Views 548 

அழகி 3
சித்திரமாக நான் கண்ட
ஓவியம்,
உயிர்க்கொண்டு நடந்து வந்தது,
என் எதிரில் என் அழகியாக…

“லச்சு லச்சு கூப்பிட்டியா?” என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் அன்பரசு.

மகனின் குரலில் சமையல் அறையில் இருந்து வெளியே வந்த லட்சுமி “டேய் எதுக்குடா கத்துற? இங்க தானே இருக்கேன்” என்றவர்,

“ஆமாடா அப்போவே பைக் சத்தம் கேட்டுச்சே, ஆனா ஆளைக் காணோமே? அதான் கூப்பிட்டேன். சரி வீட்டுக்குள்ள வர இவ்ளோ நேரமா? வெளியே பேச்சி சத்தம் கேட்டுச்சு. அப்படி யார்கிட்ட டா பேசிட்டு இருந்த?” என்று தாய் கேட்டதும்.

‘ஆஹா அவ திட்டுனது அம்மாக்கு கேட்டுருக்குமோ?’ என யோசித்தவன், பின் சமாளிக்கும் விதமாக

“லச்சு நான் யார் கூடவும் பேசலையே. பைக் நிறுத்திட்டு அக்கம் பக்கம் பாக்காம நல்ல பிள்ளையா உள்ளே வந்துட்டேன்” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அன்பரசு கூறினான்.

‘யாரு நீயி நல்ல பிள்ளையா உள்ளே வந்தே? அதை நான் நம்பணும். அடேய் உன்னை நான் அறிவேன்’ என்பது போல் மகனை மேலும் கீழும் லட்சுமி பார்த்து வைத்தார்

தாய் தன்னைக் கண்டு கொண்டதில், அசடு வழிந்தவன் பின் சோஃபாவில் அமர்ந்து தனது ஷூவை கழட்டிக்கொண்டே “அடப் போ லச்சு” என்றபடி வெளியே நடந்ததைச் சொன்னவன்.

“லச்சு பொண்ணா அது? சொர்ணாக்கா மாதிரி கத்துது. அவ வர்றது கவனிக்காம சகதி அடிச்சிட்டேன். அதுக்கு இப்படியா கத்துவாங்க? நல்லவேளை அப்போ அந்தப் பக்கம் யாரும் இல்லை. இல்லன்னா என் மானம் போயிருக்கும்” என்றவன்,

“லச்சு எனக்கும் ஒரு நாள் வரும். அப்போ இருக்கு அவளுக்கு. இப்போ என்னை அவ திட்டுனதை விட ரெண்டு மடங்கா அவளுக்குத் திருப்பிக் கொடுப்பேன்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னவன்.

“ஆமா எதிர்த்த வீடு இவ்ளோ நாளா பூட்டித்தானே இருந்தது? இப்போ புதுசா ஆளுங்கல்லாம் வந்திருக்காங்க போல?” என்று தாயிடம் கேட்டான்.

அவரோ தன் மகனை வேற்று கிரகவாசி போல் பார்த்துக் கொண்டிருந்தார். ஏனென்றால் அவனை யாராவது மரியாதை இல்லாமல் பேசினால், அது யாராக இருந்தாலும் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவான். அதனால்தான் அந்தப் பெண் திட்டியதைப் பார்த்தும், மகன் எப்படியும் அந்தப் பெண்ணிற்குத் திருப்பிப் பதிலடி கொடுப்பான் என்று நினைத்தவர் கிச்சனில் வேலையைக் கவனிக்கச் சென்றார். அப்படி இருக்க எதிர்வீட்டுப் பெண் திட்டுவதைக் கேட்டுக் கொண்டு வந்துருக்கிறான் என்றால்? என்று முழித்தபடி யோசனையில் நின்றார்.

