Views 770 

தேவதை 10…

வேர்க்க விறுவிறுக்க மூச்சு வாங்கியபடி வீட்டுக்கு வந்தவளைப் பார்த்த ஆஷா, “அமி என்னாச்சு..? எதுக்கு இப்படி ஓடி வரே..? யாராவது உன்னைத் துரத்துறாங்களா..?” என்று கேட்டவள், அப்பொழுது தான், தங்கையின் கையில் இருந்த கட்டைப் பார்த்து பதறி, “அமி கையில என்ன கட்டு..? அன்னைக்குக் கால்ல அடிபட்டு இருந்துச்சு. இன்னைக்குக் கையில… என்ன நடந்ததுன்னு சொல்லுடா…” என்று பதற்றத்துடன் கேட்டாள்.

“அக்கா, அம்மா எங்கே..?” என்று கேட்டாள் ஆத்மிகா.

“அம்மா பக்கத்துத் தெருவுல ஒருத்தரைப் பார்க்க போயிருக்காங்க…” என்று கூறியவள், “நான் கேட்டதுக்கு மொதல்ல பதில் சொல்லு…” என்று கேட்டாள்.

“எல்லாம் அப்புறம் சொல்றேன்க்கா. இப்ப எனக்கு டயர்டா இருக்கு. கொஞ்ச நேரம் படுக்கிறேன். என் கைக் காயத்தைப் பத்தி அம்மாகிட்ட ஏதும் சொல்லாதே…”  என்றவள், தனது அறைக்குள் சென்று மறைந்தாள்.

வெளியே நின்றிருந்த ஆஷாவோ, “ம்பச்… எப்போதும் போலப் போன இடத்துல ஏதோ நடந்திருக்கும். அதான் இப்படி வந்துருக்கா.  சரி, பத்திரமாக வந்துட்டா. அது போதும். என்ன விஷயம்னு அப்புறம் கேட்டுக் கொள்ளலாம்…” என்று எண்ணியவள், தனது வேலையைக் கவனிக்கச் சென்று விட்டாள்.

தனது அறைக்குள் வந்து கட்டிலில் படுத்துக் கண் மூடிக் கொண்டாள் ஆத்மிகா. அவளது மூடிய கண்களுக்குள் கம்பீரமாக வந்து நின்று புன்னகைத்தான் அகத்தியன்.

அதில் படக்கென்று கண் திறந்து எழுந்து அமர்ந்து கொண்டாள். அவள் மனம் படபடவென அடித்துக் கொண்டது. கூடவே, காரில் வைத்து அவன் சொன்ன வார்த்தைகள் ஆத்மிகாவைச் சுற்றி சுற்றி வந்தன.

‘அவங்க சொன்னது உண்மையா இருக்குமா இல்ல விளையாட்டுக்குச் சொன்னங்களா..? ஆனா, அவங்க கண்கள் பொய் சொல்லலையே..!! இது… இது சாத்தியம் இல்லன்னு அவங்களுக்குத் தெரியும் தானே..? அப்போ எப்படி என்னை லவ் பண்றாங்க..?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள். 

அன்று கடற்கரையில் வைத்து, தனக்குத் காலில் அடிப்பட்டதில் அவன் துடித்து ஓடி வந்து சுற்றி ஆட்கள் இருப்பதைப் பொருட்படுத்தாமல், தன் காலைப் பிடித்தது… அதன்பிறகு அந்தப் போலீசிடமிருந்து என்னைக் காப்பாற்றி, தனக்குத் தைரியம் சொன்னது… இன்று நடந்தது எல்லாம் நினைத்தவளுக்கோ, அவன் தன்னை எவ்வளவு விரும்புகிறான் என்று புரிந்தது. ஆனால் இது சாத்தியமில்லையே..? அதற்குத் தனக்குத் தகுதியும் இல்லையே..!!  ‘இப்படி ஒரு அன்பு கிடைத்தும், அதை அனுபவிக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே..? எதற்காகக் கடவுள் எனக்கு இப்படி ஒரு தண்டனையைக் கொடுத்தார்..?’ என்று தலையணையில் முகம் புதைத்து அழுதாள் ஆத்மிகா. 

