Views 709 

தேவதை  11…

“ஆதவா!!  எ..என்ன பேசுறே..? கனவு ஏதும் கண்டியா..?” என்றவரின் குரலில் தடுமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. ஏனெனில், சற்று முன் தனத்திடம் அதைச் செய்யச் சொல்லித்தான் வற்புறுத்தினார் அவனின்  தந்தை.

அன்னையின் அருகே வந்த ஆதவன், அவரின் கண்ணீரைத் துடைத்து விட்டு, “ஆமாம்மா… கனவு தான் கண்டேன். மத்தவங்க என்னைப் புரிஞ்சிக்கலனாலும், என்னைப் பெத்தவங்களும் என் கூடப் பிறந்தவங்களும் என்னைப் புரிஞ்சிப்பாங்கன்னு ரொம்பக் கனவு கண்டுட்டேன்…” என்று விரக்தியாகச் சொன்னான்.

அவனது தாயோ, மகனுக்கு ஆதரவாகப் பேச முடியாத நிலையில், கையாலாகாதத்தனத்துடன், “ஆதவா…” என்று அழுகையுடன் அழைத்தவருக்கு, அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை. 

அன்னை நிலைமையை உணர்ந்த ஆதவன், “நீங்க அழாதீங்கம்மா… எனக்கும் நம்ம குடும்பச் சூழ்நிலை என்னன்னு ஓரளவுக்குப் புரியுதும்மா. இனி உங்களுக்கு என்னால் எந்தத் தொந்தரவும் இருக்காது. நீங்க, அப்பா அக்கா, அண்ணா எல்லோரும் சந்தோசமா இருக்கலாம். நானும் பழைய மாதிரி இருக்கப் போறேன்…” என்று கூறினான்.

மகனின் கன்னத்தை வருடியவர், “நிஜமா தான் சொல்றியாப்பா…?” என்று இதயம் துடிக்கக் கேட்டார் அவனது அன்னை. என்னதான் இருந்தாலும் பெற்றவர் ஆயிற்றே..!! அவரால் எப்படித் தன் குழந்தைக்கு விஷம் வைக்க மனம் வரும்..? அப்படிச் செய்தால் அவர் பெண்ணாய் பிறந்ததற்கு என்ன அர்த்தம்..?

“நிஜமா தான் சொல்றேன். போய்ப் படுங்கம்மா…” என்றவன், தனது அறைக்குச் சென்று விட்டான். அறைக்கு வந்தவனுக்குத் தூக்கம் வரவில்லை. அவனது தந்தை கூறிய விஷயங்கள் மட்டும் தான் நினைவில் இருந்தது. சற்று முன் அன்னையிடம் கூறியது போல், ‘இனிமேல் யாருக்கும் தொந்தரவாக இருக்கக் கூடாது’ என்று எண்ணிக் கொண்டான். கூடவே, ‘நான் எதற்காகச் சாகணும்..? அப்படி என்ன தப்பு செஞ்சிட்டேன்..? நானும் மனுஷன் தான்..!! எனக்கும் வாழணும்னு ஆசை இருக்கு. அப்படி வாழணும்ன்னா, இனிமேலும் இங்கே இருக்கக் கூடாது’ என்ற எண்ணமும் அவனுக்கு எழுந்தது.  என்ன செய்வது என்று யோசித்தவன், மீண்டும் மணியைப் பார்க்க, இப்பொழுது மூன்று என்று காட்டியது. 

தனது அறையில் தான் சேமித்து வைத்திருந்த பணத்தைத் தேடி எடுத்தான். 

அன்னை மற்றும் தந்தை அவ்வப்போது கொடுக்கும் பத்து இருபது ரூபாயை சேர்த்து வைத்திருந்தான். அதை எடுத்துக் கொண்ட ஆதவன்,

‘வாழணும்… வாழ்ந்து பார்க்கணும். நானும் இந்தச் சமுதாயதில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்’ என்ற ஆசையில், யாருக்கும் தெரியாமல், அப்படியே தெரிந்தால் கூடச் சந்தோசம் தான் படுவார்கள் என்ற விரக்தி மனநிலையில், அவனது வீட்டில் இருந்து வெளியேறினான். 

ஏதோ ஒரு தைரியத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாலும், எங்குச் செல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனாலும், யாராவது தனக்கு உதவ மாட்டார்களா..? என்று நினைத்து நடந்து கொண்டே இருந்தான்.