தன்னைப் பார்த்து முழித்துக் கொண்டிருக்கும் அன்னையைப் பார்த்தவன், அவர் தன்னிடம் வேறு ஏதும் கேள்வி கேட்கும் முன் அவரின் கவனத்தைத் திசை திருப்பும் பொருட்டு

“லச்சு நான் வந்து எவ்ளோ நேரம் ஆகுது? நீ என்னடான்னா என்கிட்ட கதை கேட்டுட்டு இருக்க? காஃபின்கிற பேர்ல சுடு தண்ணி ஒன்னு கொடுப்பியே அதை என் கண்ணுல கொஞ்சம் காட்டுறது” என்று கிண்டல் செய்தவனின் தலையில் நங்கென்று கொட்டியவர்,

“நான் போடுற காஃபி உனக்குச் சுடுதண்ணியா? இரு உண்மையிலேயே சுடு தண்ணி கொண்டு வந்து தரேன்” என்று முறைத்து விட்டு கிச்சனுக்குள் நுழையவும்

“லச்சு அந்தச் சுடுதண்ணில கொஞ்சம் சீனி, பால், கொஞ்சம் டிகாசன் மட்டும் சேர்த்துக்கோ போதும்” என்று கூறியவன் சிரித்துக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்தான்..

தனது கப்போர்டைத் திறந்து அங்கிருந்த புகைப்படங்களில் ஒன்றை கையில் எடுத்து அதில் சிரித்துக் கொண்டிருந்த ஜீவனின் கன்னத்தில் தன் விரல் தொட்டு கோடிழுத்தவன் “அடியேய் நீ அழகி தான்டி” என்று கண்ணிலும் குரலிலும் காதல் பொங்க ரசனையுடன் சொன்ன அன்பரசு

அந்தப் புகை படத்திற்குத் தன் இதழால் பரிசளித்து விட்டுப் பின்பு அதைக் கப்போர்ட்டிலேயே வைத்து மூடியவன் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வந்தான்.

அவன் முன் காஃபியை நீட்டிய லட்சுமி “அரசு உன்கிட்ட பேசணும்” என்றார் உறுதியுடன்..

அன்னை கொடுத்த காஃபியை வாங்கி ஒரு வாய் குடித்துப் பார்த்தவன்

“ஆகா லச்சு ச்சும்மா சொல்ல கூடாது இன்னைக்குக் காஃபி பிரமாதம். ஆமா உன் வீட்டுக்காரர் எங்கே ஆளே காணோம்? வினோ காலேஜில் இருந்து வந்துட்டானா?” என்று தந்தை மற்றும் தம்பியை பற்றிக் கேட்ட அன்பரசு,

“லச்சு நான் மொட்டை மாடிக்குப் போறேன். காஃபியை ரசிச்சு குடிச்சிட்டு வரேன். நீ நைட் சமையல் ரெடி பண்ணு” என்றவன் தாயின் குரலில் தெரிந்த உறுதியில் ‘இன்று சிக்கினால் தான் அம்பேல்’ என்று நினைத்தவன், அவரைத் தவிர்த்து விட்டு மொட்டை மாடிக்கு சென்று விட்டான்.

தன்னைத் தவிர்த்துச் செல்லும் மகனைக் கோபத்துடன், அவன் சென்ற திசையைப் பார்த்தவாறு லட்சுமி நின்றிருக்க.

அப்பொழுது வெளியே சென்றிருந்த கரிகாலன், வீட்டினுள் நுழையும் போதே “லச்சுக் கொஞ்சம் சுடுதண்ணி கொடும்மா” என்று கேட்டுக்கொண்டே சோஃபாவில் அமர்ந்தார்.

கணவரின் குரலில் நினைவுக்கு வந்தவர் தன் இடுப்பில் கைவைத்து “என்ன கிண்டலா?” என்று தன் கணவரை முறைத்துப் பார்த்தார்.

