விட்டு, “ஓகே… உங்களை நான் லவ் பண்றேன்னு வச்சிக்கோங்க. அப்புறம்..?” என்று கேட்டாள்.

அவளது கேள்வியில் சிரித்தவன், “அடுத்து உடனே கல்யாணம் தான்..!!” எனப் பட்டென்று கூறவும்,

ஒரு நொடி திகைத்த ஆத்மிகா, “அப்போ ஒண்ணு பண்ணுங்க. என்னைப் பற்றி நான் யாருங்கிறதை மறைக்காமல், உங்க  அப்பா, அம்மா, அண்ணன், அக்கா  இப்படி எத்தனை உறவுகள் இருக்காங்களோ, அவங்க எல்லார் கிட்டையும் உண்மையைச் சொல்லி நாளைக்கே எங்க வீட்ல வந்து பேசுங்க…” என்று அவள் கூறவும், காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தி இருந்தான் அகத்தியன்.

அவன் அப்படி நிறுத்தவும், கார் கதவைத் திறந்து இறங்கி நின்ற ஆத்மிகா, “பெஸ்ட் ஆப் லக் மிஸ்டர் அகத்தியன்..!!” என்றவள், அங்கே கடந்து சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவை அழைத்து அதில் ஏறி சென்று விட்டாள். அகத்தியானோ யோசனையுடன் அப்படியே அமர்ந்து விட்டான்.

மறுநாள் காலையில், “அக்கா அக்கா…” என்று அழைத்தாள் சுஜி.

கையில் ஏதோ ஒரு புத்தகத்தை வைத்து, அதைப் புரட்டியபடி கட்டிலில் கவிழ்ந்து படுத்திருந்த ஆத்மிகா, “என்ன தங்கம்… அக்காக்கு என்ன கொண்டு வந்து இருக்கீங்க..?” என்று கேட்டாள்.

“அக்கா… அம்மா கூப்பிட்டாங்க…” என்று குழந்தை கூறவும், “இதோ வரேன்…” என்றவள், புத்தகத்தை மூடி வைத்து விட்டு, அவிழ்த்து இருந்த முடியை கொண்டை போட்டவாறு நைட்டியுடனே ஹாலுக்கு வந்தவள், அங்கு அமர்ந்திருந்தவனைப் பார்த்ததும் அவளது நடை அப்படியே நின்றிருந்தது.

ஆம்..!! நேற்று அவள் கூறியது போல் அகத்தியன் அவளைப் பெண் கேட்டு வந்திருந்தான்.

அவளோ, அவனை அதிர்ந்து பார்க்க, அகத்தியனோ அவளைப் பார்த்துக் கொண்டே, “எனக்கு அப்பா அம்மா அப்புறம் கூடப் பிறந்தவங்கன்னு யாரும் கிடையாது. நான் வளர்ந்தது எல்லாம் ஹாஸ்டெல்ல தான். அப்பா சம்பாதித்த சொத்தை எல்லாம் எங்க குடும்ப வக்கீல் தான் பார்த்துட்டு இருந்தார். நான் படிச்சு முடிச்சு வந்ததும் என்கிட்ட ஒப்படைச்சுட்டார். எனக்கு முப்பத்தி நாலு வயசு ஆகுது.  ஆத்மிகாவை வடபழனி முருகன் கோவில்ல தான் முதன் முதலா பார்த்தேன். பார்த்ததும் பிடிச்சிடுச்சு.  அதை உங்க பொண்ணு கிட்ட சொன்னேன், அவதான் உங்ககிட்ட பேச சொன்னா…” என்று பேச்சு சரஸ்வதியிடம் இருந்தாலும், அவனது பார்வை ஆத்மிகாவிடம் தான் இருந்தது.

அவரோ, “என்ன சொல்றதுன்னே தெரியல தம்பி. எங்களைப் பத்தி, அமி பத்தி உங்களுக்கு…” என்று அவர் இழுக்கவும்,

“எல்லாம் எனக்குத் தெரியும். தெரிஞ்சிதான் ஆத்மிகாவைக் கைப் பிடிப்பதில் உறுதியா இருக்கேன். இதுல எந்த மாற்றமும் இல்ல…” என்று அவன் அழுத்தமாகக் கூற, அவரோ மகளைப் பார்த்தார்.

பின்பு ஆஷாவை அவர் அழைக்க, ஆத்மிகாவின் மனமோ ‘திக் திக்’ என்று அடித்துக் கொண்டது.

ஆஷா வந்ததும், அவளிடம் கண்ணைக் காட்ட, அவளோ உறைந்து போய் நின்றிருந்த தங்கையை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.

உள்ளே வந்ததும், “ஏய் யாருடி அது..? ஹீரோ மாதிரி இருக்கார். அவரை முன்னாடியே உனக்குத் தெரியுமா..? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல பார்த்தியா..?” என்று குறை பட்டுக் கொண்டாலும் தங்கைக்கு வேறு உடையை மாற்றி விட்டாள்.

