Views 1,282 

தீபப்ரியா வழங்கும் (குறுநாவல்)

“அவள் ஒரு தேவதை”

தேவதை 1

“அக்கா… அக்கா… எனக்கு சாக்கி வாங்கித் தரியா..?” என்று கேட்டது அந்தக் குழந்தை.

“உனக்கு இல்லாததாடா தங்கம்..? நான் வாங்கித் தரேன்” என்றாள் அவள். அவள் பெயர் ஆத்மிகா. பிரம்மன் படைத்த அழகு பதுமை. அவளுக்கு அதிர்ந்து பேசத் தெரியாது. மிகவும் பொறுமைசாலி. தன் அன்பை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் குணம் உடையவள். அவளது வீட்டில், இவள், இரண்டாவது பெண். அவள் வீட்டினருக்கு மட்டும் அல்ல, அங்குச் சுற்றி இருக்கும் சுற்றத்தாருக்கும் அவள் செல்ல மகள் தான்..!! எம்.காம் படித்து விட்டு இப்பொழுது வேலை தேடிக் கொண்டிருக்கிறாள்.

“அக்கா கடை வந்தாச்சு” என்று ஆத்மிகாவின் கைப் பிடித்து நடந்து வந்த மூன்று வயது குழந்தை சுஜி, தனக்கு சாக்லேட் கிடைக்கும் என்ற ஆனந்தத்தில், துள்ளிக் குதித்தது.

அந்தக் குழந்தை சுஜியை அவர்கள் வீட்டில் தத்தெடுத்து வளர்க்கிறார்கள்.  மூன்று வருடம் முன்பு, அவர்களின் வீட்டின் அருகே இருந்த குப்பை தொட்டியில், பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில், யாரோ தூக்கி வீசி விட்டு சென்று இருந்தனர். நாய்கள் அதைக் குறி வைத்துத் தாக்க காத்திருக்கும் வேளையில், அவ்வழியாகச் சென்ற ஆத்மிகா, நாய்களைத் துரத்தி விட்டு அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டாள். 

“ஏய் சுஜி… மெதுவா… விழுந்து வைக்கப் போறே” என்று செல்லமாக அதட்டியபடி குழந்தைக்கு முதலில் சாக்லேட் ஒன்றை வாங்கிக் கொடுத்து விட்டு, பின்பு தான் வாங்க வேண்டிய பொருட்களைக் கேட்டு வாங்கிக் கொண்டவள், 

“வீட்டுக்குப் போலாமா சுஜி..?” என்று குழந்தையிடம் கேட்டு விட்டுத் திரும்பி நடந்தாள். அப்பொழுது அவள் கண்ணில் பட்டது, பளபளப்பான கருப்பு நிற ஆடி கார் ஒன்று..!! அதைப் பார்த்ததும் அவளது முகம் மாற, ‘உடனே இங்கிருந்து செல்ல வேண்டும்’ என்றெண்ணியவள், குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு வேகமாக நடந்தாள்.

அவளது நடைக்கு ஈடு கொடுத்து, அந்தக் கருப்பு நிற ஆடி காரும், அவளைப் பின்தொடர்ந்து வந்தது. அதை உணர்ந்த ஆத்மிகா, அடுத்து வந்த சிறு சந்தில் நுழைந்து, வேறு வழியில் தனது வீட்டுக்குச் சென்றிருந்தாள். அவளைப் பின்தொடர்ந்து வந்த அந்தக் காரோ ஏமாற்றத்துடன் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டது.

வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவளைக் கண்ட அவளது அக்கா ஆஷா, “என்ன அமி… எதுக்கு இப்படி ஓடி வர்ற…?” என்று கேட்டாள். 

“அ..அது இன்னைக்கு ஒரு இன்டெர்வியூ இருக்கு சொன்னேன்லக்கா. அது பத்து மணிக்கு. நான் மறந்தே போய்ட்டேன். இப்ப தான் ஞாபகம் வந்தது. மணி இப்பவே ஒன்பது ஆச்சு. அதான் கடையில இருந்து வேகமாக ஓடி வரேன். சரிக்கா, இந்தா…” என்று கையில் இருந்த பொருட்களைத் தன் அக்காவிடம் கொடுத்து விட்டு, “சுஜி குட்டி, அக்கா ரெடி ஆகிட்டு வரேன்டா தங்கம்…” என்று குழந்தையிடம் கூறியவள், தனது அறைக்குள் நுழைந்தாள்.

அடுத்தப் பத்தாம் நிமிடம், அந்த அறையில் இருந்து, கருநீல வண்ணத்தில் ஆங்காங்கே வெள்ளை நிற சின்னச் சின்ன ரோஜாக்களை அள்ளித் தெளித்த அழகான சுடிதாரில், தேவதையென வெளியே வந்தாள் ஆத்மிகா. அவளது சிவந்த நிறத்திற்கு அந்த உடை எடுப்பாக இருந்தது. 

