Views 828 

தேவதை  13…

அதற்குள் வெளியே சென்றிருந்த சரஸ்வதி வீட்டுக்கு வந்து விட, ஹாலில் நின்றிருந்த இன்ஸ்பெக்டரையும், அதிர்ந்து நின்றிருந்த ஆத்மிகாவையும் பார்த்து விட்டு அவளிடம் வேகமாக விரைந்தார்.  

“அம்மாடி.. அவர் எனக்குத் தெரிஞ்சவர் தான். நான் பேசிக்கிறேன். நீ போய்ப் பக்கத்துத் தெருவுல இருக்கும் கடைக்குப் போய், கொஞ்சம் காய்கறி வாங்கிட்டு வாம்மா…” என்று அவளை அங்கிருந்து அனுப்ப முயன்றார்.

ஆனால் அந்த இன்ஸ்பெக்டரோ, “என்ன சரசு… எனக்குத் தெரியாம புது ஆளு எல்லாம் பிடிச்சு இருக்கே..” என்று கோணல் சிரிப்புடன் கேட்டவன், “இந்த மாச மாமூல் வேணாம் சரசு. அதுக்குப் பதில் இந்தப் பொண்ணை ரெண்டு நாளு அனுப்பி வை” என்று விட்டு அங்கிருந்த சோபாவில் சட்டமாக அமர்ந்து கொண்டான்.

ஆத்மிகாவுக்கோ என்ன நடக்கிறது என்று முதலில் ஒன்றும் புரியவில்லை. புரிந்த நொடி சரஸ்வதியைப் பார்த்தாளே ஒரு பார்வை..!! அதில் அதிர்ந்தவள், இன்ஸ்பெக்டரிடம், “சார்… உங்களுக்குத் தேவை மாமூல். அது மட்டும் பத்தி பேசுங்க. தேவை இல்லாம வேற ஏதாவது பேசுனீங்கன்னா, நான் எங்க சங்கத்தில பேச வேண்டி இருக்கும்…” என்று மிரட்டினாள் சரஸ்வதி.

சங்கம் என்றதும் சற்றுச் சுதாரித்தான் அந்த இன்ஸ்பெக்டர். ஏனெனில் இவர்களை ஓரளவுக்குத்தான் மிரட்ட முடியும். அவர்களும் கொஞ்சம் போலீசுக்கு  அடங்குவார்கள் என்றாலும், ஓரளவிற்கு மேல் அவர்களை   எதற்காகவாவது வற்புறுத்தினால் என்றால், சங்கம் அது இது என்று அவனது வேலைக்கே உலை வைத்து விடுவார்கள் என்பதால் சரஸ்வதியை முறைத்துப் பார்த்தவன், ஆத்மிகாவையும் ஒரு  பார்வை பார்த்தான். 

என்றாவது ஒருநாள் தன்னிடம் மாட்டாமலா போய் விடுவாள்..? அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று வன்மமாக நினைத்தவன், மாமூலை மட்டும் வாங்கிக் கொண்டு சென்று விட்டான். 

அந்த இன்ஸ்பெக்டர் சென்றதும், சரஸ்வதியிடம் தான் புரிந்து கொண்டது சரிதானா என்று கேட்டாள் ஆத்மிகா. அதற்கு அவர் மறைக்காமல் சொன்ன பதிலில் அதிர்ந்தவள், அடுத்த நிமிடம், “அம்மா, அன்னைக்கு நீங்க மட்டும் எனக்கு ஆதரவு தரலன்னா, நான் எப்பவோ சில வக்கிர புத்தி உள்ள மனித மிருங்கங்களால் சீரழிஞ்சி போயிருப்பேன். என்னைக் காப்பாற்றி என்னை உங்க பொண்ணு போலப் பார்த்துக்கிட்டீங்க. அதுக்கு உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டு இருக்கேன். நீங்க நினைச்சிருந்தா என்னையும் இதுல இழுத்திருக்க முடியும். ஆனா நீங்க அதைச் செய்யல. அதுவே என் மனதில் உங்களை ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கத் தூண்டுது. அப்படியிருக்கும் போது, என் அம்மாவான நீங்க இப்படியொரு காரியத்தைப் பண்றீங்கன்னு  கேள்விபட்டதும் என்னால எப்படிமா ஏத்துக்க முடியும்..?” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே உள்ளே வந்தாள் ஆஷா. 