ஒரு சந்தின் திருப்பத்தில் நான்கு பேர் நடந்து வந்து கொண்டிருந்தனர். குடித்திருப்பார்கள் போலும்..!! அவர்களின் நடையில் வித்தியாசம் தெரிந்தது. அவர்களைக் கண்டு கொள்ளாமல் ஆதவன் வேகமாக நடக்க, அவனைப் பார்த்த ஒருவன், “ஏய் தம்பி… இங்க வா” என்று குழறலாக அழைத்தான். ஆனால், ஆதவனுக்கோ அவர்களைப் பார்த்ததும் பயம் பிடித்துக் கொள்ள, நிற்காமல் அங்கிருந்து வேகமாக நடந்தான். “டேய்… நான் கூப்பிடுறேன், நிக்காம போறே. நில்லுடா…” என்று அவர்களில் ஒருவன் கத்த ஆரம்பிக்க, அப்பொழுதும் ஆதவன் நிற்கவில்லை.

“டேய் வாங்கடா… இன்னைக்கு அவனை விடக் கூடாது. அவன் போட்டு இருக்கிறது பையன் டிரெஸ் மாதிரி இருந்தாலும், பார்க்க பொண்ணு மாதிரி இருக்கான்டா…” என்று ஒருவன் சொல்ல,

“யாரா இருந்தா என்ன..? நமக்குச் சரியான வேட்டை இன்னைக்கு..!!” என்று வக்கிரமாகக் கூறி விட்டு ஆதவனைப் பிடிக்க ஓடினர்.

பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்த ஆதவன், அவர்கள் தன்னைத் துரத்தி வரவும், அவர்களின் கையில் சிக்கக் கூடாது என்று நினைத்தவன், வேகமெடுத்து ஓட ஆரம்பித்தான். அவர்களும் விடாமல் துரத்தி வந்தார்கள்.

ஒரு கட்டத்தில், எதிரே வந்த வாகனத்தைக் கவனிக்காமல், ஆதவன் அதன் மேல் மோதும் நொடியில், அந்தக் கார் சுதாரித்து பிரேக் அடித்து நின்றது. ஆனாலும் ஆதவனோ தடுமாறி கீழே விழுந்திருந்தான்.

காரில் இருந்து வாட்ட சாட்டமாக இறங்கிய ஒருவன், கீழே விழுந்து கிடந்த ஆதவனின் அருகே வரவும், அங்கே வந்து சேர்ந்தனர் அந்த நால்வரும்.

அவர்களைப் பார்த்துப் பயந்த ஆதவன், கார்க்காரனின் சட்டையைப் பிடித்துக் கொண்டு “சார்… எனக்குப் பயமா இருக்கு. ப்ளீஸ் காப்பாத்துங்க…” என்று அவனிடம் கெஞ்சினான்.

“டேய்… அது எங்களுக்குத் தெரிஞ்ச பையன் தான். நாங்க பார்த்துகிறோம். நீ போய்டு, இல்ல இங்க நடக்குறதே வேற” என்று மிரட்டினான் அந்த நால்வரில் ஒருவன்.

அவனது பேச்சிலும், ஆதவனின் நடுக்கத்திலும் என்ன நடந்து இருக்கும் என்று அந்தக் கார்க்காரனுக்கு ஓரளவுக்குப் புரியவும், ஆதவனை எழுப்பிக் காரில் பின் பக்கம் அமர வைத்து விட்டு, முன் பக்கம் வந்து டேஷ் போர்டில் இருந்த தனது துப்பாக்கியை எடுத்து அந்த நால்வரையும் நோக்கி நீட்டியவன், “இப்ப யார் ஓடுறாங்கன்னு நான் பார்க்கிறேன்…” என்று கூறினான்.

அவ்வளவு தான்..!! துப்பாக்கியைப் பார்த்ததும் சற்று முன் ஏறிய போதை எல்லாம் நொடியில் இறங்க, ‘துண்டைக் காணோம் துணியைக் காணோம்’ என்று பின்னங்கால் பிடரியில் பட ஓடி விட்டனர் அந்த நால்வரும். 

அவர்கள் ஓடியதும், திரும்பிக் காரைப் பார்த்தவன் திகைத்தான். ஏனெனில், பின் இருக்கையில் சற்று முன் தான் அமர வைத்திருந்த ஆதவனைக்   காணவில்லை. அதில் நெற்றிச் சுருக்கியவன், “உள்ள தானே உக்கார வச்சேன்… எங்க போனான்..?” என்றபடி வெளியே சற்றும் முற்றும் தேடி பார்க்க, எங்கும் தென்படவில்லை. அப்பொழுது அவனது மொபைல் ஒலிக்க, எடுத்துக் காதுக்குக் கொடுத்தவன், “அகத்தியன் ஸ்பீக்கிங்…” என்றபடி காரின் உள்ளே அமர்ந்து, போனில் பேசியவாறு காரைக் கிளப்பிச் சென்று விட்டான்.

வருவாள்…

****