நேற்றில் இருந்து கரிகாலனுக்கு ஜலதோஷம். ஆதலால் சுடுதண்ணீர் கேட்டார். ‘சுடு தண்ணி கேட்டது ஒரு தப்பா? எதுக்கு இப்போ என் பொண்டாட்டி முறைக்கிறான்னு தெரியலையே’ என்று உள்ளுக்குள் குழம்பித் தான் போனார். இருந்தும் சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,

“லட்சுமா எதுக்கு இப்போ இவ்ளோ சூடா இருக்க? சரி விடு சுடுதண்ணி வேணாம். வெளியே அலைஞ்சிட்டு வந்தது டயர்டா இருக்கு. காஃபி கொடேன்” என்று கேட்டவர், பாவம் ஏன் கேட்டோம் என்று சிறிது நேரத்தில் நொந்து விட்டார்.

“இங்க ஒருத்தி முப்பத்தி எட்டு வருசமா வீட்ல வேலைகளை எல்லாம் ஒன்டி ஆளா பார்த்துட்டு, சமையல் கட்டுல சமைச்சு கொட்டிட்டு இருக்கேன். என்னைக்காவது டயர்டா இருக்குன்னு சொல்லிருப்பேனா? இல்ல சமைக்காமத் தான் இருந்திருக்கேனா? ஆனா வெளியே போய் ஹாயா சுத்திட்டு வந்தது உங்களுக்கு டயர்டா இருக்கு ம்ம்ம்” என்று மூச்சு வாங்க பேசிய மனைவியிடம் சென்ற கரிகாலன்.

“லட்சுமா இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படிப் பேசுறே? வா வந்து உட்காரு” என்று மனைவியை அமர வைத்து விட்டு, கிச்சனுக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்து தன் மனைவியிடம் கொடுத்து இதைக் குடி என்றார்.

ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் குடித்தவர் திடீரென்று “எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்?” என்று மொட்டையாகக் கணவரிடம் லட்சுமி கேட்கவும் வெலவெலத்துப் போனார் கரிகாலன்.

ஏனென்றால் அவர் இப்பொழுது செய்து விட்டு வந்த காரியம் அப்படி. (சிகெரெட்) எதையும் பொறுத்துக் கொள்ளும் லட்சுமி தன் கணவரிடம் உள்ள இந்தப் பழக்கத்தை மட்டும் பொறுத்துக் கொள்ள மாட்டார்.

ஒரு தடவை மனைவியிடம் மாட்டிக்கொள்ள, ஒருவாரம் திண்ணையில் குளிரில் படுக்க வைத்து விட்டார் லட்சுமி. அதில் இருந்து கவனமாக இருப்பார் கரிகாலன்.

“அது வந்து லச்சு அது நான்” என்று திக்கித் திணறி ஏதோ கூற வந்தவரைத் தடுத்த லட்சுமி,

“இன்னைக்கு உங்க பையனை ஒரு முடிவு சொல்ல சொல்லுங்க. ஒண்ணு அவனா ஒரு முடிவுக்கு வரணும். இல்ல நான் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படணும். இந்த வீட்டுக்கு உடனடியா ஒரு மருமக வரணும் சொல்லிட்டேன்” என்று லட்சுமி உறுதியுடன் கூறவும்.

அதைக் கேட்டப் பிறகுதான் கரிகாலனுக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது… ‘ஒரு நிமிஷத்துல எனக்கு அட்டாக் வரவச்சிருப்பா’ என்று மனதில் நினைத்தவர், மனைவியின் அருகே அமர்ந்து.

