Views 774 

தேவதை  12..

அகத்தியனின் கார் கண்ணை விட்டு மறையவும், அங்கே இருந்த குப்பை தொட்டியின் பின்னே ஒளிந்து இருந்த ஆதவன் வெளியே வந்தான்.

ஆம்..!! அந்த நால்வரிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள அகத்தியனிடம் உதவி கேட்டான். ஆனால் அவனிடம் இருந்த துப்பாக்கியை பார்த்து பயந்து விட்டான் ஆதவன். மேலும் அவனைப் பார்க்க ஜிம் பாடி போல் இருக்க, இவனும் அவர்களைப் போல் இருந்து விட்டால்,  தன்னால் அவனை எதிர்க்க முடியவே முடியாது என்று எண்ணியவன், சட்டென்று மற்றொரு பக்க கார் கதவைத் திறந்து  இறங்கியவன், குப்பை தொட்டியின் பின்னே ஒளிந்து கொண்டான்.

இப்பொழுது எங்கு எந்தத் திசையில் செல்வது என்று தெரியவில்லை. சற்றுத் தொலைவில் மீண்டும் ஒரு கார் வருவது போல் தெரியவும், ஒருவேளை அந்தக் கார்க்காரன் தானோ என எண்ணியவன், ஏதோ ஒரு திசையில் ஓட ஆரம்பித்தான்.

வானமும் இருள் விலகி சற்று விடிய ஆரம்பித்தது. “அம்மா நான் கிளம்புறேன்” என்றபடி கதவைத் திறந்து வெளியே வந்தாள் ஆஷா.

அங்கே, அவர்களின் வீட்டு வாசலில், ஒரு சிறு பையன் படுத்து இருப்பதைப் பார்த்துக் கோபம் கொண்டவள், “ஏய்… யார் நீ..? எதுக்கு இங்க வந்து படுத்து இருக்கே..?” என்று அவனை எழுப்பினாள்.

சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த சரசுவும் அவனைப் பார்க்க, அந்தச் சிறுவனும் மெதுவாகக் கண் விழித்து எழுந்து அமர்ந்தான்.

பார்க்க, ஒரு பெண் பிள்ளைக்கு பேண்ட் ஷர்ட் போட்டு விட்டால் எப்படி இருப்பானோ..? அப்படி இருந்த ஆதவனைப் பார்த்து இருவரும் வியந்தனர். பின்பு,

“தம்பி யாருப்பா நீ..? ஏன் இங்க வந்து படுத்து இருக்கே…?” 

அவனோ, அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்து விட்டு, “நானும் உங்களை மாதிரி தான். எங்க வீட்ல என்னை என்னை…” என்று மேற்கொண்டு கூற முடியாமல் முகத்தை மூடிக் கொண்டு அழுதவனை ஆறுதல் படுத்தியவர்கள், 

“அதுக்காக வீட்ல கோவிச்சுகிட்டு வந்துட்டியா..? இப்படிலாம் பண்ண கூடாது. என்ன இருந்தாலும் அவங்க உனக்கு அப்பா அம்மா தானே..?”  என்று எடுத்துக் கூறினார் சரஸ்வதி. 

“இல்ல… எனக்கு யாருமே இல்ல…” என்று மேலும் அழுதவன், பின்பு அவர்களைப் பார்த்து, “என்னை உங்க கூடவே வச்சிக்கிறீங்களா..?” என்று பாவமாகக் கேட்டான்.

அவனது அழுகை அவர்களின் சிறுவயது வாழ்க்கையை ஞாபகபடுத்தியதோ..? சட்டென்று ஆதவனை வாரி அணைத்துக் கொண்ட சரஸ்வதி, “அழாதேம்மா… உனக்கு நாங்க இருக்கோம்” என்று இருகரம் நீட்டி வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார்.

ஒருவாரம் கடந்திருந்தது. அந்த ஒரு வாரமும் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்த ஆதவனை எழுப்பி, “நீ இப்படியே இருக்கப் போறியா இல்ல பெண்ணா மாறப் போறியா..?”  என்று கேட்டார் சரஸ்வதி.

அவன் தனது ஆசையை உடனே கூற, அவரோ, சிறு யோசனையுடன், “சரி, இன்னும் ஒரு வாரம் போகட்டும்” என்றவர், ஆஷாவிடம் வந்து ஏதோ பேசினார். பின்பு அவர்களுக்கு என்று இருக்கும் சங்கத்தில் பேசி, அவர்கள் மூலம் சிறிது பணம் புரட்டியவர்கள், தங்களிடம் இருந்த பணத்தையும் போட்டுச் சின்னதாக விழா போல் ஏற்பாடு செய்தனர்.  