ஆனால் ஆத்மிகாவோ, ‘நான் நினைச்சது என்ன..? இங்கே நடப்பது என்ன..? அவங்க வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்று நம்பித்தானே நேற்று அப்படி அவனிடம் கூறி விட்டு வந்தேன்’ ஆனால் அவளது எண்ணத்திற்கு மாறாக, தனக்கு யாருமே இல்லை, அதனால் நானே பெண் கேட்டு வந்திருக்கிறேன்’ என இப்படி வந்து நிற்பான் என அவள் கனவா கண்டாள்..?

“வா அமி, போகலாம்…” என்று ஆஷா அழைக்க, அதில் தன்னுணர்வுக்கு வந்த ஆத்மிகா,

“அக்கா… நான் அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றாள்.

“சரி, நீ இங்கேயே இரு. அவர்கிட்ட சொல்லி இங்க வரச் சொல்றேன்…” என்று விட்டு அவள் செல்ல முயன்றாள்.

“இல்லக்கா… மேல மொட்டை மாடில வச்சி பேசணும்…” என்றதும், “சரிம்மா…”  என்றவள்,

“அமி… நாம என்ன பாவம் செஞ்சோமோ..? நம்மளைப் பெத்தவங்களே ஒதுக்கி வைக்கிற பிறப்பு பிறந்து இருக்கோம். அப்படி இருக்கும் போது, நீ தான் வேணும்னு ஒருத்தர் நம்ம வீடு தேடி வந்து இருக்கார். அவரைப் பார்க்கவும் நல்லவரா தெரியுறார். வாய்ப்பை விட்டுடாதே. நான் என்ன சொல்ல வரேன்னு உனக்குப் புரியும்…” என்றவள், சென்று விட்டாள்.  

மொட்டை மாடியில் காற்று சிலுசிலுவென்று வீச, காற்றில் கலைந்த முடியை, தன் விரல் கொண்டு கோதியபடி திரும்பிப் பார்த்தான் அகத்தியன்.

சற்றுத் தள்ளி நின்று அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் ஆத்மிகா. அவளது அருகில் வந்தவன்,

“இதெல்லாம் என்னது அகத்தியன்..?” என்று அவள் கேட்க,

“எதைக் கேக்குறே..? உன்னைப் பெண் கேட்டு வந்ததையா..? நீ தானம்மா சொன்னே. அதான் அடுத்த நாளே வந்துட்டேன். எப்படி..?” என்று கேட்டுக் கண் சிமிட்டினான்.

“நேத்து அவ்ளோ தூரம் எடுத்துச் சொல்லியும் புரிஞ்சிக்க மாட்டேன்னு சொன்னா எப்படி..? ஏன் சார் இந்த உலகத்தில் பெண்களுக்கா பஞ்சம்..? போயும் போயும் என்னைப் போய்…” அவள் முடிக்கவில்லை.

“எஸ்… பெண்களுக்குப் பஞ்சமில்லைதான். அப்சரஸ் மாதிரி எத்தனையோ பெண்களை நான் தினமும் பார்க்கிறேன்தான். ஆனா, எந்தப் பெண்ணும் என் மனசை கவரலையே..? இந்தத் தேவதை தான் என் கண்ணுக்கு அழகா தெரியுறா. நான் என்ன பண்ணட்டும்..?” எனக் கூலாகக் கேட்டான் அவன்.

“ம்பச்… இதெல்லாம் பேச நல்லா இருக்கும். ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்ல. போதும்..!! உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதைப் போய் முதல்ல பாருங்க சார்…” என்று அவள் கடுப்புடன்  கூறவும்,

“இப்போதைக்கு என்னோட வேலை, உன்னைக் கல்யாணம் பண்ணி, என் கூட என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகணும். தட்ஸ் இட்…” என்று முடித்தான் அவன்.

இப்படிப் பேசுபவனை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் உள்ளுக்குள் கலங்கி நின்றாள் ஆத்மிகா. அப்பொழுது அவளுக்கு ஒரு விஷயம் பிடிபட்டது. ‘இதைச் சொன்னால் கண்டிப்பாக என்னைத் திரும்பியும் பார்க்க மாட்டான். 

அவனை விலகிச் செல்ல வைக்க இதைத் தவிர வேற வழியில்லை’ என்று  எண்ணினாளே தவிர, இப்பொழுது வரை அவனிடம், “உங்களை எனக்குப் பிடிக்கவில்லை என்றும், எதற்காக என்னை வற்புறுத்துறீங்க என்றும்” அவள் ஒரு வார்த்தை அவனிடம் கேட்கவில்லை என்பதை அவள் உணரவில்லை. ஆனால், அகத்தியன் அதை நன்றாகவே உணர்ந்திருந்தான்.

அவனை நேருக்கு நேர் பார்த்தவள், “ஓகே… உங்க பாயிண்ட்கே வரேன்.  கல்யாணம் பண்ணி உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவீங்க. அதுக்கு அப்புறம்…” என்று அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“அப்புறம் என்ன..? முதல் ராத்திரி தான்..!!” என்று அவன் கொஞ்சமும் அசராமல் கூற, அவளோ அதிர்ந்து பார்த்தாள்.