“இதோ பார் லச்சு. இவ்ளோ நாள் பொறுமையா இருந்தல்ல, இன்னும் கொஞ்சநாள் பொறுத்துக்கோ. சீக்கிரமே எல்லாம் கூடி வரும். அவன் கிட்ட நீ கோபப்பட்டுப் பேசினேன்னு வை அப்புறம் யாராலையும் ஒன்னும் பண்ண முடியாது. நான் சொல்றது உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்” என்றவர்,

“அவன் போக்கிலே விடுமா. என்னதான் நடக்குதுன்னு நாமளும் வேடிக்கைப் பார்ப்போம். நீ ஸ்டெடியா இருந்தா தானே நானும் தைரியமா இருக்க முடியும். நீ தானே இந்த வீட்டின் ஆணிவேர். நீயே கலங்கலாமா?” என்று ஒரு ஐஸ் பேக்ட்ரியே மனைவியின் தலையில் தூக்கி வைத்தார்.

கணவரின் புகழ்ச்சியில் குளிர்ந்து போனார் லட்சுமி. அதனால் அவர் பேச நினைத்த மற்ற விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அப்படிக் கூர்ந்து கவனித்திருந்தால் தெரிந்திருக்கும் அவர் கூறியதின் அர்த்தம்.

அதன்பின் ஒன்றும் சொல்லாமல் எழுந்த லட்சுமி “நீங்க சுடுதண்ணி கேட்டிங்களே இருங்க காஃபி கொண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு உற்சாகமாக உள்ளே செல்ல..

‘நீ காஃபி கொடுத்தாலே அது சுடு தண்ணி மாதிரி தானே இருக்கும் லச்சு’ என்று தன்னையும் அறியாமல் சொல்ல போனவர் கடைசி நேரத்தில் வாயை கப்பென்று இறுக மூடிக்கொண்டார்.

இவ்வளவு நேரம் தாய் தந்தை பேச்சைக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்த இளைய மகன் வினோத் அடக்க மாட்டாமல் விழுந்து விழுந்து சிரித்தான்.

அவனை முறைத்தவர் “என்னடா மவனே சிரிப்பு? என் பொழப்பு உனக்குச் சிரிப்பா இருக்கா?”

“இல்ல டாட்… ” என்றவன் மீண்டும் அடக்கமாட்டாமல் சிரித்தான்.

கரிகாலன் தன் சின்ன மகனை ஏதோ கூற வாயெடுக்கவும்.. அப்பொழுது வெளியே வாசலில்..

“யோவ் வீட்ல யாருய்யா? வாய்யா வெளியே” என்று ஒரு இளம் பெண்ணின் அதிகாரக் குரல் கேட்க .. எவ அவ? என்று ஸ்லோ மோசனில் அவர் திரும்பி வாசலைப் பார்த்தார் கரிகாலன்.

வினோத்தோ “யாரு எங்க அப்பாவை மரியாதை இல்லாம கூப்பிடுறது?” என்று வரிந்து கட்டிக் கொண்டு எழுந்தான்.

“டேய் போதும்டா மவனே. நீ இரு நான் போய்ப் பார்க்கிறேன்” என்றவர் எழுந்து வாசலுக்கு வந்தார்.

அங்குக் கோபத்தில் மூச்சு வாங்க நின்ற எதிர்வீட்டுப் பெண்ணைக் கண்டு நெற்றிச் சுருக்கினார். ஆனால் அந்தப் பெண்ணோ அவரின் முன் சொடக்குப் போட்டு “ஹலோ நீ யாரு மேன்? அந்தக் கரிகாலன் எங்கே அவரை வரச் சொல்லு?” என்று அலட்சியமாகச் சொல்ல..

அந்தப் பெண்ணை மேலும் கீழும் பார்த்தவர், “நீ யாருமா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது …

வெளியே சென்ற தந்தையைத் தேடி வந்த வினோத்தும், அவனின் பின்னே காஃபி கப்புடன் வந்த லட்சுமியும்..