ஆத்மிகாவின் பேச்சில் அழுதபடி நின்றிருந்த சரஸ்வதியிடம் சென்று என்னவென்று விசாரித்தவள், அவர் கூறியதைக் கேட்டதும் ஆத்மிகாவின் அருகே வந்து,

“அமி… நாங்க ஒண்ணும் விரும்பி இந்தக் காரியத்தைச் செய்யலம்மா. எங்களுக்கு வேற வழி தெரியல. எங்க வீட்ல உள்ளவங்களும் எங்களோட உணர்வுகளைப் புரிஞ்சிக்காம துரத்தி விட்டுட்டாங்க. சாகவும் பயம்..!! பசி கொடுமை வேற..!! இந்த நாலு ஜான் வயித்துக்காக நாங்க இப்படிப் பண்ண வேண்டியதா போச்சு…” என்றவள், 

“இது நமக்கான உலகம் இல்லமா. இங்க நாம எவ்வளவு தான் நல்லவங்களா வாழ நினைச்சாலும், இந்தச் சமுதாயம் நம்மளை நிம்மதியா வாழ விடாது…” என்று அவள்  கூறிக் கொண்டு இருக்கும் போது,

“அதுக்காக இப்படி ஒரு பொழப்பு நடத்தி தான் உயிர் வாழணுமா..? அதுக்குச் செத்துப் போகலாம். நம்ம மாதிரி ஆட்கள் சிலர், இந்த மாதிரி தவறான வழியில் போறதால்தான், நம்ம ஒட்டு மொத்த சமுதாயத்தையும், ஆண் பெண் என்ற மனுசங்க சமுதாயம் கேவலமாகவும், ஏதோ தீண்ட தகாதவர்களாகவும் பார்க்கிறாங்க. இந்த மனுசங்க முன்னாடி நாம நல்லவிதமா வாழ்ந்து நிமிர்ந்து நிக்கணுமே தவிர எப்பவுமே தாழ்ந்து போக கூடாது…” என்று படபடவெனப் பொரிந்து தள்ளினாள்.

“அமி… இப்படிப் பேச நல்லா இருக்கும். ஆனா நம்மளை எந்த ஒரு விஷயத்திலும் முன்னேறவும் விட மாட்டாங்க, நம்மளை மதிக்கவும் மாட்டாங்க. நாம வாங்கிட்டு வந்த சாபம் அப்படி..!! அம்மாவைத் தப்பா நினைக்காதே அமி. அவங்களும், ஏன் நானுமே, இதை  விருப்பப்பட்டுச் செய்யல, இந்தச் சமுதாயம்தான் எங்களை இப்படி மாத்திடுச்சு” என்று விரக்தியாகக் கூறியவள்,

“நீ வந்த பிறகு தான் எங்க வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பு வந்து இருக்கு அமி. அன்னைக்கு நீ விரக்தியா பேசினதும், உன்னைப் பெரிய ஆளாக்கியே தீரணும்னு, எங்களுக்குள்ள ஒரு ஆசை வந்து இருக்கு… ” என்று ஆஷா கூறவும்,

“அப்புறம் என்ன ஆஷாக்கா..? நான் இருக்கேன் உங்களுக்கு..!! படிச்சு முடிச்சு ஒரு நல்ல வேலைக்குப் போய், உங்களை எல்லாம் நான் நல்லபடியா பார்த்துக்கிறேன். பிளீஸ், தயவு செய்து இதெல்லாம் வேண்டாமே..? விட்டுடுங்க…?” என்று அவர்களிடம் கெஞ்சினாள். 

அந்தச் சிறுபெண்ணின் நம்பிக்கை கூடத் தனக்கு இல்லாமல் போனதை நினைத்து வெட்கியவள். “சரி அமி… இனிமேல் உனக்குப் பிடிக்காததை நாங்க பண்ணவே மாட்டோம்…” என்றவள் சரஸ்வதியிடம்,

“அம்மா… இந்த வீடை வாடகைக்கு விட்டுட்டு நாம மூணு பேரும் வேற எங்கேயாவது போயிடலாம்.  அமி படிச்சு முடிச்சு வேலைக்குப் போனதுக்கு அப்புறம், நிச்சயமா நம்ம வாழ்வாதாரம் உயரும் என்று நம்பிக்கை இருக்கும்மா. அதுவரை கிடைக்கிற வேலையைச் செய்வோம். கண்டிப்பா தப்பான வேலை மட்டும் பண்ண வேண்டாம்…” என்ற ஆஷா கூறினாள்.

“நிஜமா தான் சொல்றீங்களாக்கா!!?? இப்ப எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா..?  நீங்க வேணா பாருங்க. எனக்கு நல்ல வேலை கிடைக்கும். அப்போ உங்களை உக்கார வச்சு நான் சாப்பாடு போடுவேன்…” என்று சந்தோசமாகக் கூறிய ஆத்மிகா ஆஷாவைக் கட்டிக் கொண்டாள்.

ஆஷா கூறியது போல், அடுத்தச் சில நாட்களில், வேறு இடத்தில் இடம் பெயர்ந்தார்கள். 

