Views 749 

தேவதை  14..

எவ்வளவு நேரம் அழுகையில் கரைந்தாளோ..? அவளது மனம் ஒரு முடிவுக்கு வந்தது. “இதை வளர விடக் கூடாது. எப்படியாவது அவங்க கிட்ட நிதர்சனத்தை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கணும்…” என எண்ணிக் கொண்டாள். கூடவே ‘புரிந்து கொள்வானா..?’  என்ற கேள்வியும் எழுந்தது. அதற்குப் பதிலோ, ‘இல்லை’ என்று தான் வந்தது.

ஒருவாரம் கடந்திருக்க, அகத்தியனின் அலுவலகத்தில் இருந்து வேலையில் சேர  சொல்லி உத்தரவு வந்து மூன்று நாள் ஆகி இருந்தது. 

அவளுக்கு வேலை கிடைத்ததில் வீட்டில் எல்லோருக்கும் அவ்வளவு சந்தோஷம்..!! குழந்தை சுஜி கூட ஆத்மிகாவின் கன்னத்தில் முத்தமிட்டுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்.

ஆனால், அவளுக்குத்தான் அங்கு வேலைக்குச் செல்ல மனமில்லை. எப்படி வீட்டில் சொல்வது..? என்று யோசித்துக் கொண்டு இருந்தாள். ‘இதை இதற்கு மேலும் தள்ளி போட கூடாது’ என்று எண்ணியவள், வேறு உடைக்கு மாறி, அந்த அப்பாயின்மெண்ட் லெட்டரை எடுத்துத் தன்  கைப் பையில் வைத்து விட்டு, “அம்மா… நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்” என்று குரல் கொடுத்தவள், வீதியில் இறங்கி நடந்தாள். தெருமுனைக்கு வந்து நின்று ஆட்டோவின் அருகே செல்ல போகும் நேரம், அவளை உரசுவது போல் வந்து நின்றது கருப்பு நிற ஆடி கார்..!!

அதில் துள்ளி விலகி நின்ற ஆத்மிகா அந்தக் காரை முறைத்துப் பார்த்தாள். அது அகத்தியனின் கார் என்று தான் அவளுக்குத் தெரியுமே..!! இருந்தாலும் முறைப்பை மாற்றவில்லை.

அவனோ ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடியே அவளுக்குக் கார் கதவைத் திறந்து விட்டு “ஏறு பேபி…” என்றான்.

“முடியாது” என்று தான் கூறப் போனாள். ஆனால், அவனிடம் பேசத்தானே கிளம்பி வந்தாள். அதனால் மறுக்காமல் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இருவரும் அமைதியாகவே அமர்ந்திருந்தனர். 

“வெல்… என்ன முடிவு எடுத்திருக்க?” என்று அந்த அமைதியைக் கலைத்தான் அகத்தியன்.

அவளோ, தன் கைப் பையில் இருந்த அப்பாயின்மெண்ட் லெட்டரை எடுத்து அவனிடம் நீட்ட, அதை வாங்காமல் “என்னமா இது..?” என்று கேட்டான்.

“நீங்க அனுப்பினது தான். இதை ரிட்டன் பண்ணத்தான் வந்துட்டு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க. சோ, உங்க கிட்ட குடுக்குறேன்…” என்றாள் அவள்.

“ம்ம்ம் அப்புறம்…” அவனது குரலில் விஷமம் வழிந்தது. 

அதைப் புரிந்து கொண்ட ஆத்மிகா, “சார்… நேரடியாகவே நான் விஷயத்துக்கு வரேன். என்கிட்ட அப்படி என்ன இருக்குனு லவ் பண்றேன்னு சொல்றிங்க..? படிச்சவர் தானே..!! பெரிய கம்பெனி எல்லாம் வச்சிருக்கீங்க. கொஞ்சமும் யோசிக்க மாட்டீங்களா..? நீங்க லவ் பண்ற அளவுக்கு நான்லாம் வொர்த் இல்ல சார். அதனால இனிமேல் என்னை பாலோ பண்றது, அங்கே இங்கேன்னு   கார்ல வந்து சீன் காட்டுறது, இதெல்லாம் வேண்டாம். ஏதோ ரெண்டு தடவை உதவி செஞ்சிங்க, அதுக்கு நன்றி வேணா சொல்லிக்கலாம். லவ் எல்லாம் பண்ண முடியாது சார்…” படபடவெனப் பொரிந்து விட்டாள்.

ஆனால் அவனோ நிதானமாக, “ம்ம்ம் அப்புறம்…” என்று மறுபடியும் கேட்டான்.

“நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்..? அப்புறம் அப்புறம்ன்னுட்டு இருக்கீங்க. ஒழுங்கா நிதானமா நிதர்சனத்தை யோசிங்க சார். நீங்க பண்றது உங்களுக்கே சிரிப்பு வரும். அப்புறம் நான் இருக்கும் பக்கம் கூட நீங்க திரும்பிப் பார்க்க மாட்டீங்க… ” என்றவள்,

“நான் பேச வேண்டியதை பேசிட்டேன். வண்டியை இங்கேயே நிறுத்துங்க. நான் இறங்கிக்கிறேன்…” என்றாள்.

“நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே பேபி. அதுக்குள்ள நிறுத்த சொன்னா எப்படி..?” என்றவனின் குரலில் அவ்வளவு குறும்பு இருந்தது..!!

“என்னது..?” என்று அதிர்ந்து கேட்டவள், அவன் வார்த்தையின் பொருள் உணர்ந்து, அவனை முறைத்துப் பார்த்தாள்.

“இப்ப எதுக்கு நெற்றிக் கண்ணைத் திறக்குறே பேபி..? நீ இவ்ளோ நேரம் பேசினியே, நான் கம்முன்னுதானே இருந்தேன்..? இப்ப என் டேர்ன். நான் பதில் சொல்ல வேண்டாமா..?” என்று கூறிச் சிரித்தவன்,

“அன்னைக்கு ஆபிசில “எங்களுக்கும் மனசு உண்டு. அதுல நிறைய ஆசைகள், கனவுகள் உண்டு. அந்தக் கனவுகள் நினவாகணும்ன்னா எங்களுக்கு ஒரு வாய்ப்பு வேணும்…” அப்படிப் பேசினவ  இப்ப என்னன்னா நீயே உன்னைக் குறைச்சுப் பேசிட்டு இருக்கே. ஏன் ஆத்மிகா..? எதற்காக இந்தத் தாழ்வு மனப்பான்மை..? ஒருவேளை நான் உன் பின்னாடி சுத்துறதால என்னைத் தப்பானவனா நினைக்கிறியா..?” என்று நிதானமாகக் கேட்டான். அதில் வேகமாகத் திரும்பி அவன் முகம் பார்த்தாள் ஆத்மிகா. 

வருவாள்…

*****