“என்னாச்சுங்க? எதுக்கு இந்தப் பொண்ணு எட்டூருக்குக் கேக்குற மாதிரி இந்தக் கத்து கத்துது?” என்று அந்தப் பெண்ணைக் கேள்வியாக நோக்கியவர்,

“யாரும்மா நீ? சொல்லு உனக்கு என்ன வேணும்?” என்று லட்சுமி பொறுமையாகக் கேட்டார். ஆனால் அவளோ,

“ம்ம்ம் உங்க வீட்டுக்கு மருமகளாகனும். அதான் உங்க வீட்டு முன்னாடி நின்னுட்டுக் கத்திட்டு இருக்கேன்” என்று நக்கல் குரலில் கூற,

அதைக் கேட்ட லட்சுமி “ஹான்” வென்று வாயைப் பிளந்தார்.

“ஹலோ ஓல்ட் லேடி குளோஸ் தி டோர்” என்று லட்சமியிடம் கூறிய அந்தப் பெண், கரிகாலனிடம்

“எனக்கு ஒரு நியாயம் கிடைக்கணும் சார். அது வரைக்கும் நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்” என்று அங்கு நின்ற மூவரையும் பார்த்து முறைத்தாள்.

அன்பரசின் வீடும், அந்தப் பெண்ணின் வீடும், சற்று ஒதுக்குப் புறமாக இருந்தது. மற்ற வீடுகள் எல்லாம் சற்றுத் தள்ளி இருந்ததால், தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு இவர்கள் சாதாரணமாகப் பேசிக் கொண்டு இருப்பது போல் தோன்றும்…

“என்னம்மா நியாயம் கிடைக்கணும்? அதைச் சொல்லு” என்று பொறுமையாகவே கேட்டார் கரிகாலன்.

“அதுவா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னன்னா ஒருத்தன் என் மேல சகதி அடிச்சிட்டு உங்க வீட்டுக்குள்ள போனான். இப்போ என்னன்னா இந்த அநியாயம் நடந்திருக்கு. நாங்க புதுசா குடிவந்து இருக்கோம். நீங்க என்னவேணா பண்ணுவீங்க நாங்க அமைதியா இருக்கணுமா? கேட்க ஆள் இல்லன்னு நினைச்சிட்டீங்களா” என்று அந்தப் பெண் சத்தம் போட்டு எகிறினாள்.

கரிகாலனோ திரும்பி வினோவைப் பார்த்து நீயா சேர் அடிச்சே? என்பது போல் பார்த்தார்.

அவனோ “அயோ டாடி நான் இல்ல” என்றதும் திரும்பி அந்தப் பொண்ணைப் பார்த்து.

“சரிமா அத அப்புறம் பார்ப்போம். ஏதோ நியாயம் கேட்டியே அது என்ன? சொல்லு”

“அதுவா இங்க வாங்க” என்று தன் வீட்டின் அருகே அவள் சென்றாள்.

தன் கணவரின் காதில் “என்னங்க அந்தப் பொண்ணு இப்படிக் கத்துது? நீங்க இப்படிப் பொறுமையா பேசிட்டு இருக்கீங்க” என்று முறைக்க.

“லச்சுமா, அப்படி என்னதான் நியாயம் கேக்குதுன்னு போய்ய் பார்த்தா தெரிஞ்சிட்டுப் போகுது” என்றவர் அந்தப் பெண்ணின் வீட்டருகே சென்றார்.

அந்தப் பெண்ணோ “இங்க பாருங்க” என்று ஒரு சிறு துண்டு காகிதத்தைக் காண்பித்து.

“இந்தத் துண்டு பேப்பர் காலையில நான் பார்க்கும் போது உங்க வீட்டு வாசல்ல கிடந்தது. இப்போ எங்க வீட்டு வாசல்ல கிடக்குது. இது எப்படி இங்க வந்தது?” என்று எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் என்ற ரேஞ்சில் நியாயம் கேட்கவும்.

“அடங்கோ” என்பது போல் அந்தப் பேப்பரை விரோதியைப் போல் மூவரும் பார்த்துவிட்டு, அந்தப் பொண்ணைப் பார்த்து லூசா என்பது போல் பார்த்தனர்.