“என்ன அப்படிப் பார்க்கிறே..? இதானே நம்ம உலக வழக்கம்..!! கல்யாணம் பண்ணிட்டு என்னால சாமியார் மாதிரி எல்லாம் வாழ முடியாதுமா. இப்பவே சொல்லிடுறேன்…” என்றவன், அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தான்.

அதில் படபடத்த இதயத்தை முகத்தில் காட்டாமல், “ஓகே… இதான் உலக நியதின்னு நீங்களே சொல்லிட்டீங்க.  அதுக்கு அப்புறம்…” என்று மீண்டும் அவள் அழுத்திக் கேட்க, அவள் கூற வருவது புரியாமல், இப்பொழுது அவளை அவன் கேள்வியாகப் பார்த்தான்.

“என்ன சார் அமைதியாயிட்டிங்க..? இப்பதான் உலக வழக்கம், அததான் நான் ஃபாலோ பண்ணுவேன்னு சொன்னிங்க. ஆனா நான் என்ன கேட்க வரேன்னு உங்களுக்குப் புரியலையா..?”

“….”

அவன் அமைதியாக இருக்கவும், “நான் சொல்லவா சார்..? நீங்க சொன்ன மாதிரி  புதுமணத் தம்பதிகள்ங்கிற ஜோஷ்ல நமக்குள் எல்லாம் நல்லாவே நடக்கும். அதுல எந்தக் குறையும் இருக்காது. ஆனா, அது எவ்வளவு நாளைக்குத் தெரியுமா..? குழந்தைன்னு ஒன்னு வேணும்னு தோன்றும் வரைக்கும் தான்..!! அதுக்கு அப்புறம் ஒரு குழந்தையைத்   தத்தெடுக்கலாமானு நான் கேட்க, உடனே நீங்க உனக்குத்தானே குறை. எனக்கு இல்லையே..? அதனால வாடகை தாய் மூலமா பெத்துக்குறேன்னு சொல்ல, அடுத்தப் பத்தாம் மாசம் வேற ஒரு பெண் வயிற்றில் உங்க உயிரணுக்களால் உருவான குழந்தையும் பிறக்கும்.

அது உங்க ஜாடையிலோ இல்ல அந்தக் குழந்தையைப் பெத்தெடுத்த பொண்ணு ஜாடையிலோ தான் இருக்கும். ஒவ்வொரு தடவையும் நீங்க அந்தக் குழந்தையைக் கொஞ்சுறதைப் பார்க்கும் போது, என் மனசு என்ன பாடு படும் தெரியுமா சார்..? என்ன தான் இருந்தாலும், அது வேறு ஒரு ‘பெண்’ பெற்ற குழந்தைனு தான் என் மனசு அடிச்சிக்கும்…” என்று அவனைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்த ஆத்மிகா திரும்பி நின்று தொலை தூரத்தை வெறித்துப் பார்த்தவள்,

“அப்படி ஒரு எண்ணம் என் மனசுல வந்ததும், உங்ககிட்ட இருந்தும் குழந்தைகிட்ட இருந்தும் கொஞ்சம் கொஞ்சமா விலகத் தோணும். அந்த விலகல் உங்களுக்குத் தப்பா தெரியும். நமக்குள்ள மனஸ்தாபம் வரும். ஒரு கட்டத்துல, நானா இல்ல அந்தக் குழந்தையானு உங்களுக்குள்ள கேள்வி வரும் போது, உங்க ரத்தத்தில் உருவான குழந்தை தான் உங்களுக்கு முக்கியமா படும். அடுத்து, பிரிவு தான் இதுக்கு முடிவுன்னு தோணும். இப்ப நீங்க சொல்லும் இந்தக் காதல் அப்போ காணாமல் போயிருக்கும்.

ஏன்னா, இந்த மாதிரி விஷயத்தைச் சாதாரண ஒரு பெண்ணாலேயே ஜீரணிக்க முடியாது எனும் போது, என்னால் மட்டும் எப்படிச் சார் முடியும்..?

நீங்க கல்யாணம் பண்ணிகிட்டீங்கன்னா இதுதான் நடக்கும் சார்..!! அதுனால பின்னாடி கஷ்டப்படுறதுக்கு, இப்பவே பிராக்டிக்கலா யோசிச்சு நாம விலகிடலாம்…” என்று முடித்தவளின் கண்கள் கலங்கி இருந்தது.

ஏனெனில், இப்படிப் பட்ட அன்புக்காக எத்தனையோ நாள் ஏங்கி இருக்கிறாள். அது அவளைத் தேடி வந்தும் அதை ஏற்க முடியாமல் தவிக்கிறாள். கலங்கிய கண்களை அவன் அறியாமல் துடைத்து விட்டுத் திரும்பி அவனைப் பார்க்க, அவன் நின்ற இடம் காலியாக இருந்தது.

வருவாள்…

******