அவர்களின் சமூதாயதில் இருக்கும் சிலரை அழைத்து அனைவருக்கும் விருந்து வைத்தனர். ஆதவனின் விருப்பப்படி ‘ஆத்மிகா’ என்று பெயரிட்டு, “இன்று முதல், நீ விரும்பிய வாழ்க்கையை உன் விருப்பப்படி சந்தோஷமாக வாழலாம்” என்று அனைவரும் ஆசீர்வதித்துச் சென்று விட, மறுநாளே ஆத்மிகாவிற்கு மருத்துவனையில் அறுவை சிகிச்சை நடை பெற்றது. அதன் பிறகு ஆதவன், ஆத்மிகாவாக, ஒரு பெண்ணாக மாறி இருந்தாள்.

மேலும் சிறிது நாட்கள் சென்றது… 

ஆத்மிகா வீட்டில் சோம்பி இருக்கப் பிடிக்காமல், ஆஷாவிடம் தனக்கும் ஏதாவது ஒரு வேலை வாங்கிக் கொடுக்குமாறு கூறினாள். அப்படி இல்லையென்றால், அவள் வேலைக்குச் செல்லும் இடத்திலேயே தனக்கும் வேலை வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டாள்.

ஆத்மிகா அப்படிக் கேட்கவும் அதிர்ந்த ஆஷா, சரஸ்வதியை அழைத்து விஷயத்தைக் கூற, “அதெல்லாம் எதுக்கு அமி..? இப்ப உன்னை யாரு ஏதும் சொன்னாங்களா என்ன..? நீ வேலைக்கு எல்லாம் போக வேண்டாம்டா…” என்று கூறினார்.

அவளோ, “நான் படிச்சி பெரிய கம்பெனியில் வேலைக்குப் போகணும்ன்னு  ஆசைப்பட்டேன். அது நடக்காம கனவா போயிடுச்சு. இப்ப உங்களுக்கு வேற பாரமா ஆகிட்டேன். அதான் உங்க சுமையைக் குறைக்கலாம்ன்னு  வேலைக்குப் போக கேட்டேன்…” என்றவள், அவளது அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.

அவளது கல்வியின் மீதான ஆர்வமும், நிராசையான பேச்சையும் கேட்டு அவளது மனவலியை உணர்ந்தவர்கள், அவளாவது தான் விருப்பப்பட்ட வாழ்க்கை வாழட்டுமே என்ற எண்ணத்துடன், அன்று இரவே ஆத்மிகாவிடம் பேசியவர்கள், அடுத்த வந்த சில வாரத்திலேயே அவளை நல்ல பள்ளியிலும் சேர்த்து விட்டனர்.

ஆத்மிகா தான் ஆசைப்பட்ட படிப்பை மீண்டும் படிக்க ஆரம்பித்தாள். இயற்கையிலேயே பெண் உருவம் கொண்டதால், ஆத்மிகா ஒரு திருநங்கை என யாருக்கும் தெரியாமல் போனது.  இப்படிச் சந்தோஷமாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது தான், சரஸ்வதி மற்றும் ஆஷாவைப் பற்றிய ஒரு உண்மை அவளுக்குத் தெரிய வந்தது.

அன்று பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஆத்மிகா, பள்ளிச் சீருடையில் இருந்து சாதாரண மாற்றுடைக்கு மாறிக் கொண்டிருந்த நேரம், அவர்களது வீட்டில் ஓர் ஆண் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்க, ‘யார் வந்து இருக்காங்க..?’ என்று நினைத்தபடி வெளியே எட்டிப் பார்த்தாள்.  

அங்கே ஹாலில் காக்கி உடையில் நின்றிருந்த இன்ஸ்பெக்டரைக் கண்டு நெற்றிச் சுருக்கியவள், “சார் யாரைப் பார்க்கணும்..?” என்று கேட்டாள்.

ஆனால், அந்த இன்ஸ்பெக்டரோ ஆத்மிகாவை மேலும் கீழும் பார்த்து, “நீ யாரு..? தொழிலுக்குப் புதுசா..? பார்க்க இவ்வளவு அழகா வேற இருக்கே..!! உனக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு ரேட்டு..?” என்று கேட்டு அவளை அதிர வைத்தான்.

வருவாள்…

*****