அவளது மனமோ, சில வருடங்களுக்கு முன், பின்னோக்கிச் சென்றது.  

“அம்மா… ஒண்ணு இவன் இங்க இருக்கணும். இல்ல நாங்க இருக்கணும். ரெண்டுல ஒண்ணு இப்பவே முடிவு பண்ணுங்க….” என்று வீடே அதிர கத்தினாள் நிவேதா.

“இவன் பண்ற காரியத்தால ஸ்கூல்ல எங்க மானமே போகுதுமா. அப்பா வந்ததும் சொல்லி இவனை ஏதாவது பண்ண சொல்லுங்க…”  என்று முகம் சுளித்தான் தினேஷ்.

“இன்னைக்கு என்னடா பண்ணி தொலைச்சே..? இவங்க ரெண்டு பேரையும் பெத்த வயித்துல தானேடா உன்னையும் பெத்தேன், நீ மட்டும் ஏன்டா இப்படி இருக்கே..?” என்று ஆதவனைப் போட்டு அடித்தாள் அவனின் தாய்.

ஆதவனோ, “அம்மா… எனக்குப் பசங்க கூட உக்கார பிடிக்கலம்மா. எல்லோரும் என்னைத் தொட்டு தொட்டுப் பேசுறாங்க. அதான் பொண்ணுங்க பக்கத்துல போய் உக்காந்தேன்…” என்று கேவி கேவி அழுதான் பதிமூன்று வயது ஆதவன். 

ஆதவன் அந்த வீட்டில் கடைக்குட்டி. ஒரு அக்கா, ஒரு அண்ணன் என இருவருக்கும் செல்லத் தம்பியாகப் பிறந்தவன். கடந்த சில மாதங்களாகவே ஆதவனின் நடவடிக்கையில் சில மாற்றம் தென்படுகிறது.  அதாவது, ‘பேண்ட் சட்டை போட மாட்டேன், பொட்டு வச்சிப்பேன், வளையல் போட்டுப்பேன், கொலுசு வேணும்’ என்று அவனது அக்காவிடம்  அவளின் பொருளைக் கேட்டு  அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

அதை அவள் அன்னையிடம் தெரிவிக்க, அவனது அன்னைக்கோ திக்கென்று தான் இருந்தது. எத்தனையோ இடங்களில் இது போல் நடக்கிறது என்று கேள்விப்பட்டு இருக்கிறாள். ஆனால், அது தனது வீட்டில் என்றதும் கலங்கி நின்றாள் அந்தத் தாய்.  இருந்தும் “இதெல்லாம் தப்பு கண்ணா…” என்று எடுத்துச் சொல்லி மகனைத் திருத்த முயன்றாள். ஆனால், ஆதவன் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே போனானே தவிர, திருந்தவில்லை.

அவன் ஏற்கனவே அவனது அன்னையின் சாயலில் இருந்ததால், இயற்கையிலேயே மூக்கும் முழியுமாக லட்சணமாக அழகான பெண் போல்தான் இருப்பான். அவனது அன்னை கூட, “ஆதவா… நீ மட்டும் பொம்பளை புள்ளையா பிறந்திருந்தா அம்புட்டு அழகா இருப்பே..!!” என்று அடிக்கடி கூறுவாள்.

ஆனால், நிஜமாகவே அவன் பெண் போலவே மாற நினைக்கும் போது, எந்தத் தாய் தான் சம்மதிப்பாள்..?

அழும் மகனைச் சமாதானம் செய்யாமல், “நீங்க ரெண்டு பேரும் போங்க, நான் அவன் கிட்ட பேசுறேன்” என்றவள், சின்ன மகனை அவனது அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அவனோ, “அம்மா… யாருமே என்னைப் புரிஞ்சிக்க மாட்டேன்கிறாங்கன்னா, நீங்களுமா..? ஆதவா நீ மட்டும் பொம்பளை புள்ளையா பிறந்திருந்தா அம்புட்டு அழகா இருப்பேனு… அடிக்கடி சொல்லுவியே… இப்ப மட்டும் ஏன்மா என்னை அடிக்கிறே..?” என் அழுது கொண்டே கேட்டான். 