அவளோ “ஹலோ என்ன லுக்கு? இத நான் சும்மா விடப் போறது இல்ல, விடவும் மாட்டேன்” என்று கத்திக் கொண்டிருக்கும் போது…

“அக்கா இங்க என்ன பண்ணுற?” என்று கேட்டுக் கொண்டே அந்த வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த பெண் ஒருத்தி, சண்டைக்கு இழுத்துக் கொண்டிருந்த பெண்ணைப் பிடித்தாள்.

“ஏய் சது விடுடி, என்ன விடு” என்று தங்கையின் பிடியில் இருந்து அந்தப் பெண் திமிறினாள்.

அவளைத் திட்டுவதற்கு லட்சுமி வாய் திறக்கவும்

“இங்க என்ன சத்தம்?” என்றுபடி வந்தான் அன்பரசு. இவ்வளவு நேரம் மொட்டை மாடியில் நின்று அந்தப் பெண்ணின் அக்கப்போரை பார்த்துகொண்டு தானே இருந்தான்.

வந்தவன் கத்திக் கொண்டிருந்த பெண்ணின் தங்கையைப் பார்த்து முறைத்து விட்டு, பின் கத்தும் பெண்ணிடம்..

“இது என்ன சந்தை கடைன்னு நினைச்சீங்களா? இப்படிச் சத்தம் போடுறீங்க. இப்போ என்ன எங்க வீட்டு வாசல்ல கிடந்த அந்தப் பேப்பர் துண்டு உங்க வீட்டு வாசல்ல வந்து விழுந்துடுச்சி இதானே உங்க பிரச்சனை?”

“தெரியுதுல்ல. அது எப்படி எங்க வீட்டு வாசலுக்கு வரலாம்?” என்று மீண்டும் ஆரம்பித்தாள்.

“ம்ம்ம்ம் அதுக்குக் கால் முளைத்து வந்திருக்கும்” என்று நக்கல் செய்தவன்,

“அடிக்கிற காத்துக்கு நீயே எங்க வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்தாலும் ஆச்சர்யப்படுறதுகில்ல, இதுல பேப்பர் பத்தி பேசுறியா”

இவர்களின் வாக்குவாதத்தை வியப்புடன் பார்த்திருந்தார் அன்பரசின் தாய்.

“என்னது நான் உங்க வீட்ல வந்து உக்காருவேனா? பகல் கனவு காணாதீங்க சார். நடக்கிற கதையா பேசுங்க. இன்னொரு தடவை இப்படி நடந்தது ”

அவளின் பேச்சைச் சட்டை செய்யாமல் “மதி இது உங்க அக்காவா? கூட்டிட்டு போ. நான் இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” என்றவன்.

தன் குடும்பத்தாரிடம் திரும்பி “இங்க என்ன மாரியம்மன் கோவில்ல கூழா ஊத்துறாங்க? போங்க வீட்டுக்குள்ள” என்று சத்தம் போட்டவன் திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்து மீண்டும் முறைத்தான்.

மதியோ “ப்ளீஸ்” என்பது போல் அன்பரசைப் பார்க்க. அவனோ மதியைப் பார்த்துச் கண் சிமிட்டி விட்டு தனது வீட்டின் உள்ளே சென்று விட்டான்.

அன்பரசின் சிரிப்பில் சந்தோஷப்பட்ட சதுர்மதி “அக்கா வா வீட்டுக்குள்ள போகலாம்” என்று சொல்லவும்.

அன்பரசு சென்றதும் தன் தங்கையிடம், “ஹா ஹா ஏய் மதி எப்படி என் பெர்பாமென்ஸ்?” என்று தன் சுடிதாரில் இல்லாத காலரைத் தூக்கிக் கேட்டாள் மதியின் அக்கா அன்பழகி.

“ஹா ஹா சூப்பருக்கா” என்று மதியும் தன் அக்காக்கு ஹைஃபை கொடுத்தபடிச் சிரிக்க.