அடுத்து வந்த நாட்கள் மாதங்களாகக் கடந்து வருடங்களாகவும் கடந்தது. கல்லூரி படிப்பில் அடி எடுத்து வைத்திருந்தாள் ஆத்மிகா. அப்பொழுது அவளை அடிக்கடி கல்லூரிக்கு அழைத்துச் சென்றதில் நல்ல பழக்கம் ஆனார் ஆட்டோ ஓட்டுநர் பாலாஜி.

அவரிடம், ‘தனக்கு ஏதாவது வேலை வாங்கித் தர முடியுமா..? இங்க எனக்கு யாரையும் தெரியாது’ என்று கேட்டுக் கொண்டதால், அவர் தனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டு, அதனால் கிடைத்ததுதான் பீனிக்ஸ் மாலில் இருக்கும் கே.எப்சியில் கேஷ் கவுண்டர் வேலை..!! 

காலையில் கல்லூரிக்குச் சென்று விட்டு மாலையில் வேலைக்கும் செல்ல ஆரம்பித்தாள். எப்பொழுதாவது, அந்த இன்ஸ்பெக்டர் ரோந்து பணியில் இருக்கும் போது பார்க்க நேர்ந்தால், அவன் கண்ணில் படாமல் மறைந்து சென்று விடுவாள். (அப்படிக் கவனமாக இருந்தும் சில நாட்களுக்கு முன்பு   இன்ஸ்பெக்டரின் கண்ணில் தென்பட்டாள் ஆத்மிகா. அவளை மிரட்டி அடிபணிய வைக்கும் நேரம் அகத்தியனால் காப்பாற்றப்பட்டு விட்டாள்…)

ஆத்மிகா படிப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து முதல் மாணவியாக வந்தாள்.  ஒருநாள் கல்லூரி முடித்து வரும் போது, கையில் குழந்தையுடன் வந்து நின்றவளை கேள்வியாக இருவரும் பார்த்தனர்.

அவளோ, “இந்த மனுஷங்களுக்கு நம்ம மாதிரி ஆட்களைத்தான் பிடிக்காதுன்னு நினைச்சேன்‌. ஆனா இந்தப் பிஞ்சு குழந்தையையும் பிடிக்காதுன்னு இன்னைக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். குப்பை தொட்டியில கிடந்த குழந்தையை அப்படியே விட்டுட்டு வர மனசில்ல. அதான் தூக்கிட்டு வந்துட்டேன். இனிமேல் இந்தக் குழந்தை நம்ம கூடத்தான் இருக்கப் போகுது…” என்றதும் ஆஷா அந்தக் குழந்தையை ஆசையுடன் தூக்கிக் கொண்டாள். அந்தக் குழந்தைக்கு “சுஜி” என்று பெயரிட்டு, தங்கள் உலகத்தில் அந்தக் குழந்தையையும் சேர்த்துக் கொண்டார்கள். 

ஆத்மிகா கல்லூரி படிப்பு முடிந்ததும், அதன் பிறகு மேற்படிப்பான எம்.காமை  கரெசில் முடித்து விட்டு, பல கம்பெனிகளில் வேலை தேட ஆரம்பித்தாள். அப்பொழுது தான், ஆஷா அன்று கூறியது எவ்வளவு உண்மை என்றும், தங்களை எவ்வளவு கீழ்த்தரமாக நினைக்கிறார்கள் என்றும் அவளுக்குப் புரிய வந்தது. ஒவ்வொரு தடவையும் நேர்முகத் தேர்வில் அவளுக்குக் கேட்கப்படும் கேள்விகளை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாது. 

வீட்டிற்கு வந்தவுடன் அதை ஆஷாவிடம் கூறி விட்டு, அறைக்குள் முடங்கிக் கொள்வாள். அவள் நினைத்திருந்தால் தன் அடையாளத்தை மறைத்து வேலை தேடி இருக்க முடியும். ஆனால், அதைச் செய்யாமல், தனது படிப்புக்கு என்றைக்காவது ஒரு நல்ல வேலை கிடைக்கும், அதன் மூலம் தனக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில், விடாமுயற்சியாக வேலை தேடும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டு இருந்தாள் இருக்கிறாள். ஆனால், அதன் பிறகான வாழ்க்கையைப் பற்றி மட்டும் அவள் கிஞ்சித்தும் யோசித்துப் பார்க்கவில்லை.

ஆனால் இன்றோ, “என்னைப் பற்றி முழுமையாகங தெரிந்து என்னை ஒருவன் காதலிக்கிறேன் என்று சொல்கிறான். ஆனால் அந்த ஒருவனைத் தன்னால் ஏற்க முடியவில்லையே..?” என்ற கழிவிரக்கத்தில் துடித்துக் கொண்டிருந்தாள் ஆத்மிகா..!!

வருவாள் …

****