தன் சேலை முந்தானையால் மகனின் முகத்தைத் துடைத்த அவனது தாய், அவனைக் கட்டிலில் அமர வைத்து, “ராஜா… நீ இப்படிலாம் நடந்துகிட்டா எல்லோரும் உன்னைக் கிண்டல் பண்ணுவாங்கடா. சிரிப்பாங்க. உன்னால ஆம்பள புள்ள மாதிரி இருக்க முடியலன்னாலும், அப்படி இருக்க முயற்சியாவது பண்ணுப்பா…” என்று கெஞ்சினாள்.

“என்னால முடியலம்மா. நானும் முயற்சி செஞ்சி பார்த்தேன். சாத்தியமா முடியல…” என்று கூறவும், மேற்கொண்டு பேசாமல், “சரி, நீ படுத்துக்கோ” என்றவர் வெளியே வந்தார்.

அதே நேரம், ஆதவனின் தந்தை வேலையில் இருந்து வீட்டுக்கு வந்தார். அவர் வந்ததும் தான் தாமதம்..!! நிவேதாவும், தினேசும் தந்தையிடம் இன்று நடந்தவற்றைக் கூறி விட்டு, இதற்கு ஏதாவது செய்யுமாறு கேட்டுக் கொண்டு தங்களது அறைக்குள் சென்று விட்டனர்.

அதில் பல்லைக் கடித்தவர், “எங்கடி அவன்..?” என்று கோபத்தில் சின்ன மகனைக் கேட்டார். 

“அவன் இவ்வளவு நேரம் அழுதுட்டு இருந்து இப்ப தான் தூங்குறான். எதுனாலும் காலையில் அவன் கிட்ட பேசுங்க…” என்று அப்போதைக்குக் கணவனிடம் இருந்து மகனைக் காப்பாற்றினார். 

நடு இரவில் ஆதவனுக்குத் தாகம் எடுக்கக் கண் விழித்தவன், மணியைப் பார்க்க, அது இரண்டு என்று காட்டியது.  பக்கத்தில் டேபிளில் தண்ணீர் இருக்கா என்று பார்த்து விட்டு, அங்கு இல்லை என்றதும் அறையை விட்டு வெளியே வந்தான். கிச்சனுக்குச் சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்தவனின் காதில், அவனது தாய் தந்தையரின் அறையில் இருந்து வந்த பேச்சுக் குரல் கேட்டு அப்படியே நின்று விட்டான்.

“என்னங்க வேணாம்… என்ன இருந்தாலும் அவன் நாம பெத்த புள்ள. அவனுக்கு இப்படி ஆகும்னு அவனுக்கு எப்படிங்க தெரியும்..? தெரிஞ்சா பிறந்தான்..? அவன் எங்கங்க போவான்..? எது எப்படியோ அவன் நம்ம கூடவே இருக்கட்டும்…” 

“நான் சொல்றதைக் கேளு தனம். நமக்கு இவன் மட்டும் மகன் இல்ல. இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க. அவங்க வாழ்க்கையையும் பார்க்கணும். நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் வீட்லயும் சரி, பையனுக்குப் பொண்ணு எடுக்கப் போற வீட்லயும் சரி, இதை எப்படி எடுத்துப்பாங்க..?  இவன் ஒருத்தனுக்காக, நல்லா இருக்கிற மத்த ரெண்டு பேர் வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்க போறியா..? நல்லா யோசிச்சிக்கோ” என்று கூறிய  ஆதவனின் தந்தை படுத்து விட்டார்.

தனமோ, தன் மகனை நினைத்து அழுதபடி அறையில் இருந்து வெளியே வந்தவர், ஆதவன் நிற்பதைப் பார்த்து, சட்டெனக் கண்களைத் துடைத்துக் கொண்டு, “ஆதவா… தூங்காம இங்க என்ன பண்றே..? போ, போய்ப் படுத்துக்க” என்றவர் கிச்சனுக்குள் செல்ல,

அவனோ, “அம்மா… அப்பா எனக்குச் சாப்பாட்டுல விஷம் வைக்க சொன்னாரா..?” என்று கேட்டான்.

வருவாள்…

*****