இருவரும் தங்களது வீட்டின் உள்ளே சென்று விட்டனர்..

வீட்டுக்குள் வந்த பின்பும் அக்கா தங்கை இருவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஹா ஹா அக்கா பாவம்க்கா அங்கிள்”

“என்னாலையும் முடியலடி ஹா ஹா” என்று சிரித்த அன்பழகி, “பாவம்தான். என்ன பண்ண? நமக்குக் கிடைச்சிருக்கு ஒரு பாவப்பட்ட ஜீவன் அங்கிள் தானே”

“சரிக்கா அடுத்து என்ன பிளான்? சரி நீ யோசி. நான் போய்க் காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்ற சதுர்மதி கிச்சனுள் சென்றாள்.

அன்பழகி தனது போனை எடுத்து சில எண்களை அழுத்தி விட்டு அந்தப் பக்கம் எடுப்பதற்காகக் காத்திருந்தாள்.

இரண்டு ரிங்கில் அங்கு எடுக்கப்பட்டு “அன்புமா” என்று பாசத்துடன் அழைக்க, இவ்வளவு நேரம் இருந்த சந்தோஷம் மறைய, அவரது அன்புமா என்ற அழைப்பில் உடைந்து அழ ஆரம்பித்தாள் அன்பழகி.

அந்தப்பக்கம் இருந்த நபரோ அன்பழகியின் அழுகுரலில் “அன்பு” என்று பதற, இங்குத் தமக்கையின் அழுகுரலில் கிச்சனில் இருந்து வேகமாக வெளியே வந்த சதுர்மதி,

“அக்கா எதுக்கு அழுற? போன்ல யாரு?” என்று அன்பழகியைப் பிடித்தபடி அவளின் கையில் இருந்த போனை வாங்கினாள்.

அன்பழகியோ தங்கையிடம்.. “சது என்னால முடியலடி” என்று சொல்லி மீண்டும் அழுதாள்

தன் கையில் இருந்த போனில் யார் எண் என்று பார்த்தவளுக்குத் தனது அக்கா எதற்கு அழுகிறாள் என்று தெரிந்ததும்,

அக்காவைச் சகஜ நிலைக்குக் கொண்டு வரும் பொருட்டுச் சதுர்மதியோ அவளிடம்,

“அக்கா என்னாலையும் தான் முடியல. நான் என்ன அழுதுட்டா இருக்கேன்? எனக்குச் சிரிப்புத் தான் வருது” என்றவள் உண்மையில் வந்த சிரிப்பை அடக்க முயற்சிக்க.

தங்கையை முறைத்தவள், “அடியே நான் அழுதுட்டு இருக்கேன். உனக்குச் சிரிப்பு வருதா? போடி அங்கிட்டு” என்று குழந்தை போல் முகத்தைத் திருப்பினாள் அன்பழகி.

“சரி சரி நான் சிரிக்கல போதுமா” என்று பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு கையில் இருந்த போனில் பேச ஆரம்பித்தாள்.

“ஹலோ யாருங்க? நீங்க எதுக்கு எங்க அக்காவை அழ வச்சீங்க?” என்று முயன்று குரலில் கோபத்தை வரவழைத்துக் கேட்டாள் சதுர்மதி.

அந்தப் பக்கமோ “ம்ம் எனக்கு வேண்டுதல் பாரு, அன்புமாவை அழ வைக்க. அடியேய் அப்ரெண்டிஸ்களா வந்தேன் ரெண்டுபேரும் காலி, சொல்லிட்டேன்” என்று சொல்லவும்.

சதுர்மதியால் சிரிப்பை அடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க..

“அடியேய் சிரிக்கிறத நிறுத்து மொதல்ல. அவ அழுறா நீ சிரிக்கிறே. என்ன நடக்குது அங்கே? எதுக்குச் சிரிக்கிறன்னு சொல்லிட்டுத் தான் சிரியேண்டி” என்று அந்தப் பக்கம் கடுகடுக்க.