 “அமி ரெடி ஆகிட்டியா..? பைல் எல்லாம் எடுத்துக்கிட்டியா..?” என்று கேட்டுக் கொண்டே வந்த அவளது தமக்கையோ, தங்கையின் தலையில் நெருக்கித் தொடுத்த மல்லிகை மொட்டை வைத்து விட, அது ஆத்மிகாவிற்குக் கூடுதல் அழகு சேர்த்தது. 

“நான் போய்ட்டு வரேன்க்கா. அம்மா வந்ததும் சொல்லிருங்க…” என்றவள், தான் வாங்கிக் கொடுத்த சாக்லேட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தை சுஜியின் கன்னத்தில் முத்தமிட்டு, வீட்டில் இருந்து வெளியே வந்து வீதியில் நடந்தாள்.

ரோட்டில் எதிர்பட்டவர்களுக்குத் தன் புன்னகையைப் பரிசாகக் கொடுத்து விட்டு நடந்தவள், தங்களது தெருவின் கடைசியில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்தாள்.

“பாலாஜி அண்ணா… சைதாப்பேட்டை வரைக்கும் போகணும். போலாமாண்ணா…?” என்று அங்கு நின்றிருந்த ஆட்டோ ஒன்றின் முன் சென்று கேட்டாள்.

“அமி பாப்பா… இன்டெர்வியூக்கு போறியா..? வா, நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன். ஏறி உக்காரு…” என்று அவர் கூறவும், ஏறி அமர்ந்தாள்.

ஆட்டோ சிறிது தான் தூரம் சென்றிருக்கும். அப்போதுதான் கவனித்தாள், இடது பக்கத்தில் ஆட்டோவின் வேகத்துக்கு ஈடு கொடுத்து, மெதுவாக வந்து கொண்டிருந்த ஆடி காரை..!!

‘இது அந்தக் காரா, இல்ல வேறயா…? ம்பச்…  எந்தக் கருப்பு கலர் காரைப் பார்த்தாலும் அதையே பார்க்கிற மாதிரி இருக்கு..!!’ என்று தனக்குள் சலித்துக் கொண்டாள் ஆத்மிகா.

சைதாப்பேட்டையில் ஒரு மிகப் பெரிய கம்பெனியின் முன் வந்து நின்றது ஆட்டோ.

“பாப்பா… இங்கேயா இன்டெர்வியூ..? நல்ல பெரிய கம்பெனி. வேலை கிடைச்சா எனக்கு ட்ரீட் தரணும். சரியா…?” என்றார் ஆட்டோ ஓட்டுநர்

“கண்டிப்பாண்ணா..!! முதல் ட்ரீட் உங்களுக்குத் தான்…” என்று கூறியவளின் மனமோ, ‘வேலை கிடைச்சா தானே…!!’ என விரக்தியாகச் சொல்லிக் கொண்டதை, அந்தப் பாலாஜி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஏனெனில், அவளும் கடந்த ஒரு வருடமாக ஒவ்வொரு கம்பெனியாக வேலை கேட்டு இன்டெர்வியூக்குச் செல்கிறாள். ஆனால் வேலை தான் கிடைத்தபாடில்லை..!!

இன்றும், அது போல் உள்ளே சென்ற ஆத்மிகா அரைமணி நேரத்தில் வெளியே வந்தாள். அவளது முகமோ கன்றிச் சிவந்து வெளிறிப் போய் இருக்க, கண்களோ கலங்கி இருந்தது. 

கைக்குட்டை கொண்டு முகத்தையும் கண்ணீரையும் துடைத்தவள், அங்கிருந்து வெளியே ரோட்டுக்கு வந்து நின்றாள். அவளது மனதில் ஆயிரம் கேள்விகள் முளைத்தது. அதில் முதல் கேள்வி, ‘இப்பொழுதே, இந்த இடத்திலேயே, ஏதாவது ஒரு வாகனத்தின் முன் விழுந்து செத்து விட்டால் என்ன..?’ என்றுதான்..!! ஆம்… அப்படி ஒரு எண்ணம் அந்த நிமிடம் ஆத்மிகாவின் மனதில் தோன்றி இருந்தது. அதைச் செயல்படுத்தும் முயற்சியாக அவள் ஒரு எட்டு தான் எடுத்து வைத்திருப்பாள். அப்பொழுது சரக்கென்று  அவள் முன் வந்து நின்றது அந்தக் கருப்பு நிற ஆடி வாகனம்..!!

வருவாள்…

*****

1