“சொல்றேன் சொல்றேன்” என்றவள் சற்று நேரத்திற்கு முன் வெளியே நடந்த துண்டு பேப்பர் சண்டையைச் சொல்லவும்,

அந்தப் பக்கம் இருந்து உடனே வந்தது பதில் “அட பக்கீஸ். உங்க லொள்ளுக்கு அளவே இல்லாமப் போச்சு” என்று சொன்ன அந்த நபரும் கற்பனையில் அந்தக் காட்சிய கொண்டு வந்து சிரிக்க.

“ஹா ஹா உங்களுக்கும் சிரிப்பு வருதுல்ல?” என்று சதுர்மதி கேட்கவும்.

“என் நேரம்டி. சிரிங்க, சிரிங்க யானைக்கு ஒரு காலம் வந்தா, பூனைக்கும் ஒரு காலம் வரும். அப்போ வச்சிக்கிறோம் எங்க கச்சேரியை” என்று போனில் அவர் சொல்லவும்

“ஹா ஹா ஹலோ மேடம். அதை அப்படிச் சொல்லக் கூடாது. பூனைக்கு ஒரு காலம் வந்தா யானைக்கும் ஒரு காலம் வரும் சொல்லணும்”

“அடிங்க நான் குண்டா இருக்கேன்னு சிம்பாலிக்கா சொல்றியா?”

“இல்லையே நான் நேரடியா தான் சொல்றேன்”

“இருங்கடிஸ். இன்னும் ஒரு மாசத்துல அங்க வரேன். அப்போ இருக்கு உங்களுக்கு” என்று சொல்லவும்..

“உங்களுக்காகத் தான் காத்திருக்கிறோம்” என்ற சதுர்மதி, அவரிடம் “எங்க அக்கா கொஞ்சம் ஓவரா பேசிட்டாளோன்னு எனக்குத் தோணுது” என்றாள் சீரியஸான குரலில்

இவ்வளவு நேரம் குறும்பாய் பேசிய சதுர்மதியின் குரல் மாறி ஒலிக்கவும், தானும் விளையாட்டைக் கைவிட்டு.

“அதெல்லாம் ஒன்னும் இல்லடா. எல்லாம் நம்ம பிளான் தானே. நீங்க வொர்ரி பண்ணிக்காம உங்க விளையாட்டைத் தொடருங்க. நானும் சீக்கிரமே வரேன்டா” என்று கூறி அந்தப் பக்கம் போனை வைத்து விட்டார் அவர்.

தானும் போனை கட் செய்து விட்டு அக்காவிடம் வந்தவள்,

“அக்கா வா சாப்பிடலாம். சாப்பிட்டுத் தூங்கு” என்று அன்பழகியை அழைத்தாள் சதுர்மதி.

“இல்ல மதி எனக்குப் பசிக்கல. நீ சாப்பிடு. நான் அப்புறம் சாப்பிடுறேன்” என்றவள் ஹாலில் ஜன்னலை ஒட்டி இருந்த சோஃபாவில் போய் அமர்ந்து கொண்டு,

“நீங்க மட்டும் இல்ல நானும் இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் அரசு” என்று மனதினுள் சொல்லிக் கொண்டவள் எதிர் வீட்டை கண் இமைக்க மறந்து பார்க்க ஆரம்பித்தாள்.

“ஹ்ம்மம்” என்று பெருமூச்சை வெளியேற்றிய சதுர்மதி, இப்போதைக்கு அக்கா எழ மாட்டாள் என்பது புரிய, ‘கொஞ்ச நேரம் கழித்து வந்து சாப்பிட வைப்போம்’ என்று நினைத்தவள், தனது அறைக்குள் நுழைந்தாள்.

            ********

[sharethis-reaction-buttons]